எலுமிச்சையில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பொருள் அதிகம் உள்ளது. அதுமட்டுமின்றி எலுமிச்சையில் உள்ள ப்ளீச்சிங் தன்மையால், இது பல்வேறு அழகு பராமரிப்பு பொருட்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் எலுமிச்சை விலைக் குறைவில் கிடைப்பதால், கடைகளில் விற்கப்படும் விலை உயர்ந்த க்ரீம்களை வாங்கி சரும அழகை அதிகரிப்பதற்கு பதிலாக, எலுமிச்சையைக் கொண்டு வீட்டிலேயே எளிமையான சில ஃபேஸ் பேக், ஹேர் மாஸ்க், ஸ்கரப் போன்றவற்றை செய்து, அழகைப் பராமரிக்கலாம்.
சரி, இப்போது எலுமிச்சையைக் கொண்டு எப்படி அழகைப் பராமரிப்பது என்று பார்ப்போம்.
முகப்பரு மற்றும் கரும்புள்ளிகளைப் போக்க…
பாதி எலுமிச்சையைப் பிழிந்து, அதில் சிறிது தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி செய்து வருவதால், சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் முகப்பருக்கள் நீங்கிவிடும்.
வெள்ளையான பற்களுக்கு…
எலுமிச்சையில் உள்ள ப்ளீச்சிங் தன்மையினால், இதனை பற்களில் பயன்படுத்தினால், பற்களில் உள்ள மஞ்சள் கறைகள் அகலும். அதிலும் எலுமிச்சை சாற்றில், பேக்கிங் சோடா சிறிது சேர்த்து கலந்து, பற்களில் தடவி தேய்த்து உடனே கழுவி, பின் பிரஷ் செய்ய வேண்டும். இதனால் பற்களில் உள்ள மஞ்சள் கறைகள் நீங்கி, பற்கள் வெண்மையாகும்.
பட்டுப்போன்ற கூந்தலுக்கு…
முட்டையின் வெள்ளைக்கருவுடன் சிறிது எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, சூரிய ஒளி படும் இடத்தில் அமர்ந்து, தலைக்கு தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் அலசினால், கூந்தல் பட்டுப் போன்று மென்மையாக இருக்கும்.
பொலிவான சருமத்திற்கு…
எலுமிச்சை சாற்றினை தேங்காய் நீருடன் சேர்த்து கலந்து, சருமத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ச்சியான நீரில் அலசினால், சருமத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் நீங்கி, சருமம் பொலிவோடு மின்னும்.
பொடுகைப் போக்க…
4 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகருடன், 4 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் படும்படி நன்கு தடவி மசாஜ் செய்து, வெதுவெதுப்பான நீரில் அலச வேண்டும். இதனால் பொடுகுத் தொல்லை மற்றும் ஸ்கால்ப்பில் ஏதேனும் தொற்றுகள் ஏற்பட்டிருந்தாலும் நீங்கும்.
நகங்கள் மஞ்சளாகவோ அல்லது அடிக்கடி உடையவோ செய்தால், நகங்களை வலிமையாக்க, எலுமிச்சை சாற்றில் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, அக்கலவையில் 7-10 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதனால் நகங்கள் பளிச்சென்று வெள்ளையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.