காலை உணவைத் தவிர்ப்பவர்களுக்கு உடற்பருமன் அதிகரிக்கத் தான் செய்யுமே தவிர குறையாது.
‘எக்காரணத்தைக் கொண்டும் காலை உணவை மட்டும் தவிர்க்கவே கூடாது’ என்று முன்னோர்கள் சொல்லக் கேட்டிருப்போம். இரவு முழுவதும் ஓய்வெடுக்கும் நம்முடைய உடலுக்கு காலையில் போதுமான ஊட்டச்சத்து மிக்க உணவை அளிக்க வேண்டியது அவசியம்.
காலை உணவைத் தவிர்த்தால் முக்கிய ஊட்டச்சத்துகளை இழக்க நேரிடும் என அமெரிக்காவின் ஓஹியோ பல்கலைகழகத்தின் சமீபத்திய ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் ஓஹியோ மாநில பல்கலைக்கழகம் 30,000-க்கும் மேற்பட்டவர்களிடத்தில் அவர்களின் ஊட்டச்சத்து குறித்து ஆய்வு செய்தது.
இதில் காலை உணவைத் தவிர்ப்பது- பாலில் உள்ள கால்சியம், பழத்தில் வைட்டமின் சி, தானியங்களில் காணப்படும் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் ஆகியவை உடலுக்குக் கிடைப்பதைத் தடுக்கிறது
மேலும் காலையில்தான் சரியான ஊட்டச்சத்து மிக்க உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இல்லையெனில் உணவு எடுத்துக்கொள்வதில் நீண்ட இடைவெளி ஏற்படும். இதனால் உடல்நலன் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என ஆய்வாளர் கிறிஸ்டோபர் டெய்லர் தெரிவித்தார்.
அமெரிக்க வேளாண்மைத் துறையின் சமீபத்திய உணவு வழிகாட்டுதல்களின்படி, கால்சியம், பொட்டாசியம், நார்ச்சத்து, வைட்டமின் டி, இரும்புச் சத்து ஆகியவை அவசியம் எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய உணவுகள் என்று வரையறுக்கப்பட்டுள்ளது.
காலை உணவைத் தவிர்த்தால் ஊட்டச்சத்து குறைபாடு, நீரழிவு நோய், இதய நோய், உடற்பருமன், ஹார்மோன் மாற்றங்கள் உள்ளிட்டவை ஏற்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனவே, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் காலை உணவாக அதிக ஊட்டச்சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள். அவசரத்தில் காலை உணவைத் தவிர்ப்பது பிற்காலத்தில் மிகப்பெரும் பிரச்னைக்கு வழிவகுத்துவிடும் என்பதை மறக்க வேண்டாம்!