தாய்மை. இந்த உலகத்தின் ஆகச்சிறந்த அழகு! உலகத் தாய்ப்பால் வாரம், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் ஒன்று முதல் ஏழு தினங்கள் கொண்டாடப்படுகிறது. யுனெஸ்கோவும், உலக சுகாதார நிறுவனமும் பிரபஞ்சத்தின் மத்தியில் நின்றுகொண்டு `தாய்ப்பால். தாய்ப்பால்’ எனத் தலையில் அடித்துக் கதறுகின்றன. மருத்துவமனைகள், ஆட்சியர் அலுவலகங்கள், சமுதாயக் கூடங்கள், கல்லூரிகள், பள்ளிகள் எனக் களமிறங்கி விழிப்பு உணர்வை ஏற்படுத்தச் சொல்கின்றன. அமெரிக்கன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸும் (The Amercian Academy of Pediatrics) தாய்ப்பால் புகட்டுதலை மிகவும் தீர்க்கமாக வலியுறுத்துகிறது.
நாம் என்ன செய்கிறோம்? ‘இதெற்கெல்லாமா நோட்டீஸ் கொடுப்பீர்கள்?’ எனச் சலித்துக்கொண்டு துண்டுச்சீட்டுகளைச் சுருட்டி தெருவோரம் வீசிவிட்டுப் போகிறோம். ஒரு கணம் சிந்தித்துப் பார்த்தால் புரியும். ஒரு தாயிடம், அவள் குழந்தைக்கு, அவள் பாலை புகட்ட, அவளிடமே கெஞ்சிக்கொண்டிருப்பது எத்தனை அபத்தம் என்பது! இது உலகளாவிய உணர்வுப் பிரச்னை.
2015-ம் ஆண்டின் கணக்கெடுப்பில் ஐந்து தாய்மார்களில் நான்கு பேர் தாய்ப்பால் கொடுப்பதில்லை என்ற பேரதிர்ச்சியை யுனெஸ்கோ முன்வைக்கிறது. கல்வியில் மிகவும் பின்தங்கிய சட்டீஸ்கர் போன்ற மாநிலங்களில்கூட 50% பேர் தாய்ப்பால் புகட்டுகின்றனர். ஆனால், தமிழகத்தில் 18.8%, குறிப்பாகச் சென்னையில் 7% தாய்மார்கள் மட்டுமே தங்கள் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் ஊட்டுவதாகச் சொல்லும் புள்ளிவிவரங்கள் அச்சத்தை ஏற்படுத்துகின்றன.
தாய்மை வரம்; தாய்ப்பால் வரப்பிரசாதம். கருத்தரித்த நாள் முதல் அந்த சிசுவுக்காகவே தாயின் உடலும் மனமும் பழக்கப்படுகிறது. சுகப்பிரசவம் என்றால் அரை மணி நேரத்துக்குள்ளும், அறுவை சிகிச்சை என்றால் ஒன்றரை மணி நேரத்துக்குள்ளும் தாய்ப்பால் புகட்ட வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். குழந்தை பிறந்தவுடன் அதன் ஸ்பரிசத்தைத் தேடும் தாயின் தவிப்பும், அவளின் பால் வீச்சத்துக்கு, கதகதப்புக்கு ஏங்கும் குழந்தையின் துடிப்பும் அற்புதம்! அம்மாவுக்கும் குழந்தைக்குமான உளவியல் ரீதியான தீண்டல், அரவணைப்பு, பாதுகாப்பு போன்ற அனுசரணைகளை எப்படி செயற்கைப் பாலில் எதிர்பார்க்க முடியும்?
‘ஊர் கூடித் தேர் இழுக்கிறீர்களே, அப்படி என்னதான் இருக்கிறது தாய்ப்பாலில்?’ என்ற கேள்வியை முன் வைத்தால், இவைதான் பதில். குழந்தை பிறந்து முதல் இரண்டு நாட்கள் சுரக்கும் ‘கொலாஸ்ட்ரம்’ எனும் சீம்பாலில்தான் குழந்தைக்கு நோயை அண்டவிடாத ஆன்டிபாடீஸ் (ANTIBODIES) தடுப்பு மருந்து இருக்கிறது. குழந்தைக்கு ஆறு மாதங்கள் கண்டிப்பாகத் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். அதற்குப் பிறகு ஒரு வருடமாவது தாய்ப்பாலுடன் சேர்ந்த இணை உணவு அவசியம். குழந்தையின் மூளை வளர்ச்சிக்கும் நரம்பு மண்டலத்துக்கும் வலு சேர்க்கக்கூடிய, எளிதில் செரிக்கும் புரதம், கொழுப்பு, கால்சியம், இரும்பு, மாவுச்சத்து இவற்றோடு விட்டமின்களும் தாய்ப்பாலில் அதிகம் நிறைந்துள்ளன.
