காலையில் பீச், பார்க் செல்பவர்களுக்குத் தெரியும், ‘ஜே ஜே’ என்று வாக்கிங், ஜாகிங் செல்பவர்களின் திருவிழாக் கூட்டம் பற்றி! ஃபிட்னெஸ்க்காக வாக்கிங் செய்பவர்களை விட, உடல் எடை குறைய வேண்டும் என்று வாக்கிங் செய்பவர்கள்தான் அதிகம். உடல் எடை குறைந்து, பார்க்க ஃபிட்டாக இருக்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் உள்ளது. இதற்காக ஆயிரக்கணக்கில், ஏன் லட்சக்கணக்கில் செலவு செய்து விலை உயர்ந்த ஃபிட்னெஸ் கருவிகள் வாங்குதல், டயட்டில் இருத்தல் போன்ற முயற்சிகளில் ஈடுபடுபவர்கள் பலர். உடற்பயிற்சி, டயட் கட்டுப்பாடு இன்றி உடல் எடையைக் குறைக்கலாம் என்று கூறும் விளம்பரங்களை நம்பி ஏமாறுபவர்களும் உண்டு. ‘உடல் எடையைக் குறைப்பது என்ன அவ்வளவு கஷ்டமான காரியமா?” என்று சென்னையைச் சேர்ந்த உடல் பருமன் குறைப்பு ஆலோசகர் டாக்டர் சுனிதா ரவியிடம் கேட்டோம்.
‘இல்லவே இல்லை… நம் அன்றாட வாழ்க்கையில் சில விஷயங்களைக் கண்டிப்பாகப் பின்பற்றினாலே போதும்… ‘வெயிட் லாஸ்’ என்பது ரொம்ப ஈஸி” என்ற டாக்டர் சுனிதா, ஒவ்வொன்றாக விளக்கினார்.
நாம் சாப்பிடப் பயன்படுத்தும் தட்டு பெரியதாக இருக்கும்போது, அதிக அளவில் உட்கொள்கிறோம். 12 இன்ச் தட்டைப் பயன்படுத்துபவராக இருந்தால், அதற்கு பதில் 10 இன்ச் தட்டைப் பயன்படுத்துங்கள். அப்போது தட்டில் எடுத்துக்கொள்ளும் உணவின் அளவும் குறையும். மிகச்சிறிய விஷயம்தான், ஆனால் ஒரு நாளைக்கு 100 முதல் 200 கலோரி வரை இதன் மூலம் குறைக்க முடியும். ஒரே வருடத்தில் ஐந்து முதல் 10 கிலோ வரையில் உடல் எடையைக் குறைக்கலாம். நீல நிறத் தட்டைப் பயன்படுத்துங்கள். நீல நிறம் பசியை அடக்கும் தன்மை கொண்டது. சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு நிறங்கள் பசியைத் தூண்டக்கூடியது.