100 ஹெல்த்தி ஹேபிட்ஸ்
‘நாம் நல்ல பழக்கங்களை உருவாக்குவோம்; நல்ல பழக்கங்கள் நம்மை உருவாக்கும்’ என்கிறார் பிரபல ஆங்கிலக் கவிஞர் ஜான் டிரைடென். ‘இதைச் செய்யலாமா… அதைச் செய்யலாமா?’ என நமக்கு ஒரு நாளில் பல வாய்ப்புகள் (சாய்ஸ்) இருக்கின்றன. அதில், எதைத் தேர்ந்தெடுக்கிறோமோ, அதைப் பொறுத்துதான் அந்த நாள் அமையும். நாம் எதைச் சிந்திக்கிறோமோ… அதுவே செயலாகிறது; நாம் எதைச் செய்கிறோமோ… அது வழக்கமாகிறது; நாம் எதை வழக்கமாக வைத்திருக்கிறோமோ… அது நம் குணாதியசமாகிறது. எனவே, நம்மை வடிவமைப்பவை நம் எண்ணங்களும் பழக்கவழக்கங்களும்தான். நல்ல பழக்கங்கள் நம் வசமாக, அவற்றை நாம் பின்பற்ற வேண்டும் என்ற எண்ணமும் செயலும் முக்கியம்.
ஒரு நாளை எவ்வாறு செலவிடுகிறோம் எனப் பட்டியலிட்டுப் பாருங்கள். குழந்தைப் பருவத்திலிருந்து
தூங்கச் செல்லும் முன் பல் தேய்ப்பது, வெளியில் செல்லும்போது ஷூ, ஸ்லிப்பரைத் துடைப்பது இப்படியான நல்ல பழக்கங்கள் முதல், புகை பிடித்தால்தான் இந்த நட்பு வட்டாரத்தில் நம்மை மதிப்பார்கள், மது அருந்துவது, பார்ட்டிக்குப் போவதுதான் நாகரிகம் என்பன போன்ற கெட்ட பழக்கங்கள் வரை எத்தனை விஷயங்களை நாம் மறுபரிசீலனை இன்றி வைத்துக்கொண்டிருக்கிறோம். சிலர், `வீட்டில் குழந்தைகள் அதிகமாக டி.வி பார்க்கின்றனர்’ எனப் புகார் சொல்வார்கள். உண்மையில், பெற்றோர் பார்ப்பதால்தான் குழந்தைகளுக்கும் டி.வி பார்க்கும் பழக்கம் வந்திருக்கும். நல்ல பழக்கங்களைக் கற்றுக்கொள்வதும், தீய பழக்கங்களை கைவிடுவதும் நமது முயற்சியில்தான் உள்ளன. அன்றாட வாழ்வில் பின்பற்ற வேண்டிய நல்ல பழக்கங்கள் என்னென்ன… கவனம் இல்லாமல், விழிப்புஉணர்வு இல்லாமல் செய்யும் தவறுகள், பழகிவிட்ட பழக்கங்களால் நமக்கு ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன… அவற்றைத் திருத்திக்கொள்வது எப்படி என்பதைப் பற்றி விளக்குகிறார், மனநல மருத்துவர் கார்த்திகேயன்.
நகங்களைக் கடிப்பது
1. சிலர் `எதையாவது யோசிக்கும்போது, டென்ஷனாக இருக்கும்போது, நகங்களைக் கடிக்கிறேன்’ என்று சொல்வார்கள். கிருமிகள் வாழ ஏற்ற இடங்களில் நகங்களும் ஒன்று. நகம் கடிப்பதால், அதில் உள்ள கிருமிகள் வாய் வழியே வயிற்றுக்குள் செல்லும். கல்லீரல் பாதிப்பு, வயிற்றில் தொற்று ஏற்படலாம்.
2. நகங்களின் அமைப்பில் மாற்றம் ஏற்படும். நகங்களின் வளர்ச்சியும் பாதிக்கப்படும். நகங்களைச் சுற்றி உள்ள இடங்களும் பாதிப்புக்குள்ளாகும். நகங்களின் நிறத்தில் மாறுதல் ஏற்படும்.
3. நகம் கடிப்பவர்கள், இந்த பழக்கத்திலிருந்து விடும்படும்வரை, தரமான நெய்ல் பாலீஷ் பூசலாம். (மற்றவர்கள் நெய்ல் பாலீஷ் போடுவதைத் தவிர்க்க வேண்டும்.)
தொடங்கிய பழக்கங்கள் என்னென்ன… வளரும் பருவத்தில் கற்றுக்கொண்டவை என்னென்ன… நண்பர் மற்றும் உறவினர்களிடமிருந்து கற்றுக்கொண்டவை என்னென்ன? சிந்தித்துப்பாருங்கள்.
கால் மேல் கால் போட்டு அமர்வது
4. கால் மேல் கால் போட்டு அமரும்போது, தற்காலிகமாக ரத்த அழுத்தம் அதிகமாகும். சில ஆய்வுகள் ‘இதயம் தொடர்பான பிரச்னைகள், இனப்பெருக்க மண்டலம் தொடர்பான பிரச்னைகள் வரலாம்’ என்று தெரிவிக்கின்றன. எனவே, கால் மேல் கால் போட்டு அமர்வதைத் தவிர்க்க வேண்டும்.
5. நீண்ட நேரம் உட்கார்ந்து வேலைசெய்யும் சூழலில் இருப்பவர்களுக்கு, உடல்பருமன் பிரச்னை, சர்க்கரை நோய் வர வாய்ப்புகள் அதிகம். இதனுடன், கால் மேல் கால் போட்டு அமரும்போது, ரத்த அழுத்தம் அதிகமாகி, இதயம் தொடர்பான பிரச்னைகள் வரலாம்.
நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்வதைத் தவிர்க்கலாம். அரை மணி நேரத்துக்கு ஒருமுறை இரண்டு நிமிடங்கள் எழுந்து நடக்கலாம்.
நெட்டி முறிப்பது
6.டென்ஷனாக இருக்கும்போது பதற்றத்தில் கைவிரல்களை மடக்கி, நெட்டி முறிப்பது பலரின் வழக்கம். கைவிரல்களின் இணைப்புகளில் திரவம் இருக்கும். நெட்டி முறிக்கும்போது, விரல் மூட்டு மற்றும் திரவம் பாதிக்கப்படும். தொடர்ந்து செய்துவரும்போது, மூட்டுப் பிரச்னைகள்கூட வரலாம். டென்ஷனான தருணங்களில் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிக்கலாம்.
7. இரவில், விளக்குகளை அணைத்துவிட்டு செல்போன் பயன்படுத்தும்போது, அதில் இருந்து வெளிப்படும் ஒளிக்கற்றைகள் கண்களைப் பாதிக்கலாம். மேலும், இது தூக்கத்தையும் கெடுக்கும்.
தூக்கம் பாதிக்கப்படுவதால், தூங்கும் நேரமும் பாதிக்கப்படும். மெலடோனின் என்ற ஹார்மோன் சுரப்பது, தூக்கத்தில்தான். சரியாகத் தூங்காமல் இருந்தால், இந்த ஹார்மோன் சுரக்காமல்போகலாம். இந்த ஹார்மோன் சுரப்புப் பிரச்னை தினமும் இருந்தால், மார்பகம், ப்ராஸ்டேட், பெருங்குடல், மலக்குடல் புற்றுநோய்கள் வரலாம்.
