உடல் எடையை குறைக்க டயட்டில் இருப்போர், தாங்கள் உண்ணும் உணவில் புரோட்டீன்களை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். அப்படி புரோட்டீன் அதிகம் நிறைந்த உணவுகளில் ஒன்று தான் சிக்கன். இத்தகைய சிக்கனுடன் பூண்டு சேர்த்து சமைத்து சாப்பிட்டால், அது சுவையுடன் இருப்பதோடு, உடல் எடையை குறைக்க உதவியாகவும் இருக்கும்.
இங்கு டயட்டில் இருப்போர் சிக்கனை பூண்டுடன் சேர்த்து எப்படி கிரேவி செய்து சாப்பிட வேண்டுமென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.
தேவையான பொருட்கள்:
சிக்கன் – 1/2 கிலோ (நன்கு நீரில் கழுவியது)
பூண்டு – 10 பற்கள்
பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்
வெங்காயம் – 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் – 4 (நீளமாக கீறியது)
மிளகு – 1 டேபிள் ஸ்பூன் (பொடித்தது)
தயிர் – 1 கப்
புதினா – சிறிது (நறுக்கியது)
கொத்தமல்லி – சிறிது (நறுக்கியது)
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை – 1
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பூண்டு சேர்த்து நன்கு வதக்கி விட வேண்டும்.
பின்பு அதில் சிக்கன் துண்டுகளை சேர்த்து மிதமான தீயில் 2-3 நிமிடம் வதக்கி விடவும்.
பின் அதில் வெங்காயம், பூண்டு பேஸ்ட் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து. குறைவான தீயில் 5-7 நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.
பிறகு அதில் எலுமிச்சையை பிழிந்து, அத்துடன் தயிர், மிளகு, புதினா, கொத்தமல்லி சேர்த்து நன்கு வதக்கி, கிரேவியானது கெட்டியாக இருப்பது போல் இருந்தால், அதில் 1 கப் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி, 10 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க விட்டு இறக்கினால், சுவையான பூண்டு சிக்கன் கிரேவி ரெடி!!!