குழந்தைக்கு ஏற்படும் ஊட்டச்சத்துக் குறைபாடுகளில் இருந்து தாய்ப்பாலில் உள்ள சத்துகள் காப்பதோடு, டயாபடிஸ் மற்றும் ஆஸ்துமா போன்ற நோய்களை அண்டவிடாமல் தடுக்கும் எனவும் மருத்துவம் கூறுகிறது. அத்துடன் தாய்ப்பால் கொடுக்கும் காலகட்டம் கர்ப்பத்தடைக்கான நாட்களாகவும் கருதப்படுகிறது. தாய்ப்பால் புகட்டும் பெண்களுக்கு மார்பகப்புற்று மற்றும் சினைப்பை புற்றுநோய் வரும் தன்மையும் தடுக்கப்படும் என்கிறது இந்திய மருத்துவக்கழக ஆராய்ச்சி.
இன்றைய இளம் தாய்கள், ‘நாங்கள் வேலைக்குச் செல்கிறோம். இதெல்லாம் சரிப்பட்டு வராது!’ என்கிறார்கள். அரசு வேலைக்குச் செல்பவர்களுக்கு அரசாங்கம், அதிகப்படியான பேறுகால விடுமுறைச் சலுகைகள் வழங்குகிறது. தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள், ‘எங்களுக்கு ஓரிரு மாதங்கள்தான் விடுமுறை. பிரெஸ்ட் பீடிங்கா. நோ சான்ஸ்!’ என்கிறார்கள். மனம் புறக்கணிக்கிறபோது, அறிவியல் அவசரமாக ஆட்கொள்கிறது. ‘அம்மாக்களே. அப்படியெல்லாம் சொல்லாதீர்கள்.’ என்ற பதற்றத்தில், பிரெஸ்ட் பம்ப்புகள் மூலம் தாய்ப்பாலை எடுத்து குளிர்சாதனப் பெட்டிகளில் பதப்படுத்தி குழந்தைகளுக்குக் கொடுக்கலாம் எனக் கண்டுபிடித்துவிட்டார்கள். அறை வெப்பநிலையில் 8 மணி நேரமும், ஃபிரீசரில் 24 மணிநேரமும் வைக்க லாம். மேலும் மைனஸ் 20 டிகிரி சென்டிகிரேடில் மூன்று மாதங்கள் வரைகூட பதப்படுத்தி அதன் தன்மை மாறாமல் குழந்தைக்குக் கொடுக்கலாம் என்கிறார்கள். ரத்த வங்கி போல தாய்ப்பால் வங்கியும் மெள்ள நடை முறைக்கு வருகிறது.
இத்தனை இணக்கமான சூழல் இருந்தும், நஞ்சேறிய பவுடர்களைக் கொஞ்சம் கொஞ்சமாக ஊட்டி தரிசான வாரிசுகளை உருவாக்கி வருகிறோமே ஏன்? வெளியில் சொல்ல முடியாத அந்த நெருடலில்தான் குழந்தைகளின் இறப்பு விகிதம் கூடிக்கொண்டே போகிறது. தாய்ப்பால் கொடுத்தால் அழகு குறைந்துவிடும் என இன்றைய இளம் பெண்களில் பெரும்பாலானவர்கள் கங்கணம் கட்டிவிட்டார்கள். எத்தனை வேதனை இது? இந்த அறியாமையை எப்படிப் போக்குவது என்பதில் மருத்துவம் உறைந்து நிற்கிறது.
போர்க்களத்தில் போரிட்டு வீர மரணம் எதிர்கொள்ளும் தறுவாயில், வீரர்களின் உயிர் பிழைக்க தங்கள் மார்பகக் காம்புகளைப் பிழிந்து பால் ஊட்டிய சங்க இலக்கியத் தாய்களின் ஈரப்பதம் எங்கே போயிற்று? தாய்ப்பால் என்பது தாயின் அன்பு, அவளது அறிவு, மடைமாற்றம் செய்யப்படும் மூதாதையரின் குணம் அனைத்தும் அடங்கியது. இப்படி அணு அணுவாய் அனுபவித்து குழந்தைக்குத் தாயாகி மகிழும் நிலையான அழகைவிட, நிறப்பூச்சுகளில் மயங்கி, சுருக்கம் விழக் காத்திருக்கும் நீர் வற்றிய வெற்றுத் தோல் எப்படி அழகாகும்?
என் குழந்தையின் எதிர்காலத்துக்காகத்தான் உழைக்கிறேன் என இரவும் பகலுமாக அதைப் பட்டினிபோட்டு ஆலாய்ப் பறக்கிறீர்கள். செடிக்கு நீர் ஊற்றாமல் மரம் வளரக் காத்திருப்பது மூடத்தனம். உங்கள் சம்பளத்தை விட, சேமிப்பைவிட, பேங்க் பேலன்ஸ் நிறைவதைவிட, உங்களை மட்டுமே நம்பி பூமிக்கு வந்த அந்தப் பச்சிளம் குழந்தையின் வயிறு நிறைவதுதான் முக்கியம். உங்கள் மார்பில் ஊறும் பால், அதன் உணவு மட்டுமல்ல, உணர்வும் மருந்தும்!