8. காலையில் எழ அலாரம் செட் செய்த பிறகு, மீண்டும் செல்போனைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
9. தூங்கச் செல்வதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன் எலெக்ட்ரானிக்ஸ் கருவிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
ஃபுல் வாலட்
10. ஆண்களுக்கு, பர்ஸை எப்போதும் பின்பக்கம் வைக்கும் பழக்கம் இருக்கும். பெரும்பாலானோர், பர்ஸை ஏதோ பேப்பர் மூட்டைபோல வைத்திருப்பர். அதில் பணத்தைவிட கார்டுகளும் பில்களுமே அதிகமாக இருக்கும். தடிமனான பர்ஸை பின் பாக்கெட்டில் வைத்தபடி, மணிக்கணக்கில் அமர்ந்திருப்பார்கள். இப்படி அமரும்போது, உடலின் அமைப்பு (பாஸ்ச்சர்) பாதிக்கப்படும். அதாவது, ஒரு பக்கம் மட்டும் சில செ.மீ உயர்த்தப்பட்டிருக்கும். இப்படிக் கோணலாக அமர்வதால், முதுகெலும்புப் பகுதி பாதிக்கப்படும். கழுத்து, முதுகெலும்பு, இடுப்பு, தோள்பட்டையில் வலி ஏற்படும். இந்தப் பழக்கத்தை வருடக்கணக்கில் செய்தால், உங்கள் முதுகெலும்பு தீவிரமாகப் பாதிக்கப்படும்.
11. அமரும்போது, பின்புற பாக்கெட்டில் இருக்கும் சீப்பு, வாலட், கார்டு போன்றவற்றை டேபிள் மேல் வைத்துவிட்டு அமரலாம்.
ஸ்கின்னி ஜீன்ஸ்
12. பருவகாலத்துக்கு ஏற்ற உணவும் உடையும்தான் உடலுக்கு நல்லது. தமிழ்நாடு வெப்ப மண்டல பூமி. இங்கு, குளிர்காலம் மூன்று மாதங்கள் மட்டுமே. அப்போது தடிமனான ஆடைகளை அணியலாம். ஆனால், இறுக்கமான ஆடைகளை அணியக் கூடாது. ஸ்கின்னி ஜீன்ஸ், பார்க்க அழகாக இருக்கும்; சிலருக்குக் கச்சிதமான தோற்றத்தைத் தரும். ஆனால், நீண்ட நேரம் இதை அணிந்துகொண்டிருப்பதால், இனப்பெருக்க உறுப்புகள் பாதிக்கப்படும்.
13. உடலின் வியர்வையை உறிஞ்சும் தன்மைகொண்ட பருத்தி ஆடைகளை அணிவதுதான் சரி. உடலின் வியர்வையை அப்படியே தேக்கிவைத்து, காற்றுப் போகாமல் தடுக்கும் ஆடைகள் உடலின் கிருமிகளை அதிகமாக உருவாக்கும். அரிப்பு, சொறி போன்ற சருமப் பிரச்னைகள் வரலாம்.
அதிகப்படியான உடல்சூடு ஏற்பட்டு, சின்னச்சின்ன கட்டிகளும் உருவாகும். தொடைகளில் உள்ள நரம்புகளில் அழுத்தம் ஏற்பட்டு, ரத்த ஓட்டம் பாதிக்கப்படும். எரிச்சல், வியர்வை, துர்நாற்றம், பிசுபிசுப்பு போன்ற அசெளகர்ய உணர்வுகளும் ஏற்படும். பெண்களுக்கு, வெள்ளைப்படுதல் பிரச்னை உண்டாகும்.
14. அக்குள் மற்றும் இனப்பெருக்க உறுப்புகள் உள்ள பகுதிகளுக்கு, காற்றோட்டமான உடையை அணிவதே சிறந்தது. அதுவும், பருத்தித் துணியால் தயாரிக்கப்பட்ட உடைகளே சிறந்தவை.
கிரிப்பர் இல்லாத செருப்புகள்
15. தற்போது, கலர் கலராக பலவித செருப்புகள் குறைந்தவிலைக்குக் கிடைக்கின்றன. அவற்றில், சிலவகை செருப்புகளின் அடியில் மட்டுமே கிரிப்பர் டிஸைன்கள் இருக்கும். இவை, எந்தச் சூழலிலும் வழுக்காமல் இருக்கும்.
16. சில வகை செருப்புகளின் அடியில் கிரிப்பர் இல்லாமல் இருக்கும். பெரும்பாலும், இவற்றை வீட்டில் டாய்லெட் செருப்பாகப் பயன்படுத்துவர். கிரிப் இல்லாததால், சில சமயங்களில் இவை வழுக்கிவிட வாய்ப்பு உள்ளது. அவசர நேரங்களில் வேகமாக நடக்கும்போது, வழுக்கிவிட்டு கை, கால், தலையில் அடிபட நேரலாம்.
17. டாய்லெட் செருப்பு, வீட்டில் மட்டும் பயன்படுத்தும் செருப்பு, தோட்டத்தில் மட்டும் பயன்படுத்தும் செருப்பு என எந்தச் செருப்பாக இருந்தாலும், கிரிப்பர் இருந்தால் மட்டுமே பயன்படுத்துவது பாதுகாப்பானது.
எமோஷனல் ஈட்டிங்
18.ஸ்ட்ரெஸ், பதற்றமான உணர்வுகள் தோன்றும்போது தன்னை அறியாமல் அதிகம் சாப்பிட நேரிடும். டென்ஷன், கவலை, சோர்வான தருணங்களில் உணவின் அளவைக் கவனிப்பது நல்லது.
19. சிலர், அதிக டென்ஷன் எனச் சொல்லி, காபி குடிக்கச் செல்வார்கள். டென்ஷன் நாட்களில் 10 காபி, டீ குடிப்பவர்களும் உள்ளனர். இதைத் தவிர்த்து, பழங்கள், பழச்சாறுகளைச் சாப்பிடலாம்.
வலி நிவாரணிகள்
20. தலைவலி, உடல்வலி என்றால், உடனே மருந்துக் கடைக்குச் சென்று வலி நிவாரணி மாத்திரை வாங்கிப் போடும் பழக்கம் பலருக்கும் உள்ளது. இதனால், தற்காலிக நிவாரணம் கிடைத்தாலும், இதன் பின்விளைவுகள் மோசமாக இருக்கலாம் என்பதால், இதைத் தவிர்க்க வேண்டும்.
21. வலி என்பது நம் உடல் பிரச்னைக்கான அறிகுறியாகவோ, நம்முடைய சில தவறான பழக்கங்களால் ஏற்பட்ட பாதிப்பாகவோ இருக்கலாம். எதனால் அந்தப் பிரச்னை ஏற்பட்டது எனக் கண்டறிந்து, அதை சரிசெய்ய முயற்சிக்க வேண்டும். அப்போதைக்கு தீர்வு கிடைத்தால்போதும் என, பெயின் கில்லரைச் சாப்பிடக் கூடாது. சுய மருத்துவம் செய்துகொண்டால், நாளடைவில் சிறுநீரகம், கல்லீரல் பாதிக்கப்படக்கூடும்.
22. தொடர் தலைவலி, வயிற்று வலி, முடி கொட்டுதல், அலர்ஜி ஏற்படுதல் போன்ற பிரச்னைகள் வந்தால், மருத்துவரை அணுகி, காரணத்தைக் கண்டறிந்து சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.
இரவும் நொறுக்குத்தீனியும்
23. மாலை வரைதான் நொறுக்குத்தீனி சாப்பிட வேண்டும். இரவில் நொறுக்குத்தீனியைச் சாப்பிட்டால், செரிக்கத் தாமதமாகி, உடலின் உயிர் கடிகார சுழற்சி மாறுபடும். இதனால், நெஞ்சு எரிச்சல், ஏப்பம், செரிமானக் கோளாறு, மலச்சிக்கல் ஏற்படலாம்.
