ஒருவரின் அழகை அதிகரிக்க ஃபேஸ் க்ரீம்கள், ஃபேஸ் மாஸ்க்குகள், லோசன், ஃபேஷியல் போன்றவைகள் மட்டும் போதாது, உண்ணும் உணவுகளின் மீதும் அக்கறை காட்ட வேண்டும். ஏனெனில் உணவுகளின் மூலம் உடல் ஆரோக்கியமாக இருக்கும். அப்படி உடல் ஆரோக்கியமாக இருந்தால், அது சருமத்தில் நன்கு பிரதிபலிக்கும்.
சிலர் பார்க்க மிகவும் அழகாக இருப்பார்கள். அவர்களிடம் சென்று உங்கள் அழகிற்கான ரகசியம் என்னவென்று கேட்டால், அவர்கள் நான் ஒன்றும் செய்வதில்லை தினமும் தண்ணீர் அதிகம் குடிப்பேன் என்று சொல்வார்கள். ஆனால் அதை நீங்கள் நம்பமாட்டீர்கள். இருப்பினும் அது தான் உண்மை. இதுப்போன்று அழகை அதிகரிக்க பல உணவுப் பொருட்கள் உள்ளன. அவற்றை உங்கள் அன்றாட உணவில் சிறிது சிறிதாக சேர்த்து வந்தால், நிச்சயம் நீங்கள் அழகாக ஜொலிக்கலாம்.
தக்காளி
தக்காளியில் லைகோபைன் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிக அளவில் நிறைந்துள்ளது. எனவே இவற்றை உட்கொண்டு வந்தால், அவை சருமத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். மேலும் இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், சரும செல்கள் பாதிப்படைவதைத் தடுத்து, சருமத்தின் அழகு இன்னும் அதிகரிக்க உதவும்.
மாட்டிறைச்சி
மாட்டிறைச்சியில் புரோட்டீன் அதிகம் உள்ளது. இதனை வாரம் ஒருமுறை உட்கொண்டு வந்தால், சருமத்திற்கு தேவையான சத்துக்கள் கிடைத்து, இளமையை தக்க வைக்கலாம்.
க்ரீன் டீ
தினமும் ஒரு கப் க்ரீன் டீ குடித்து வந்தால், உடல் எடை குறைவதுடன், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளால் சரும செல்கள் பாதுகாக்கப்பட்டு, உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி, சருமம் பொலிவோடு இருக்கும்.
வால்நட்ஸ்
வால்நட்ஸில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் வளமாக நிறைந்துள்ளது. எனவே இவற்றை தினமும் சிறிது உட்கொண்டு வந்தால், அவை பருக்கள், சரும சுருக்கம் போன்றவற்றை தடுத்து, சருமத்திற்கு போதிய பாதுகாப்பு அளித்து, சருமத்தை அழகாக பொலிவோடு வைத்துக் கொள்ள உதவும்.
தயிர்
சரும ஆரோக்கியத்தைப் பாதுகாக்க தயிர் மிகவும் முக்கியமானது. ஏனெனில் இதில் புரோபயோடிக் என்னும் நல்ல பாக்டீரியா உள்ளது. இது சருமம் வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்களை உறிஞ்ச உதவுகிறது. இதனால் சருமத்தில் பருக்கள், அரிப்பு போன்றவை ஏற்படாமல் தடுத்து, சருமத்தை இளமையுடன் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
பீன்ஸ்
உங்களுக்கு அழகாக சருமம் வேண்டுமா? அப்படியெனில் பீன்ஸ் சாப்பிடுங்கள். ஏனெனில் பீன்ஸில் சருமத்திற்கு தேவையான சிலிகான் அதிகம் உள்ளது. இதனால் சருமம் பட்டுப்போன்று இருக்கும்.