பிறந்த குழந்தைகளுக்கு சிறந்த உணவாக விளங்கும் தாய்ப்பால், இன்று வியாபார பொருளாகி விட்டது. தாய்ப்பாலை வாங்கவும், விற்கவும் பல்வேறு இணையதளங்கள் செயல்பட்டு வருகின்றன. ஆனால் இவ்வாறு ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படும் தாய்ப்பால் ஆபத்து நிறைந்தது என ஆய்வாளர்கள் அடிக்கடி எச்சரித்து வருகின்றனர்.
இதை லண்டனின் பி.பி.சி. தொலைக்காட்சி நிறுவனம் சமீபத்தில் ஆதாரப்பூர்வமாக நிரூபித்து உள்ளது.அந்த தொலைக்காட்சி நிருபர் ஒருவர், தான் ஒரு 6 மாத குழந்தையின் தந்தை என்றும், அந்த குழந்தைக்கு வழங்க தாய்ப்பால் வேண்டும் என்றும் கூறி, நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு தாய்மார்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் தாய்ப்பால் சேகரித்தார்.
இவ்வாறு சேகரிக்கப்பட்டவற்றில் 12 பேரின் தாய்ப்பால் ஆய்வகத்தில் சோதிக்கப்பட்டது. இதில் 6 பேரின் தாய்ப்பாலில் பல்வேறு கொடிய நோய் தொற்றுகள் இருந்தன. இதனால் ஆய்வாளர்களுக்கு கடும் அதிர்ச்சி ஏற்பட்டது. ஆன்லைன் மூலம் தாய்ப்பால் விற்பனை செய்யும் நிறுவனங்கள், அவற்றை கையாள்வதில் தகுந்த சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவது இல்லை.
எனவே தாய்ப்பால் தானம் செய்பவர்கள், தேசிய சுகாதார சேவை நிறுவனங்கள் அமைத்துள்ள பால் வங்கிகளில் வழங்கலாம் என இங்கிலாந்து ஆய்வாளர்கள் அறிவித்து உள்ளனர்.