உணவைச் செரிக்கச் சுரக்கும் அமிலம், நொறுக்குத்தீனி சாப்பிட்ட பிறகு சுரக்கத் தொடங்கும். தூங்கும் நேரத்தில் உடல் செய்ய வேண்டிய வேலை பாதிக்கப்பட்டு, செரிப்பதற்கான வேலை உடலில் நடக்கும். எனவே, இரவு உணவை 9 மணிக்குள் முடித்துவிட வேண்டும். அதன் பிறகு, நொறுக்குத்தீனிகளைத் தொடுவதைத் தவிர்க்க வேண்டும்.
புகைப்பழக்கம்
24. புகைப்பது உடலுக்குக் கேடு. ஒருவர் புகைத்துவிட்ட, புகையை மற்றவர்கள் சுவாசிக்கும்போது (பேசிவ் ஸ்மோக்கர்ஸ்) அவர்களுக்கும் அந்தப் பாதிப்பு ஏற்படும். எனவே, புகைப்பவரின் அருகில் நிற்பதுகூட கெடுதல்தான். குழந்தைகள், கர்ப்பிணிகளுக்கு பாதிப்பு இன்னும் அதிகமாக இருக்கும்.
புகைப்பவர்களுக்கும், பேசிவ் ஸ்மோக்கர்ஸ்களுக்கும் நுரையீரல் புற்றுநோய், மாரடைப்பு, நெஞ்சுச்சளி, வாய் மற்றும் தொண்டைப் புற்றுநோய், சிறுநீரகப் பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.
25. புகைப்பதை நிறுத்துங்கள். நண்பர் புகைபிடிக்கும்போது, அந்த இடத்தில் நிற்பதைத் தவிர்த்திடுங்கள். புகைக்கும் எண்ணம் வரும்போது, பழச்சாறு குடிப்பது, ஸ்வீட் லெஸ் சூயிங்்கம் மெல்வது எனக் கவனத்தைத் திசைதிருப்புங்கள்.
26. கவனத்தை திசைதிருப்ப முடியவில்லை, மீண்டும் மீண்டும் சிகரெட் பிடிக்கத் தூண்டுகிறது என்றால், தகுந்த மருத்துவரை அணுகி, சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது.
27. குடிப்பழக்கம் என்று சொல்வதே தவறு. குடி ஒரு பழக்கம் அல்ல நோய். `நான் சோஷியல் டிரிங்க்கர். எப்போதாவதுதான் சாப்பிடுவேன். பீர் மட்டும்தான் குடிப்பேன்’ இப்படி, பல்வேறு காரணங்களைச் சொல்லி, தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்வார்கள். ஒருமுறை குடித்தாலும், குடி என்பது தீமையானது என்பதே மருத்துவம் சொல்லும் உண்மை.
28. பீர் மட்டும் சாப்பிடுபவர்களுக்கு, யூரிக் ஆசிட் அதிகரித்து கவுட் பிரச்னை ஏற்படும். கால் கட்டைவிரலில் வீக்கம் ஏற்பட்டு, நடக்க முடியாமல்போகலாம். அதிகமாகக் குடிப்பவர்களின் கல்லீரல் பாதிப்பது உறுதி.
29. குடியை முற்றிலுமாகக் கைவிடுவதுதான் ஒரே தீர்வு. குடிப்பழக்கம் உள்ள நண்பர்களைச் சந்திக்காது இருப்பது, நேரத்துக்கு உணவு உண்பது நல்லது. தேவைப்பட்டால், மது மறுவாழ்வு கவுன்சலிங் பெற்றுக்கொள்ளலாம்.
காலாவதித் தேதியைக் கவனிக்காமல் இருப்பது
30. பொருட்களை வாங்கும்போது, அதன் உற்பத்தித் தேதி, காலாவதியாகும் தேதிகளைப் பார்த்து வாங்க வேண்டியது மிகவும் அவசியம். காலாவதித் தேதிக்குப் பிறகு பயன்படுத்தும்போது, அதனால் பல்வேறு உடல்நலக் குறைபாடுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
31. சிலர், எந்தப் பொருளை எடுத்தாலும் பெரிதாகத் தேர்ந்தெடுப்பார்கள். பவுடர், ஷாம்பு, காஸ்மெட்டிக் பொருட்கள் போன்றவை எல்லாமே பெரிய அளவில் இருக்கும். `இரண்டு மூன்று மாதங்களுக்குப் பிரச்னை இல்லாமல் இருக்குமே’ என்று காரணம் சொல்வார்கள்.
நாளடைவில், அவற்றின் லேபிள் கிழிந்துபோகும். இதனால், காலாவதித் தேதி தெரியாமல்போகும். இதை அறியாமல், வருடக்கணக்கில் பவுடரைப் பூசுவதால் சரும அலர்ஜிகள் வரலாம்.
32. எந்தப் பொருளை வாங்கினாலும் காலாவதித் தேதியைக் கவனித்து வாங்குங்கள். காஸ்மெட்டிக் பொருட்களின் காலாவதித் தேதியைக் குறித்துக்கொள்ளுங்கள். காலாவதித் தேதி நெருங்கும் இரு மாதங்களுக்கு முன்னரே, அவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்த்துவிடுவது நல்லது.
குளியல்
33.ஒரு நாளைக்கு இரண்டு முறை குளிப்பது நல்லது. குறிப்பாக, கோடை காலத்தில், காலை, மாலை இருவேளையும் குளிக்க வேண்டியது அவசியம்.
34. சிலர், `கொதிக்கக் கொதிக்க வெந்நீரில் குளித்தால்தான் உடல் அலுப்புப்போகும்’ என நினைப்பார்கள். இது தவறு. இளஞ்சூடான நீரில் குளிப்பதே நல்லது. வெயில் காலத்தில் சாதாரண நீரில் குளித்தாலே உடல் வெப்பம் குறைந்துவிடும்.
35. அதிக வெப்பநிலையில் உள்ள வெந்நீரில் குளிப்பதால், சரும செல்கள் பாதிக்கப்பட்டு சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படும்.
புறம்பேசுவது
36. மற்றவர்களைப் பற்றி குறை சொல்வதோ, விமர்சிப்பதோ நல்லது இல்லை. இது மனநலனைப் பாதிக்கக்கூடிய விஷயம். ஒருவரின் குணத்தையே அசைத்துப்பார்க்கும் பழக்கம். இதனால் மற்றவர்கள் நம்மைத் தாழ்வாக மதிப்பிடவும் வாய்ப்பு உண்டு. சமூக உறவு, மன அமைதி கெட்டு, மன அழுத்தம் அதிகரிக்கும்.
வாய்ப் பராமரிப்பு
37. காலையிலிருந்து எவ்வளவு உணவுகளை உண்டு ருசித்திருப்போம். தேவைப்படும்போது எல்லாம் நொறுக்குத்தீனி, காபி, டீ, ஜூஸ் எனப் பல்வேறு உணவுகளைச் சாப்பிட்டிருப்போம். இரவு தூங்கச் செல்வதற்கு முன்னர், இந்த உணவுத்துகள்கள் பற்களில் மாட்டி இருக்கலாம். இந்த உணவுத் துகள்கள்தான், பாக்டீரியா வளர ஏற்ற இடம். இதனால், பல் சொத்தை உள்பட பல பிரச்னைகள் ஏற்படலாம். இதைத் தவிர்க்க, தினமும் இரண்டு வேளை பல் துலக்க வேண்டும்.
