உப்பு சப்பில்லாத விஷயத்தை மண் மாதிரி இருப்பதாகச் சொல்வோம். ஆனால் அழகு விஷயத்தில் மண்ணை அப்படி அலட்சியப்படுத்த முடியாது. அங்கே மண்ணின் மகத்துவம் மிகப்பெரியது. தலையில் ஆரம்பித்து பாதம் வரை அனைத்து வகை அழகு சிகிச்சைகளுக்கும் இன்று மண்ணை பயன் படுத்துகிறார்கள். முன்னனி நடிகைகள் மற்றும் நடிகர்கள் பலரும் மண் சிகிச்சை மூலமே அழகையும், இளமையையும் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது ஷ்பெஷல் தகவல்.
இந்த மண் சிகிச்சை ரொம்பப் பழமையானது. ஆயுர்வேத அழகு சிகிச்சைகள்ல அதுக்குத் தனியிடம் உண்டு. மண் சிகிச்சைங்கிறது வெறும் அழகுக்கு மட்டுமில்லாம ஆரோக்கியத்துக்கும் உதவக்கூடியது என்கிறார் பிரபல அழகுக்கலை நிபுணர் ஹசீனா சையத்.
பொதுவா மண் சட்டில சமைச்சு சாப்பிட்டா ருசியாவும், ஆரோக்யமாவும் இருக்கும்னு சொல்லறதுண்டு. மண்ணுக்குனு தனி குணம் உண்டு. அழகுக்காக உபயோகிக்கிற மண், பூமியில குறிப்பிட்ட ஆழத்துலேர்ந்து எடுக்கப்பட்டு, சுத்திகரிக்கப்படுகிறது. களிமண், செம்மண், ஆழ்கடல்லேர்ந்து எடுக்கக்கூடிய மண். இப்படி அழகு சிகிச்சைகளுக்கான மண்ல பல வகைகள் உண்டு.
முல்தானி மிட்டி தெரியாத பெண்களே இருக்க மாட்டாங்க. அதுவும் ஒரு வகையான மண்தான். ஆழ்கடல் மண்ல கால்சியம், பொட்டாசியம், சோடியம், அயோடின்னு நிறைய சத்துகள் உள்ளதால, அது எல்லாவித சருமப் பிரச்சனைகளுக்கும் தீர்வு தரும். கயோலின்னு ஒரு வகையான மண் இருக்கு. இது சருமத்துல உள்ள இறந்த செல்களை நீக்கறதுல அற்புதமானது. மலைப்பகு திலேர்ந்து எடுக்கக் கூடிய ஒரு வித சிகப்பு மண், சருமத்தை சுத்தப்படுத்தி, ரத்த ஓட்டத்தை சீராக்கும்.
மத்த எந்த சிகிச்சையை செய்துக்கிறதா இருந்தாலும், அது எல்லோருக்கும் ஒத்துக்குமா, பக்க விளைவுகள் வருமானு யோசிக்கனும். ஆனா மண் சிகிச்சைல அந்தக் கேள்விக்கே இடமில்லை. எல்லா வயதினருக்கும், எல்லா சருமங்களுக்கும் பொருந்திப் போகிற அற்புதமான சிகிச்சை இது. சமீப காலமா மணப்பெண்கள் மத்தில மண் அழகு சிகிச்சை ரொம்பப் பிரபலமாயிட்டிருக்கு. குறைஞ் சபட்சம் 7நாட்கள் சிகிச்சையான இதுல மணப்பெண்ணுக்கு முதல்ல தலைமுதல் கால் வரை ஆயில் மஜாஜ் செய்வோம்..
அடுத்து பலவகையான மண் கலவை கலந்த பேக் போட்டு, வெதுவெதுப்பான தண்ணீரில் நனைச்சு பிழிஞ்ச டவலால உடம்பு முழுக்க சுத்தி 15 நிமிடங்கள் கழிச்சு, ஸ்பெஷல் குளியல் தருவோம். இதே மாதிரி தலைக்கு முகத்துக்கு, கை, கால்களுக்குனு தனித்தனியா மண் சிகிச்சைகள் இருக்கு என்கிற ஹசீனா கொஞ்சமும் பொலிவே இல்லாத களைத்த கண்களுடனும், வறண்ட கூந்தலுடனும் இருந்த ஒரு பெண்ணுக்கு தலை முதல் கால் வரையிலான மண் சிகிச்சையை செய்து காட்டினார். சிகிச்சை முடிந்ததும் அவரது தோற்றமே மாறி போயிருக்கிறதை பார்க்க முடிந்தது..
வீட்டிலேயே செய்து கொள்ள எளிமையான ஒரு மண் சிகிச்சை
1டீஸ்பூன் முல்தானிமிட்டி, அரைடீஸ்பூன் சந்தனப் பவுடர், ஒரு சிட்டிகை, கஸ்தூரி மஞ்சள், கால் டீஸ்பூன் கடலை மாவு, எல் லாவற்றையும் சிறிது பன்னீர் விட்டுக் குழைத்து முகம், கழுத்துப் பகுதிகளில் தடவினால் எண்ணெய் பசை சருமம் பளீரென மாறும்.
வறண்ட சருமம் உள்ளவர்கள் முல்தானி மிட்டியுடன் 1டீஸ்பூன் தயிரும், அரை டீஸ்பூன் பாதாம் ஆயிலும் 3 துளிகள் பன்னீரும் கலந்து தடவி சிறிது நேரம் ஊறிக் கழுவலாம்.