தேவையானவை:
கடலைப்பருப்பு – ஒரு கப், வெல்லம் – முக்கால் கப், தேங்காய் துருவல் – கால் கப், ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன், மைதா – ஒண்ணே கால் கப், உப்பு, மஞ்சள்தூள் – தலா கால் டீஸ்பூன், நெய் – தேவையான அளவு.
செய்முறை:
கடலைப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். மைதாவை உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து கெட்டியாக பிசைந்து ஒரு டீஸ்பூன் நெய் தடவி மூடி 2 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய கடலைப்பருப்பை காய் பக்குவத்தில் வேக வைத்து வடிய வைக்கவும். ஆறியதும், அதனுடன் தேங்காய் துருவல் சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.
வெல்லத்தை சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி, திரும்பவும் நன்றாக அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். அதில் அரைத்து வைத்துள்ள கடலைப்பருப்பு கலவை, ஏலக்காய்த்தூளை சேர்த்து கிளறவும். கெட்டியாக வரும் பக்குவத்தில் சிறிது நெய் விட்டு, நன்றாக கிளறி இறக்கவும். பிசைந்த மைதாவை சிறிது எடுத்து அப்பளம் போல் செய்து கடலைப்பருப்பு பூரணத்தை வைத்து மூடி, அப்பள குழவியால் போளி போல் தட்டி தோசைக்கல்லில் போட்டு இருபுறமும் நெய் விட்டு சுட்டெடுக்கவும்.