38. வாய் துர்நாற்றத்தைப் போக்க, மவுத்வாஷ் பயன்படுத்துவதும் தவறு. பற்கூச்சம், ஈறு பிரச்னை எனப் பல காரணங்களுக்காக மவுத்வாஷ் பரிந்துரைக்கப்படுகிறது. எனவே, டாக்டர் பரிந்துரைத்தால் மட்டுமே மவுத்வாஷ் பயன்படுத்த வேண்டும்.
39. பலரும் மாதக்கணக்கில் ஒரே பிரஷ்ஷைப் பயன்படுத்துவார்கள். அது வளைந்து, நெளித்து பல் இடுக்குகளில் உள்ள உணவுத்துகள்களை அப்புறப்படுத்த முடியாத நிலையில் இருக்கும். எனவே, குறிப்பிட்ட கால இடைவெளியில் பிரஷ்ஷை மாற்ற வேண்டும்.
40. கடினமானதாக இல்லாமல், ஓரளவுக்கு மென்மையான பிரஷ் பயன்படுத்துவது நல்லது. குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டிய நல்ல பழக்கங்கள்!
குழந்தை வளர்ப்பு என்பது ஒரு கலை மட்டும் அல்ல. ஒரு குழந்தையின், ஒரு சமூகத்தின் எதிர்காலத்தையே தீர்மானிக்கும் செயல். குழந்தைகளுக்காகச் சேமித்துவைக்கப்படும் பொருளாதாரத்தைவிட, அவர்களுக்குச் சொல்லித்தரும் நற்பழக்கங்களினால், குழந்தையின் மன வளர்ச்சி செழுமையாக இருக்கும். சிறு வயதில் கற்றுக்கொள்ளும் பழக்கங்கள், அவர்களின் வாழ்க்கை முழுவதற்கும் உதவும். வாழ்வாதாரச் சிக்கல்களைச் சிரமம் இன்றி எதிர்கொள்ள உதவும்.
நல்ல ரோல்மாடல் நீங்கள்தான்!
41. நூறு சதவிகிதம் பர்ஃபெக்டாக யாராலும் இருக்க முடியாது. ஆனால், குழந்தைக்கு முன் நல்ல ரோல்மாடலாக இருப்பது அவர்களின் மன வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். ‘ஐயோ! இன்னிக்குக் கீரையா? எனக்கு வேண்டாம்’ எனச் சொல்வதற்கு முன், அருகில் குழந்தை இருப்பதைக் கவனியுங்கள். `அப்பாவுக்கோ அம்மாவுக்கோ கீரை பிடிக்கவில்லை. நாம் மட்டும் ஏன் சாப்பிட வேண்டும்?’ என்ற எண்ணம் தோன்ற, நாமே காரணமாக இருக்கக் கூடாது.
குழந்தையின் முன்னிலையில் விருந்தோம்பல்
42. வீட்டில் உறவினர்கள் வந்து சென்ற பிறகு, அவர்களைப் பற்றி குறை பேசுவதைக் குழந்தைகள் கவனித்தால், அவரின் மேல் மதிப்பு இல்லாமல்போகலாம். மேலும், விருந்தாளியை வரவேற்று உபசரித்து, முகத்துக்கு நேரே மரியாதை தந்துவிட்டு, சென்ற பின் அவரைப் பற்றி இழிவாகப் பேசும் பழக்கத்தைப் பார்க்கும் குழந்தையும், இதே பழக்கத்தைக் கற்றுக்கொள்ளும்.
இந்தக் குணம் அவர்களின் மனதில் பதிந்தால், நல்ல அப்பா, அம்மா என்பது நீங்களாக இல்லாமல்போகலாம். குழந்தைகள் முன் எதைச் செய்தாலும் அவற்றைக் கவனித்துச்செய்ய வேண்டிய பொறுப்பு உங்களிடம் இருக்கிறது என்பதை நினைவில்கொள்ளுங்கள்.
43. விமர்சகராக நீங்கள் இருந்தால், விமர்சிக்கும் பழக்கமும் உங்களிடமிருந்தே குழந்தைகளுக்கும் தொற்றிக்கொள்ளலாம். இதுவே, பின்னாளில் குழந்தைகள் புறம்பேசுவது, மற்றவர்களை விமர்சிப்பது, குறைத்து மதிப்பிடுவது போன்ற செயல்களில் ஈடுபடக் காரணமாகலாம்.
கூடி வாழச் சொல்லிக்கொடுங்கள்!
44. அவசர உலகில் கூட்டுக் குடும்பம் என்பது எல்லா இடங்களிலும் சாத்தியம் ஆகாது. ஆனால், வருடத்துக்கு இருமுறையாவது உறவுகள், நண்பர்களுடன் சேர்ந்து வெளியில் நேரம் செலவழிப்பது நல்லது. கூடியிருக்கும் தருணங்களில் ஏற்படும் மகிழ்ச்சி, பகிர்தல், அன்பு செலுத்துதல், உறவுகளின் மதிப்பு போன்றவற்றை குழந்தைகள் எளிதில் உணர, இது ஒரு வாய்ப்பாக அமையும்.
45. டி.வி., வீடியோ கேம், செல்போன் பயன்பாட்டைக் குறையுங்கள். புதிய தொழில்நுட்பங்களைச் சிறு வயதிலே தெரிந்துகொள்வது நல்லதுதான். ஆனால், அதுவே அவர்களின் உலகமாக மாறிவிடக் கூடாது. பின்னாட்களில் சிறு வயதில் விளையாடக்கூடிய விளையாட்டுக்கள், அதன் மூலம் கிடைக்கும் அனுபவங்கள் இல்லாமல், தனித்து வாழப் பழகிக்கொள்ள நேரிடும்.
46. சாப்பிடும் முன்னர், சாப்பிட்ட பிறகு, மலம், சிறுநீர் கழித்த பிறகு கை கழுவ வேண்டியதன் அவசியத்தைச் சொல்லிக்கொடுக்க வேண்டும். தும்மல் வந்தால், கைகுட்டையால் மூட வேண்டும், பொது இடங்களில் மூக்கை நோண்டுவது, வாயில் கைவைப்பது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும் என்பன போன்ற அடிப்படை பர்சனல் ஹைஜீனை அவசியம் கற்றுக்கொடுக்க வேண்டும்.
டின்னர் டைம்… ஃபேமிலி டைம்!
47. பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்லும் சூழலில் நாம் இருக்கிறோம். குழந்தைகளோடு அதிகம் நேரம் செலவழிக்க இயலவில்லை. பலரும் அவர்களது குழந்தைகளுக்கு நேரத்தைக் கொடுக்காமல், பரிசுப் பொருட்களையும் நொறுக்குத்தீனிகளையும் வாங்கித் தருகின்றனர். உண்மையில், குழந்தைகளுடன் நேரம் செலவழிப்பதுதான் முக்கியம். பரிசுப் பொருட்களோ, தின்பண்டமோ அதற்கு இணையாகாது.
48. பேசவோ, இணைந்து செயல்படவோ டின்னர் டைமை ஃபேமிலி டைமாக மாற்றிக்கொள்வது நல்லது. அன்றைய நாளில் அவர்கள் என்னென்ன செய்தார்கள் என்பதை இரவில் பேசித் தெரிந்துகொள்ளுங்கள்.குழந்தைப் பருவத்தில் நடக்கும் விஷயங்கள்தான், அவர்களின் வாழ்க்கையையே வடிவமைக்கும்.
அதிகாலையில் எழும் பழக்கம்
49. காலையில் எழுந்திருப்பதுதான் இன்று நிறைய பேருக்கு முடியாத காரியம். சிறு வயதில் பழகத் தவறிவிட்டதால் ஏற்படும் சிக்கல் இது.
