‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்பார்கள். அந்த முகத்தின் அழகையும் ஆரோக்கியத்தையும் ஒருவரது கால்களில் தெரிந்து கொள்ளலாம். ஆமாம்… நம் உடலிலுள்ள அத்தனை முக்கிய உறுப்புகளின் நரம்பு முனைகளும் முடிகிற இடம் நமது கால்கள்.
அவை அழகாக, ஆரோக்கியமாக இல்லாவிட்டால், உடலுறுப்புகளிலும் ஏதோ பிரச்னை எனத் தெரிந்து கொள்ளலாம். அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த கால்களைப் பராமரிப்பதில், பலருக்கும் ஏனோ அக்கறை இருப்பதில்லை. ”முக அழகும் ஆரோக்கியமும் ஒருத்தருக்கு எவ்வளவு முக்கியமோ, அதே மாதிரிதான் கால்களோட அழகும் ஆரோக்கியமும். ஆயிரக் கணக்குல செலவு பண்ணி பட்டுப் புடவையும், டிசைனர் புடவையும் வாங்கி உடுத்துவாங்க. ஆனா, பாதங்கள்ல உள்ள வெடிப்பும் சுருக்கங்களும் அந்தப் புடவையோட அழகை எடுபடாமப் பண்ணிடும்.
அதுவே கால்கள் வழவழப்பா, அழகா இருந்தா, உங்களையும் அறியாம உங்க தன்னம்பிக்கை அதிகரிக்கிறதை நீங்க உணர்வீங்க” என்கிறார் ‘அனுஷ்கா பியூட்டி ஸ்பா மற்றும் சலூன்’ உரிமையாளர் ஷிபானி. அழகான கால்களுக்கு ஆலோசனைகள் சொல்கிறார் அவர்.
எங்கே போனாலும் செருப்பு போடாம, வெறும் கால்களோட நடக்காதீங்க. கால்கள்ல உண்டாகிற வெடிப்பு, நகப் பிரச்னைகள்னு பலதுக்கும் அதுதான் காரணம். கோயில் மாதிரியான சில இடங்களுக்கு செருப்பு போடாம போக வேண்டியிருக்கும். போயிட்டு வந்ததும், முதல் வேலையா கால்களை நல்லா கழுவிடுங்க. பாதப் பிரச்னைகளுக்குக் காரணமான ஒருவிதமான வைரஸ், ஒருத்தர்கிட்டருந்து இன்னொருத்தருக்குப் பரவும். ஜாக்கிரதை!
குளிக்கும்போது கால்களையும் பாதங்களையும் தேய்ச்சு, சுத்தப்படுத்தணும். உங்க பாத்ரூம்ல எப்போதும் பியூமிஸ் ஸ்டோன் இருக்கட்டும். குளிக்கும் போது, இந்தக் கல்லால பாதத்தோட கடினமான பகுதிகளைத் தேய்ச்சுக் கழுவினா, இறந்த செல்களும், வறட்சியும் நீங்கி, பாதம் வழவழப்பாகும்.
வெடிப்பு அதிகமிருந்தா, நல்லெண்ணெய் வைத்தியம் ட்ரை பண்ணுங்க. சில துளிகள் நல்லெண்ணெயை எடுத்து, வெடிப்புள்ள இடத்துல தடவி, கொஞ்ச நேரம் ஊறித் தேய்ச்சுச் கழுவணும். தொடர்ந்து செய்து வந்தா, வெடிப்புகள் மறையும்.
வெந்நீர்ல கல் உப்பைப் போட்டு, கால்களைக் கொஞ்ச நேரம் ஊற வச்சுத் தேய்ச்சுக் கழுவலாம். இது களைப்பான கால்களுக்குப் புத்துணர்வு கொடுத்து, பாதங்களை மென்மையாக்கும்.
கால்களை ஈரப்படுத்திக்கிட்டு, கொஞ்சம் தூள் உப்பை எடுத்து, ஈரமான கால்கள் மேல மென்மையா தேய்க்கணும். உப்பு கரையற வரைக்கும் தேய்ச்சுக் கழுவினா, இறந்த செல்கள் நீங்கி, வெடிப்பும் சரியாகும்.
கடற்கரை மணல்ல நடக்கிறது, கடல் தண்ணீர்ல கால்கள் நனைய நிற்கறதுன்னு எல்லாமே பாதங்களுக்கு நல்லது.
வீட்டுத் தரை சுத்தமா இல்லைன்னாலும் உங்க கால்கள்ல பிரச்னை வரலாம். தரையில கிருமிகள், அழுக்குகள் இல்லாம சுத்தமா இருந்தால்தான், அதுல நடக்கற உங்க கால்களும் சுத்தமா இருக்கும். சரியான கிருமி நாசினி உபயோகிச்சு, அடிக்கடி உங்க வீட்டுத் தரையை சுத்தப்படுத்தவும்.
மாதம் ஒரு முறையோ, இரண்டு முறையோ பெடிக்யூர் செய்ய வேண்டியது அவசியம். பார்லர் போக நேரமில்லாதவங்க, கடைகள்ல கிடைக்கிற பெடிக்யூர் செட் வச்சு, வீட்லயே செய்துக்கலாம்.