எந்த ஒரு செயலை எடுத்துக்கொண்டாலும் அது வெற்றி பெற முதலில் அந்த செயல் குறித்த புரிதல் அவசியம்.
வாழ்க்கையில் வெற்றி பெற என்ன வழி
வாழ்க்கையில் வெற்றி பெற என்ன வழி என்று பல புத்தகங்கள் பார்த்திருப்போம், வாழ்க்கை என்ன பரிட்சையா அல்லது போட்டியா, ஏன் வெற்றி பெற வேண்டும். வாழ்வின் வெற்றி என்பது என்ன? பொருள் சேர்ப்பதா? புகழடைவதா? அப்படி என்றால் மிகப்பெரும் பணக்காரர்கள் எல்லோரும் வெற்றி பெற்றதாக ஆகிவிடுமா? புகழடைந்தவர்கள் அனைவரும் வெற்றி பெற்றவர்கள் எனில் மற்ற சாமான்னிய மனிதர்கள் எல்லோரும் தோல்வி அடைந்தவர்களா? புகழின் உச்சியில் இருப்பவர்க்கும் வாழ்க்கையில் பல சிக்கல்கள் இருப்பதை நாம் கேள்விபட்டிருக்கிறோம். ஏழு தலைமுறைக்கும் பணம் சம்பாதித்து பொருள் சேர்த்தவர்களும் வாழ்வில் ஏதோ நிறைவின்மையை உணர்கிறார்கள். இது எதனால்? பொருள் சேர்த்த செல்வந்தர்கள் வெற்றி பெற்றுவிட்டதாக ஆகும் ஆனால் அவர்கள் ஏன் இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.
வெற்றி என்பது மனிதர்க்கு மனிதர் மாறுபடும். பணம் இல்லாதவனுக்கு பணம் சம்பாதிப்பதுதான் வெற்றி. ஆனால் பணம் இருந்தும் அதை அனுபவிக்க முடியாமல் உடல் பினியால் அவதிபடுபவர்க்கு அதிலிருந்து மீண்டு, ஆரோக்கியமாக வாழ்வதுதான் வெற்றி இப்படி ஒவ்வொருவருக்கும் வெற்றி என்பது அவர்களிடம் இல்லாத ஒன்றை தேடி ஓடுவதே என்றாகிவிடுகிறது.
ஆனால் எல்லோருக்கும் பொதுவான ஒரு வெற்றி இருக்கிறது. அது வாழ்க்கையில் நிறைவாக வாழ்வது, அடுத்தவர்க்கு வழிகாட்டியாய் இருப்பது, பிற உயிர்களை மதிப்பது அவற்றிர்க்கு துன்பம் தராமல் இருப்பது, ஆக மொத்தம் சந்தோஷமாக வாழ்வதும் நம்மை சுற்றி உள்ளவர்களை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வதும்தான் வெற்றிகரமான வாழ்க்கை.
இந்த வெற்றியை அடைய நாம் நம்மை தயார்படுத்திக் கொள்ளவது அவசியம். உடலும், மனதும் தூய்மையாக இருப்பின் நாம் நினைக்கின்ற எந்த காரியத்தையும் செய்து முடிக்கும் வலிமையும், வழியும் தானாக பிறக்கும். எந்த ஒரு செயலை எடுத்துக்கொண்டாலும் அது வெற்றி பெற முதலில் அந்த செயல் குறித்த புரிதல் அவசியம். பின் அதற்கான திட்டமிடல் முக்கியம். இவை இரண்டும் இருந்துவிட்டால் பின் தைரியமாக செயலில் இறங்கலாம்.
சிலர் தனியாக தொழில் செய்து அது நஷ்டமடையும்போது, தன்னைத்தானே நொந்துகொள்வார்கள். நமக்கு நேரம் சரியில்லை, எல்லாம் என் தலைவிதி, எனக்கு எதுவும் சரியாக அமையாது என்று புலம்புவார்கள். இப்படி புலம்புவது எந்த வகையிலும் சரியாகாது. இது மனதிற்கு இன்னும் சோர்வையே ஏற்படுத்தும். இன்னொருமுறை முயற்சிக்கும் எண்ணத்திற்கும் தடையாக இருக்கும். எனவே தோல்வி ஏற்படும்போது, அதை இயல்பாக எடுத்துக்கொள்ள பழக வேண்டும் மன கஷ்டங்கள் இருந்தாலும் மனதிற்குள் நல்ல எண்ணங்களாகவே நினைக்க வேண்டும்.
ஏதோ இந்தமுறை சரியாக வரவில்லை அடுத்த முறை இப்படி நடக்காது என்று தனக்குத்தானே தைரியம் சொல்வதுபோல் நினைக்க வேண்டும். நம் எண்ணங்களுக்கு நம்மைவிட அதிக பலம் இருக்கிறது. இது ஏதோ ஊக்கப்படுத்தும் தத்துவம் என்று நினைக்காதீர்கள், இது விஞ்ஞான பூர்வமாக நிருபிக்கப்பட்ட உண்மை. எனவே எண்ணங்களை எப்போதும், பாஸிட்டிவாக வைத்துக்கொள்வது மிக மிக முக்கியம். அதுவே வெற்றிக்கான சிறந்த வழி.
நாம் சரியாக இருந்தாலும் சூழ்நிலை நமக்கு எப்போதும் சாதகமாக அமைவதில்லை. நம்மை சுற்றி உள்ளவர்கள் நம்மிடம் பேசும்போது அவர்களது சொந்த அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்துகொள்கிறேன் பேர்வழி என்று தேவை இல்லாத பயத்தை நம் மனதில் ஏற்படுத்திவிடுவார்கள். அதை புரிந்துகொண்டு எச்சரிக்கை உணர்வுடன் இருக்க வேண்டும்.
நீங்கள் இந்த இடத்தில் இன்னொன்று கேட்பீர்கள், நம்மை விட வயதில் மூத்தவர்கள், அனுபவஸ்தர்கள் சொல்லும் அறிவுரையை உதாசினப்படுத்த முடியுமா? என்பீர்கள். நிச்சயம் முடியாதுதான். அறிவுரைகள் ஏற்க்கப்பட வேண்டும். அனுபவத்தைவிட ஒரு சிறந்த வழிகாட்டி இருக்க முடியாது. அவர்கள் தரும் அறிவுரையை எடுத்துக் கொள்ளவேண்டும். ஆனால் அதை எந்த அளவிற்கு என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். நம் செயலை தடைசெய்ய சொல்லப்படும் எச்சரிக்கைக்கும் அதை சரியாக வழிநடத்த பயன்படும் அறிவுரைக்கும் வித்தியாசம் இருக்கிறது. அதை கண்டறிய வேண்டும்.
கடைசியாக வெற்றிக்கும் முக்கியமான இன்னொரு விஷயம் ஒன்று இருக்கிறது. அது துணிவு வாழ்க்கையில் சில நேரங்கள் ரிஸ்க் எடுத்துத்தான் ஆக வேண்டும். எதையும் உறுதிப்படுத்திக் கொண்டுதான் பின் முதல் அடி எடுத்துவைப்பேன் என்று நிற்க முடியாது. ஆகவே வருவது வரட்டும் ஒரு கை பார்ப்போம் என்ற துணிவு வேண்டும். “ரிஸ்க் எடுக்காமல் ரஸ்க் சாப்பிட முடியாது”.