குழந்தைப் பேறு என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் கடவுள் கொடுத்த கொடை ஆகும். ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பதில் இருக்கும் சந்தோஷத்தை விட அவளுக்கு வேறென்ன இருக்க முடியும்?
ஆனால், அந்த சந்தோஷத்தை விட கர்ப்ப காலத்தில் பெண்கள் படும் வேதனைகளும், அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளும் தான் கொடிது. பொதுவாகவே, இவ்வுலகில் பெண்கள் அனுபவிக்கும் பிரச்சனைகள் போதாதென்று, கர்ப்ப காலப் பிரச்சனைகள் வேறு அவர்களை மேலும் மோசமாக வதைக்கின்றன.
கர்ப்ப காலத்தில் பெண்கள் அனுபவிக்கும் 10 முக்கியப் பிரச்சனைகள் குறித்து இங்கே பார்க்கலாம்.
நோய்த்தொற்று
கர்ப்ப காலத்தில் கருவில் உள்ள குழந்தைக்கு ஜி.பி.எஸ். (GBS) என்ற நோய்த் தொற்று ஏற்படுகிறது. இது பெரும்பாலும் அதன் தாயிடமிருந்துதான் வருகிறது. இந்த ஜி.பி.எஸ். தொற்றுக்கான சோதனையை 35லிருந்து 37வது வாரத்திற்குள் செய்து கொண்டு, அதற்கான மருந்துகளைக் கர்ப்பிணிகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஆர்.எச். நோய்
இது ஒரு முக்கியமான இரத்தச் சோதனையாகும். கர்ப்பிணியான பெண்ணுக்கு ஆர்.எச். நெகட்டிவ்வும், அவள் கணவருக்கு ஆர்.எச். பாஸிட்டிவ்வும் இருந்து, பிறக்கப் போகும் குழந்தைக்குத் தந்தையின் பாஸிட்டிவ் வந்து விட்டால், அது பலவிதமான பிரச்சனைகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. தாயின் நோயெதிர்ப்பு சக்தியே பெரும்பாலும் குழந்தையின் பாஸிட்டிவ் இரத்த செல்களைக் கொல்ல முயற்சிக்கும். அது முடியாமல் போனால், அதற்கென்று உள்ள ஒரு ஊசியைப் போட்டுக் கொள்ளலாம்.
குறைப் பிரசவம்
பொதுவாக 37 ஆவது வாரத்திற்குப் பின்னர் தான் குழந்தை பிறக்கும். ஆனால், சில குழந்தைகள் அதற்கும் முன்பாகவே முந்திக் கொண்டு பிறந்து விடுகின்றன. இதைக் குறைப் பிரசவம் என்பார்கள். இப்படிப் பிறக்கும் குழந்தைகளை மிகுந்த எச்சரிக்கையுடன் பராமரிக்க வேண்டும்.
உயர் இரத்த அழுத்தம்
பெரும்பாலான கர்ப்பிணிகளுக்கு கர்ப்ப காலத்தில் உயர் இரத்த அழுத்தம் ஏற்படும். இதற்கு டாக்சீமியா அல்லது ப்ரீஎக்ளாம்சியா என்று பெயர். அதிக எடை, நீரிழிவு அல்லது 35 வயதிற்கு மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவது சகஜம். இதற்காக உரிய சிகிச்சைகள் எடுத்துக் கொள்வது தாய்-சேய் இருவருக்கும் நல்லது.
கருப்பை கோளாறுகள்
பிரசவ சமயத்தில் ஏற்படும் ப்ளாஸெண்ட்டா பெர்வியா/அப்ரப்சன் என்ற இரு குறைபாடுகளின் போது நிறைய இரத்தப் போக்கு ஏற்படும். இதனால் குறைமாதப் பிரசவம் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளும் சூழலும் ஏற்படலாம்.
நீரிழிவு
கர்ப்ப காலத்தின் போது நீரிழிவு ஏற்பட்டால், தாய்-சேய் இருவருக்குமே அது கெடுதல் தான். குழந்தைகளுக்கு இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறையும்; நரம்புப் பிரச்சனைகள் ஏற்படும்; பிறந்தவுடன் மஞ்சள் காமாலை நோயும் ஏற்பட வாய்ப்புள்ளது. தாய்க்கு உயர் இரத்த அழுத்தம், சிறுநீரக தொற்றுக்கள், குறைமாதப் பிரசவம் போன்றவை ஏற்படலாம்.
கருப்பை சுருக்கம்
சில கர்ப்பிணிகளுக்கு பிரசவ காலம் நெருங்கும் வேளையில் கருப்பை சுருக்கம் ஏற்படும் வாய்ப்புள்ளது. அப்போது அவர்கள் நன்றாக ஓய்வெடுக்க வேண்டும். இப்பிரச்சனையை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இல்லையென்றால் குறைமாதப் பிரசவம் ஏற்பட்டுவிடும். மருத்துவர்களின் ஆலோசனைப்படி நடந்து கொள்வது நல்லது.
கருப்பைக்கு வெளியே கரு
சில பெண்களுக்கு சூற்பைக்கு வெளியே கரு உருவாகி வளரும். இது ஒரு மோசமான பிரச்சனையாகும்; ஆபத்தானதும் கூட! உரிய நேரத்தில் இதைக் கண்டுபிடித்துச் சரி செய்யாவிட்டால், தாய்-சேய் இருவருக்கும் ஆபத்து.
கருச்சிதைவு
இது பெரும்பாலும் முதல் மூன்று மாதங்களுக்குள் ஏற்படும். கருச்சிதைவு ஏற்படும் போது, நிறைய இரத்தப் போக்கு ஏற்படுவது மட்டுமின்றி, பயங்கர வலியும் இருக்கும். எனவே, இந்த மூன்று மாதங்களுக்கும் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இரத்தப் போக்கு
சில கர்ப்பிணிகளுக்கு பிரசவத்திற்கு முன் மோசமான இரத்தப் போக்கு ஏற்படும். இதனால் கரு கலைவதற்கு அதிக வாய்ப்புள்ளது; அல்லது குழந்தை இறந்தே பிறக்கும். மருத்துவர்களின் உதவியுடன் தக்க சமயத்தில் இப்பிரச்சனையைத் தீர்த்துக் கொள்ள வேண்டும்.