சிறு வயதிலிருந்தே ‘முன் தூங்கி முன் எழும்’ பழக்கத்தை மேற்கொண்டால், பெரியவர்களானதும் சோம்பலைத் தவிர்க்க முடியும். அதிகாலை எழும் பழக்கம், உடலுக்கு ஆரோக்கியத்துடன், மனதுக்கு அமைதியையும் தரும். உடலின் கடிகார சுழற்சி சீராக இயங்கும். நோயின்றி ஆரோக்கியமாக வாழ உதவும்.
விளையாட விடுவது
50. பெரியவர்களுக்கு எப்படி உடற்பயிற்சி செய்வது முக்கியமோ, அதுபோல் குழந்தைகளுக்கு விளையாட்டு முக்கியம். வளரும் குழந்தைகளுக்கு விளையாட்டு என்பது அவசியம். மன வளர்ச்சிக்கும், உடல் வளர்ச்சிக்கும் விளையாட்டு நல்லது. ஓடியாடி விளையாடும்போது அவர்களின் சிறு வயதிலேயே உடல்பருமனாக மாறுவது தடுக்கப்படும்.
ஆரோக்கியமான உணவுப் பழக்கங்கள்
51. காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிக்கலாம்.
52.’காலை உணவு கட்டாயம்’ என்ற விதியை அனைவரும் பின்பற்ற வேண்டும். காலை உணவில், மாவுச்சத்து, நார்ச்சத்து, புரதம், கொழுப்பு, கால்சியம் போன்ற சமச்சீர் சத்துக்கள் இருப்பது, அந்த நாளின் தொடக்கத்தை உற்சாகமாக ஆக்கும். அன்றைய நாளுக்குத் தேவையான ஆற்றல் கிடைக்கும்.
53. காலையில் சாப்பிட்ட உணவில் கால் பங்கைக் குறைத்து, மதிய உணவாகச் சாப்பிடுங்கள். இரவு உணவை எளிமையாகச் சாப்பிடப் பழகுங்கள். பெரும்பாலும், இரவு உணவை சைவமாக மாற்றிக்கொள்வது நல்லது. ஏனெனில், அசைவ உணவுகள் செரிக்கத் தாமதமாகும்.
54. வேலைசெய்யும் இடத்தில் உங்களுக்கு அருகில், ஒரு வாட்டர்கேனில் நீர் நிரப்பிவைத்துக்கொண்டு தேவைப்படும்போது நீர் அருந்துங்கள்.
55. ஜங்க் ஃபுட்டுக்குப் பதிலாக, ஹெல்த்தி ஃபுட்ஸை சாப்பிடப் பழகுங்கள். சிப்ஸுக்குப் பதிலாக நட்ஸ், சமோசாவுக்குப் பதிலாக சுண்டல் போன்ற மாற்றங்களைச் செய்யுங்கள்.
56. தினமும் நீங்கள் சாப்பிடுகிற உணவில், ஒரு கப் எக்ஸ்ட்ரா காய்கறிகளைச் சேர்த்துச் சாப்பிடுங்கள்.
57. மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு, பச்சை என ஒவ்வொரு நிறத்தாலும் ஆன காய்கறிகளைக்கொண்டு பிளேட்டை வண்ணமயமாக்குங்கள். இது உங்கள் ஆரோக்கியத்தையும் பலப்படுத்தும்.
58. காபி, டீக்குப் பதிலாக சுக்கு காபி, மூலிகை டீ, கிரீன் டீ, செம்பருத்தி டீ, துளசி டீ, ஆவாரம் பூ டீ போன்ற ஹெல்த்தி சாய்ஸுக்கு மாறலாம்.
59. ஒரே நேரத்தில் அதிகப்படியாகச் சாப்பிடுவதைத் தவிர்த்துவிட்டு, சின்னச் சின்ன மீல்ஸாகப் பிரித்து, ஐந்து அல்லது ஆறு வேளையாகச் சாப்பிடலாம். இதனால், அதீதப் பசி ஏற்படாது. ரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென அதிகரிப்பதும் கட்டுப்படுத்தப்படும்.
60. அசைவ உணவுகளைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் தேவை. தோல் நீக்கப்பட்ட இறைச்சி, பதப்படுத்தப்படாத ஃப்ரெஷ் இறைச்சி ஆகியவற்றைப் பயன்படுத்தலாம். ‘ரெடி டு மேக்’ எனும் ரெடிமேட் மற்றும் உடனடியாகச் சமைக்கப்படும் இறைச்சிகளைத் தவிர்க்கலாம்.
61. இனிப்பான பொருட்களைச் சாப்பிடத் தோன்றினால், சாக்லேட், கேக் எனத் தேர்ந்தெடுக்காமல், கடலை உருண்டை, எள்ளுருண்டை, கருப்பட்டி, வெல்லம் மற்றும் நாட்டுச்சர்க்கரை போன்றவற்றால் தயாரிக்கப்பட்ட உணவுகளைச் சாப்பிடுங்கள்.
62. ஒன்பது மணிக்கு மேல் சமையலறையில் வேலைசெய்யவோ, உணவு தயாரிக்கவோ முடியாது என்ற விதிமுறையை அமல்படுத்துங்கள்.
63. சர்க்கரை, உப்பு போன்ற வெள்ளைப் பொருட்களுக்கு விடை கொடுத்துவிட்டு, நிறங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம். வெள்ளைச் சர்க்கரைக்குப் பதிலாக நாட்டுச்சர்க்கரை, வெள்ளை அரிசிக்குப் பதிலாக கறுப்பு, பிரவுன், சிவப்பு அரிசி, பிராய்லர் கோழிக்குப் பதிலாக நாட்டுக்கோழி, வெள்ளை முட்டைக்கு பதிலாக நாட்டுக்கோழி முட்டை எனத் தேர்ந்தெடுத்துச் சாப்பிடலாம்.
64. உணவை நன்கு மென்று ருசித்து, கவனித்து உண்ணும் பழக்கம் இன்று பெரும்பாலானோருக்குக் கிடையாது. ‘நேற்று இரவு என்ன சாப்பிட்டீங்க?’ என்று கேட்டால், எத்தனை பேரால் சொல்ல முடியும். பசி என்ற காரணம் இருப்பதால், அந்தந்த வேலைக்கு வயிற்றை மட்டும் நிரப்பிக்கொள்கிறோம். இனியாவது, உணவை ரசித்து, ருசித்து சாப்பிடத் தொடங்குவோம்.
65. எண்ணெயில் பொரித்த உணவுகளை அளவாகச் சாப்பிடுங்கள். அப்படி அளவாகப் பயன்படுத்தும் எண்ணெயும் ஆரோக்கியமானதாக இருக்கட்டும். நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் போன்றவை செக்கில் ஆட்டப்பட்டவையாக (Cold Pressed) இருப்பது நல்லது. தயாரிக்கும்போது மீண்டும் மீண்டும் சூடுபடுத்தப்படாத எண்ணெய், செக்கில் ஆட்டி எடுத்த எண்ணெய்தான் உடலுக்கு உகந்தது.
ஃபிட்னெஸ் பழக்கங்கள்
66. ஒரு நாளைக்கு அரை மணி நேரம் நடப்பது ஆரோக்கியமான நற்பழக்கம். நடைப்பயிற்சி செய்வது போர் அடித்தால், இசையைக் கேட்டுக்கொண்டே நடப்பது, செருப்பு இல்லாமல் கூழாங்கற்களில் நடப்பது, ஒரு நாள் பூங்காவில் நடந்தால், மறுநாள் கடற்கரையில் நடப்பது எனச் சூழலை மாற்றிக்கொண்டே இருந்தால், நடைப்பயிற்சி என்பது பயிற்சியாக இல்லாமல் நடைப்பழக்கமாக மாறிவிடும். பயிற்சி என்பதுதான் கடினம், பழக்கம் என்று மாறிவிட்டால் அது அன்றாடச் செயலாக மாறிவிடும்.
