அதிக தூக்கமின்மை, வயிற்றில் புண், இரத்த அழுத்தம், அதிகம் வெயிலில் அலைந்து திரிவது, வேளாவேளைக்கு உணவு அருந்தாமை, மற்றும் பலவித மனக் கவலை போன்றவற்றாலும், முக்குற்றங்களான வாத, பித்த, கபம் என்ற மூன்று நிலைகளில் பித்த நீரானது அதிகப்படும்போது அது இரத்தத்தில் கலந்து காமாலை நோயாக மாறுகிறது.
உஷ்ணச்சூடு இவைகளாலும் பித்தம் அதிகரித்து காமாலை நோயைத் தோற்றுவிக்கிறது. மேலும் மலச்சிக்கல், மன அமைதியின்மை, வீண்பயம், திடீர் உணர்ச்சிவசப்படுதல், கோபம் இவைகளாலும் பித்தம் அதிகரித்து காமாலை நோய் உண்டாவதற்கு வாய்ப்பாகிறது.
அதோடு கர்ப்ப காலங்களில் உணவின் மேல் நாட்டம் கொண்டு அதிகம் சாப்பிடுவதால் செரியாமை, ஏற்பட்டு அதானால் பித்த நீர் மிகுந்து, காமாலை நோய் தோன்றுகிறது. இரத்தத்தில் இரும்புச்சத்து குறைவதால் பித்தம் அதிகரிப்பதோடு இரத்த அணுக்களும் குறைந்து உடலை மஞ்சள் காமாலை நோய் தொற்றுகிறது.
மேற்கண்ட காரணங்களால் கர்ப்பிணிப் பெண்களுக்கு காமாலை நோய் ஏற்பட்டு தாயையும், சேயையும் பாதிக்கிறது. பித்த நீர் மிகுவதற்கு முக்கியக் காரணம் ஈரல்தான். கர்ப்பிணிப் பெண்களுக்கு ஈரல் பாதிப்புற்றால் குழந்தைகள் நலமின்றி பிறக்க வாய்ப்புள்ளது. இந்த ஈரல் பாதிப்பை ஈரல் உணக்கநோய் என்று கூறுவர்.
பொதுவாக மஞ்சள் காமாலை நோய்க்கு ஈரலைப் பலப்படுத்துவதற்கான மருந்துகள் உட்கொள்ளும் போது மஞ்சள் காமாலை நோயின் பாதிப்பிலிருந்து விடுபட வைக்கிறது. பிற மருத்துவ முறைகளிலும் ஈரல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு மருந்துகள் இல்லாததால் ஈரல் உணக்க நோயை குணப்படுத்த வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது.
ஈரலைப் பலப்படுத்தினாலே மஞ்சள் காமாலை நோயின் பாதிப்பிலிருந்து விடுபடலாம். குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் பழ வகைகளை சாறு எடுத்து அதிகமாக உட்கொள்வது நல்லது. அதிக காரம், புளிப்பு, இனிப்பு போன்றவற்றை தவிர்த்து மிதமான காரம், புளிப்பு, இனிப்பு கலந்து சாப்பிட வேண்டும். கர்ப்பிணிப் பெண்களுக்கு தேவையான ஓய்வு அவசியம்.
மெதுவான நடைப்பயிற்சி, அதனுடன் முடிந்த அளவுக்கு வீட்டு வேலைகள் செய்து வந்தால், காமாலை நோயிலிருந்து விடுபட்டு ஆரோக்கியமான குழந்தையை சுகப் பிரசவமாக பெற்றுக்கொள்ளலாம். உணவில் கீரை வகைகளை அதிகம் சேர்த்து பித்தநீர் அதிகரிப்பைத் தடுத்துவிடலாம். கர்ப்பிணிப் பெண்கள் கருவுற்ற 3ம் மாதத்திலிருந்து பிரசவம் ஆகும் வரை தினமும் மதிய உணவுக்கு முன் கீழ்காணும் சூப்பை செய்து அருந்துவது நல்லது.
கீரை (சிறுகீரை, அரைக்கீரை,
தண்டுக்கீரை, பொன்னாங்கண்ணி
இவற்றில் ஏதாவது ஒன்று) – 1 கைப்பிடி
கொத்தமல்லி இலை – 10 கிராம்
கறிவேப்பிலை – 3 இணுக்கு
கேரட் – 10 கிராம்
சீரகம் – 5 கிராம்
இஞ்சி – 1 துண்டு
பூண்டு – 3 பல்
சின்ன வெங்காயம் – 3
மிளகு – 5
இவற்றை சேர்த்து சூப் செய்து தினமும் அருந்தி வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டி நீண்ட ஆயுளைக் கொடுக்கும்.