நிதானமாக உடற்பயிற்சியும், தியானப் பயிற்சியும் செய்து வந்தால், சர்க்கரை நோய், இதயநோய், மாரடைப்பு, இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் வராமல் தடுக்கலாம் என அண்மையில் அமெரிக்க பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆராய்ந்து கூறியுள்ளனர்.’ குழந்தைகளுக்கு படிப்புடன் உடற்பயிற்சி செய்யச் சொல்லுங்கள்.
பாரதி கூறிய படி மாலையில் விளையாட அனுமதியுங்கள். அப்போதுதான் திடகாத்திரமான பலமான இளைஞனாக உங்கள் குழந்தை வளருவார்கள். நடைப்பயிற்சி என்பது ஏதோ முதியவர்களுக்கு மட்டும் என்று எண்ணிவிடக் கூடாது. பள்ளி செல்லும் குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அவசியம் மேற்கொள்ள வேண்டிய பயிற்சியாகும்.
பொதுவாக நடைப்பயிற்சி செய்ய அதிகாலை நேரமே உகந்தது. காலை எழுந்தவுடன் காலைக் கடன்களை முடித்து, தண்ணீர் அருந்திவிட்டு, இறுக்கமில்லாத ஆடையை அணித்துகொண்டு நடப்பதுதான் நடைப்பயிற்சி. நடைப்பயிற்சி என்றவுடன் சிறிது தூரம் நடப்பது அல்ல. குறைந்தது 2 கி.மீ ஆவது நடக்க வேண்டும். கடற்கரையிலோ, சாலை ஓரங்களிலோ அல்லது பூங்காக்களைச் சுற்றியோ நடக்கலாம்.
அதிகாலையில் செய்யும் நடைப்பயிற்சியால் அன்றைய தினம் முழுவதும் புத்துணர்ச்சியுடனும் சுறுசுறுப்புடனனும் வேலை செய்ய முடியும். நடக்கும்போது பேசிக்கொண்டோ அரட்டை அடித்துக்கொண்டோ பாட்டு கேட்டுக் கொண்டோ நடக்கக் கூடாது. மெதுவாகவும், அமைதியாகவும் கைகளை நன்கு வீசி மூச்சுக்காற்றை நன்கு உள்வாங்கி வெளியிட்டு நடக்க வேண்டும். நடை ஒரே சீராக இருக்க வேண்டும். நடந்து வந்தவுடன் சிறிது நேரம் குனிந்து, நிமிர்ந்து கைகளை பக்கவாட்டில் அசைத்து உடற்பயிற்சி செய்தல் வேண்டும்.