ஒரு மணி நேரத்துக்கு ஒரு பிரேக்!
67. ஒரு நாளைக்கு 8 மணி நேரத்துக்கு மேல் உட்கார்ந்து வேலைசெய்யும் சூழலில் இருக்கிறோம். அவ்வப்போது அந்த நிலையை மாற்றிக்கொள்வதற்கு, ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை 10 நிமிடங்களுக்கு பிரேக் எடுத்துக்கொள்ளுங்கள்.
உடலுக்கு ஏதாவது அசைவுகளைக் கொடுங்கள். உட்கார்ந்து எழுந்திருப்பது, சோம்பல் முறிப்பது, அருகில் நடப்பது போன்ற அசைவுகளைக் கொடுத்தால், நீண்ட நேரம் உட்கார்ந்து வேலைசெய்வதால் ஏற்படும் பாதிப்புகள் குறையும்.
பயிற்சியைத் திட்டமிடுங்கள்!
68. அவரவர் உடல்நிலைக்கு ஏற்ப பயிற்சிகள் மாறுபடும். எனவே, ஒருவர் செய்வதையே எல்லோரும் செய்ய வேண்டும் என்பது இல்லை. உடற்பயிற்சியாளரிடம் ஆலோசனை பெற்று பயிற்சிகளைத் திட்டமிட வேண்டும்.
`விதிமுறைகள் நிறைந்த பயிற்சிகளை என்னால் செய்ய முடியாது. எனக்கு அதற்கான நேரம் கிடையாது’ என்று சொல்பவர்கள்கூட, மாடியிலோ, வீட்டு பால்கனியிலோ செடிகளை வளர்ப்பது, அதற்கான வேலைகளைச் செய்வதில் ஈடுபடலாம்.
69. பாட்டு கேட்டுக்கொண்டே சமைப்பது, வேலைசெய்வது என உற்சாகப்படுத்திக்கொள்வதும் மனவளப் பயிற்சிதான்.
70. லிஃப்ட்டில் ஏறாமல் படிக்கட்டுகளைப் பயன்படுத்தலாம். பாட்டைப் போட்டு வீட்டிலேயே ஏரோபிக் பயிற்சிகளைச்செய்யலாம்.
71. எப்போதும் சேர், சோஃபாவிலேயே உட்காராமல் தரையில் உட்கார்ந்து பழகலாம். டைனிங் டேபிளைத் தவிர்த்து, தரையில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து, உணவு உட்கொள்ளும் பழக்கத்துக்கு மாறலாம்.
ஆரோக்கியமான எண்ணங்கள்
72. ஒரு நாளில், அன்றைக்கு நீங்கள் மகிழ்ச்சியாக இருந்த தருணத்தை இரண்டு நிமிடங்களுக்கு நினைத்துக்கொள்ளுங்கள். இப்படி, மகிழ்ச்சியான நினைவை நீங்கள் ஈர்க்கும்போது, மகிழ்ச்சியான உணர்வுகள் உங்களுக்கு அதிகமாகக் கிடைக்க ஆரம்பிக்கும்.
73. சமீபத்தில் நீங்கள் செய்த தவறுகள், தோல்விகள் போன்றவற்றை நினைத்து, அதில் நீங்கள் கற்றுக்கொண்ட பாடத்தை இனி எடுக்கும் முயற்சிகளில் சரிவரச் செய்யுங்கள்.
74. `நோ’ சொல்ல வேண்டிய இடங்களில், `நோ’ சொல்லத் தயாராகுங்கள். பிடிக்காத விஷயங்களில் உங்களை நீங்களே சிரமப்படுத்திக்கொண்டு எந்த வேலையிலும் ஈடுபட வேண்டாம்.
75. உங்களைத் திடமாக்குகிற, அறிவை மேம்படுத்துகிற டி.வி சேனல்கள், நாளிதழ்கள், பத்திரிக்கைகளை வாசிக்கலாம்.
76. பகல் கனவைக் காண தினமும் 10 நிமிடங்களை ஒதுக்குங்கள். நீங்கள் எப்படியாக வேண்டும் என்பதை பகல் கனவாகக் காணுங்கள்.
77. மூளைக்குப் பயிற்சியாக குறுக்கெழுத்து விளையாட்டு, சுடோகு போன்ற விளையாட்டுகளை விளையாடலாம்.
78. நேர்மறையாகப் பேசக்கூடிய நண்பர்கள், உற்சாகப்படுத்தும் பாசிட்டிவ் நண்பர்களோடு பேசிப் பழகலாம்.
எதிர்மறை எண்ணங்களை எப்படிப் போக்குவது?
79.ஒரு நாளைக்கு எத்தனை முறை எதிர்மறை எண்ணங்கள் (Negative thoughts), உதிக்கின்றன எனக் கவனிக்கத் தொடங்குங்கள். எதற்கு எல்லாம் எதிர்மறை எண்ணங்கள் தோன்றுகின்றன எனக் கவனித்துப் பட்டியலிடுங்கள்.
அடுத்தமுறை, இதுபோல எதிர்மறை எண்ணங்கள் தோன்றும்போது, நேர்மறை எண்ணங்களைத் தோன்றச்செய்து, எதிர்மறை எண்ணங்களுக்கு முற்றுப்புள்ளிவையுங்கள்.
உதாரணத்துக்கு, `எனக்கு வேலை கிடைக்குமா? எனக்கு என்ன தகுதி இருக்கு… இந்த வேலையைச் செய்ய?’ போன்ற எண்ணங்கள் தோன்றினால், உடனே `எனக்கு இந்த வேலை கிடைக்கும். அதற்கான தகுதியை வளர்த்துக்கொள்வேன்’ என நினைக்கப் பழகுங்கள். நினைப்பதோடு நிறுத்திவிடாமல், அதற்கான முயற்சிகளையும் எடுங்கள்.
80. ஒவ்வொரு நாள் தொடக்கத்திலும்
நான் நன்மைகளைதான் செய்யப்போகிறேன்.
ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
இன்றைய நாள் எனக்கு அதிர்ஷடத்தைத் தரக்கூடிய நாள் என்பன போன்ற நல்ல எண்ணங்களோடு, அந்த நாளைத் தொடங்குங்கள்.
81. தினமும் ஐந்து நிமிடங்களை, கற்பனைத் திறனுக்காகச் செலவிடுங்கள். அதாவது, விருப்பமான பொருள் கிடைத்துவிட்டால், எவ்வளவு சந்தோஷப்படுவோமோ அப்படி ஒரு பொருள் கிடைத்துவிட்டதாக கண்மூடி நினைத்து மகிழ்ச்சி அடையுங்கள்.
இப்படி, ஒவ்வொரு நாளும் நேர்மறை எண்ணங்களோடு வாழப் பழகிக்கொண்டால், வாழ்க்கையில் உங்களுக்குக் கிடைப்பன எல்லாமே ரிப்பன் கட்டப்படாத பரிசுகளாக அமையும்.
மனம் தொடர்பான பழக்கங்கள்
82.தினமும் தியானம் அல்லது யோகா போன்றவற்றை காலையோ, மாலையோ செய்யலாம். உங்களின் உணர்வுகளை உங்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருங்கள்.
83. மிட்-மார்னிங், மிட்- ஈவினிங் வேளைகளில் சில நிமிடங்கள் கண்மூடி, ஆழ்ந்த சுவாசத்தில் ஈடுபடுங்கள். இது உங்களின் உடல் மற்றும் மனதுக்கான ஓய்வைத் தரும்.
84. மோசமான உணர்வுகளை ஏற்படுத்தும் உணவுகளை அறவே தவிர்த்துவிடுங்கள். காபி, டீ அதிகம் குடித்தால், பின்விளைவாக அதிகக் கவலை, மன அழுத்தம் ஏற்படும். உள்ளுறுப்புகள் பாதிப்பதால், சோர்ந்துபோன உணர்வு ஏற்படும்.
85. மன அழுத்தத்தை உணர்ந்தால், அதற்கான காரணத்தைத் தெரிந்துகொண்டு, அதைச் சரிசெய்யும் முயற்சியில் ஈடுபடுங்கள்.
86. இயற்கையை ரசிக்கிற பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். காலை சூரியன், அந்தி மாலை, மழை, தென்றல், கடல், புல்வெளி, பறவைகள், மலைகள் போன்ற இடங்களுக்குச் சென்று, அங்கு நேரத்தைச் செலவழிக்கத் திட்டமிடுங்கள்.
87. மற்றவர்களுக்கு உணவைப் பரிமாறுவது சிறந்த பழக்கம். அதுபோல, பகிர்ந்து உண்ணுதலும் சிறப்பான குணம்.
88. ஃபன்னி வீடியோஸ், கலகலப்பான நிகழ்ச்சிகள், ஜோக்ஸ், குழந்தைகளின் விளையாட்டு போன்ற சிரிக்கவைக்கும் நிகழ்ச்சிகளைப் பாருங்கள்.
89. பர்சனாலிட்டி டெவலப்மென்ட் பழக்கங்கள்
உங்களுக்கான வேலைகள் என்னென்ன என்ற பட்டியலைப் போடுங்கள். அதை நோக்கி அன்றைய நாளைத் திட்டமிடுங்கள். அந்த நாளின் முடிவில் `எதைச் செய்தோம்… எதைத் தள்ளிவைத்தோம்… எதை முடிக்கவில்லை’ என்ற குறிப்பை எடுத்துக்கொள்ளுங்கள். இந்தப் பழக்கம் உங்களின் வேலையைச் சரிவர செய்ய உதவும்.
காலையில் நாளிதழ்களைப் படிக்கும்போது, உங்களை உற்சாகப்படுத்தும் வாசகம் அல்லது தன்னம்பிக்கை தரும் வாசகத்தைப் படிக்கலாம்.
‘எது நடந்து இருந்தாலும் சரி, நடக்க இருக்கிறதும் சரி நன்மைக்காகவே’ என நினைக்கப் பழகிக்கொள்ளுங்கள். உங்களது மைண்ட்செட்டை எப்போதும் பாசிட்டிவ்வாக மாற்றிக்கொள்ளுங்கள்.
எந்த வேலையையும், தள்ளிப்போட வேண்டாம். இதை ப்ரொகாஸ்டினேஷன் (Procastination) என்று சொல்வார்கள். `நாளை செய்துகொள்ளலாம்’ எனத் தள்ளிப்போடும்போது, அன்றைய நாளின் தோல்விகள் உறுதியாகும். எனவே, தாமதிக்காமல் அன்றாட வேலைகளைச்செய்ய முயற்சி எடுப்பது நல்லது.
90. கற்றுக்கொள்ளும் திறன்கள்
நிறைய மனிதர்களிடம் பேசுங்கள். ஒவ்வொருவரிடம் ஏதாவது ஒரு நல்ல விஷயம், நாம் கற்றுக்கொள்வதற்கு இருக்கும். அதை அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளலாம்.
ஒவ்வொருவரிடமும் நிறையும் குறையும் இருக்கும். அதில் உங்களுக்குத் தேவையான நிறைகளை மட்டும் எடுத்துக்கொண்டு, குறைகளைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுங்கள். மற்றவர்களை விமர்சிக்கும் உரிமை நமக்குக் கிடையாது.
ஒவ்வொரு நாளும் ஒரே வேலையைச்செய்து போர் அடித்தால், ஒரு நாள் வீட்டைச் சுத்தப்படுத்துவது, குழந்தைகளுக்குப் படிப்பு சொல்லித்தருவது, சமைப்பது போன்ற செயல்களில் ஈடுபடலாம்.
சமைக்கத் தெரியாதவர்கள் சமைக்கக் கற்றுக்கொள்ளலாம். வண்டி ஓட்டத் தெரியாதவர்கள், ஓட்டிப் பழகலாம்.
முதலுதவி வகுப்பு எத்தனை பேருக்குத் தெரியும்? இதைத் தெரிந்துவைத்தால் உங்களுக்கோ அல்லது உங்களைச் சுற்றி இருப்பவருக்கோ ஏதேனும் ஆபத்து வந்தால், அவற்றைச் சமாளிக்கும் திறன் உங்களிடம் இருக்கும். முதலுதவி, நீச்சல் போன்ற வாழ்வியல் திறன்களைக் கற்றுக்கொள்வது நல்லது.
தொழில்நுட்பங்கள், நீச்சல், யோகா, நான்கு சக்கர வாகனம் ஓட்டுவது, சமீபத்தியத் தகவல்கள், ஆன்லைனில் பில் கட்டுவது போன்ற சின்னச் சின்ன வேலைகளை எப்படிச்செய்வது என்பதே சிலருக்குத் தெரியாது. இதற்குத் தங்கள் பிள்ளைகளை நம்பியே இருப்பர். இதுபோன்ற தேவைகளுக்கு யாரையும் நம்பி இருக்காமல், தானே முன்வந்து கற்றுக்கொள்வதும் நல்ல பழக்கம்தான்.
வீட்டில் உள்ள ட்யூப்லைட்டில் ஃபியூஸ் போனால்கூட எலெக்ட்ரீஷியனை அழைத்து வந்து பார்க்காமல், சின்னச்சின்ன வேலைகளைத் தாங்களே எப்படிச் செய்வது எனத் தெரிந்துகொள்ளலாம்.
தூசிதட்டி சேமித்துவைத்திருந்த ஆசைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றலாம்.
மாதம் ஒரு புத்தகத்தைப் படித்து முடித்துவிடுங்கள். இரண்டு புதிய திரைப்படங்களைப் பாருங்கள். படங்கள் என்பது நமக்குத் தெரிந்த மொழியில்தான் இருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. தற்போது சப்டைட்டில்கள் அடங்கிய வேறு மொழிப் படங்களும் வருகின்றன. அவற்றில் சிறந்த படங்களைப் பார்க்கலாம். இது புதுவித அனுபவத்தைத் தரும். நல்ல நினைவுகளை உருவாக்கலாம்; படத்தில் இருக்கும் சின்ன மெசேஜ்கூட உங்களின் வாழ்க்கைக்கு உதவலாம்.
91.தொடர்பில் இருங்கள்!
எத்தனை பேருக்கு அவரவர் வீட்டு உறுப்பினர்களின் தொலைபேசி எண்கள் தெரியும், வீட்டு உறுப்பினர்களின் பிறந்த நாள் தேதிகள் நினைவில் இருக்கும்? இதை எல்லாம் ஒரு டைரியில் எழுதிவைத்து அவ்வப்போது திறந்து பாருங்கள். விருப்பமானவரின் பிறந்த நாளை மறக்காமல், அவருக்கு ஒரு வாழ்த்தைச் சொல்லுங்கள். உரிய நேரத்தில் சொல்லப்படும் ஒரு வாழ்த்து, அளவு கடந்த மகிழ்ச்சியைத் தரும்; நல்லுறவை மேம்படுத்தும்.
பெர்சனல் ஹைஜீன் பழக்கங்கள்
92. சாப்பிடுவதற்கு முன்னரும் பின்னரும் கை கழுவும் பழக்கம் நல்லது. ஒவ்வொரு முறை ரெஸ்ட் ரூம் பயன்படுத்திய பிறகும், கை கழுவும் பழக்கத்தைத் தொடர்ந்து பின்பற்றுங்கள். ரெஸ்ட்ரூம் கதவுகள், கைப்பிடிகள், டேப் போன்றவற்றை இடதுகையால் பயன்படுத்துங்கள். பொது இடங்களில் கை குலுக்கும் பழக்கம் இருப்பது சகஜம். அதை மனதில் நினைத்து நமது சுகாதாரப் பழக்கத்தைச் சீர்படுத்திக்கொள்ளவும்.
93.காலை எழுந்ததும் பெட் காபி குடிக்கும் பழக்கம் பலருக்கும் இருக்கலாம். இரவு முழுதும் வாயில் சேர்க்கப்பட்ட கிருமிகள், காபியின் வழியே வயிற்றுக்குள் சென்றால், தொண்டை, உணவுக்குழாயில் தொற்றுக்கள் ஏற்படும். பற்களை, வாயை சுத்தப்படுத்திய பிறகுதான், நீரையோ அல்லது மற்ற உணவுகளையோ சாப்பிட வேண்டும். கடைகளில் காபி, டீ கப்களை வலது பக்கம் பிடிக்காமல், இடது பக்கம் பயன்படுத்தி அருந்துவது ஒரளவு பாதுகாப்பைத் தரும். ஏனெனில், பலரும் வலது பக்கத்தில் வைத்துதான் காபி, டீ யைச் சுவைத்திருப்பார்கள்.
ஒருவரது செல்போன், இயர் ஃபோன் போன்றவற்றைப் பயன்படுத்தத் தந்தால்கூட, ஒருமுறை துடைத்து விட்டுக் கொடுப்பதுதான் சரி. அதுபோல் ஒவ்வொரு பொருட்களையும் மற்றவரிடம் கொடுப்பதற்கு முன் ஒரு முறை சுகாதாரத்தைப் பரிசோதித்துக்கொள்ள வேண்டும்.
94. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பல் தேய்க்கும் பிரஷை மாற்றவும். அதுபோல் அன்றாடம் பயன்படுத்தும் சீப்பை வாரம் ஒருமுறை கழுவலாம். வீட்டில் உள்ள அனைவரும் ஒரே சோப்பைப் பயன்படுத்தக் கூடாது. அதுபோல், கைக்குட்டை, துண்டு போன்றவற்றைத் தனியாக வைத்துக்கொள்வது அவசியம். ஹோட்டலில் வைக்கப்படும் ஹேண்ட் டவல்கள் எந்த அளவுக்குச் சுகாதாரமாக இருக்கின்றன என்று தெரியாது. ஆகையால், டிஷ்யூவைப் பயன்படுத்துவதே சிறந்தது.
95. ஹோட்டலில் சாப்பிட்ட பின் வைக்கும் இனிப்பு மிட்டாய்களைத் தவிர்த்துவிடுங்கள். அதில், பெரும்பாலானோர் கைவைத்து எடுத்திருக்கலாம். பொதுக் கழிப்பறைகளைப் பயன்படுத்திய பின், லிஃப்ட் பட்டன்கள், ஏ.டி.எம் மெஷின் பட்டன்கள், ரூபாய் நோட்டுக்கள் போன்றவற்றைத் தொட்ட பிறகு கை கழுவிக்கொள்வது நல்லது. எல்லா இடங்களிலும் தண்ணீரைத் தேடிக்கொண்டிருக்க முடியாது. எனவே, கைகளிலேயே ஹேண்ட் சானிடைசர் வைத்திருக்கலாம்.
96. வீட்டைச் சுத்தம் செய்யும்போது அதிகம் கவனிக்காத இடங்களான சோஃபா மூலைகள், சுவிட்ச் போர்டு, ரிமோட், கைப்பிடிகள், கம்ப்யூட்டர் கீ போர்டு, வாட்டர் கேன் மூடி, திரைச்சீலைகள் ஆகியவற்றையும் சுத்தம் செய்ய வேண்டும்.
97. நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழக் கடைப்பிடிக்க வேண்டிய 5 பழக்கங்கள்
தினமும் அரை மணி நேர் நடைப்பழக்கம்.
காலை எழுந்ததும் பல் துலக்கிய பிறகு நீர் ஆகாரத்தைக் குடிப்பது.
தினமும் ஒரு புதிய நண்பரை உருவாக்குவது.
தியானம் அல்லது யோகாவுக்கு நேரம் ஒதுக்குவது.
பெரும்பாலும் உங்களது உணவு காய்கறி, பழங்கள், பயறு, பருப்பு வகைகளால் தயாராகி இருப்பது.
98. புற்றுநோய் தவிர்க்க ஐந்து வழிகள்
வேகவைத்த காய்கறிகளை ஒருவேளை உணவாகச் சாப்பிடுவது. பழங்களையும், நட்ஸ்களையும் நொறுக்குத்தீனியாகச் சுவைப்பது.
மூலிகை டீ, கீரை சூப், மூலிகை ரசங்களை அவ்வப்போது சாப்பிடுதல்.
குடி, புகைப் பழக்கங்கள் இல்லாமல் இருத்தல.
முன் தூங்கி முன் எழும் பழக்கம். எட்டு மணி நேரம் சீரான தூக்கத்தைக் கடைப்பிடித்தல்.
எண்ணெயில் பொரித்த உணவுகளை அறவே தவிர்ப்பது.
99. தீய பழக்கங்களைக் கைவிட ஐந்து வழிகள்
தீய பழக்கங்களை விட வேண்டும் என டைரியில் எழுதிவையுங்கள். மனதில் பத்து முறை அடிக்கடி சொல்லிப்பாருங்கள்.
எந்தச் சூழல் உங்களைத் தீய பழக்கங்களுக்கு இழுத்துச் செல்கிறதோ, அந்தச் சூழலைத் தவிர்த்திடுங்கள்.
எந்தச் சூழலிலும் எடுத்த முடிவில் பின்வாங்காமல், ஒவ்வொரு தீய பழக்கத்தை விடும்போதும், உங்களுக்கு நீங்களே பரிசுப் பொருட்களை வாங்கி, உற்சாகப்படுத்திக்கொள்ளுங்கள்.
தனிமையாக இருப்பதைத் தவிர்த்தாலே, தீய பழக்கங்களை வெகு சீக்கிரத்தில் விட முடியும்.
விருப்பமானவர்கள், குழந்தைகளுடன் அதிக நேரத்தைச் செலவுசெய்யுங்கள்.
100. மகிழ்ச்சியாக இருக்க ஐந்து வழிகள்
மனதுக்குப் பிடித்த செயல்களைச் செய்யுங்கள்.
கிடைக்கும் நேரத்தை இயற்கையுடன் செலவழியுங்கள்.
உங்களுக்கு நடந்த நல்ல அனுபவங்களைத் தினந்தோறும் எழுதுங்கள்.
வாய்விட்டு சிரிப்பதால் எண்டோர்பின் சுரக்கும்; இது மகிழ்ச்சியான உணர்வை உண்டாக்கும்.
பாசிட்டிவ்வாகப் பேசும் நண்பர்கள், உறவினர்களோடு அதிகமான நேரத்தைச் செலவழியுங்கள்.