ரத்த அழுத்தம் என்பது என்ன?
இதயத்திலிருந்து ரத்தக் குழாய்கள் வழியாக உடல் உறுப்புகளுக்கு அனுப்பப்படும் ரத்த ஓட்டம், இதயத்துக்கு வரும் போது ஒரு குறிப்பிட்ட வேகத்திலும், இதயத்திலிருந்து வெளியேறும் போது வேறு ஒரு வேகத்திலும் செல்லும்; இதுதான் ரத்த அழுத்தம்.
ரத்த அழுத்தம் எப்படி கணக்கிடப்படுகிறது?
பொதுவாக ரத்த அழுத்தத்தை, 120/80 mm hg என்ற அளவில் குறிப்பிடும் போது, இதயம் சுருங்கி ரத்தத்தை வெளியேற்றும் போது ஏற்படுவது, ‘சிஸ்டாலிக்’ அழுத்தம் (120mm hg). ‘டயஸ்டாலிக்’ அழுத்தம் (80 mm hg) என்பது, இதயத்திற்கு வரும் ரத்தம்.
ரத்த அழுத்தத்தை சீராக வைப்பதில் மற்ற உறுப்புகளின் பங்கு என்ன?
சிறுநீரகங்கள், அட்ரினல் சுரப்பிகள், மூளை மற்றும் நரம்பு மண்டலம் போன்றவை ரத்த அழுத்தத்தை சீராக வைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவற்றில் பிரச்னை ஏற்பட்டால் ரத்த அழுத்தம் அதிகரிக்கக் கூடும்.
சீரான ரத்த அழுத்தம் என்பது எவ்வளவு?
உலக சுகாதார நிறுவனத்தின் வரையறையின்படி, 140/90 mm hgக்கு மேல் இருந்தால் அது உயர் ரத்த அழுத்தம். 90/60 mm hgக்கு குறைவாக இருந்தால் குறைந்த ரத்த அழுத்தம்.
உயர் ரத்த அழுத்தத்திற்கான காரணங்கள்?
உடல் பருமன், போதிய உடல் உழைப்பு இல்லாமை, அதிக உப்பு சேர்ப்பது, சிறுநீரகம், இதயம் சார்ந்த பாதிப்புகள், நீரிழிவு, பிறவியிலேயே ரத்தக் குழாய் பாதிப்பு, புகை, மதுப்பழக்கம், மன அழுத்தம், உறக்கமின்மை.
குறைந்த ரத்த அழுத்தத்திற்கான காரணங்கள்?
ரத்த சோகை, வாந்தி, வயிற்றுப்போக்கு போன்றவற்றால் உடலில் நீர் வற்றிப் போவது போன்றவை.
அறிகுறிகள்?
தலை சுற்றல், தலைவலி, மயக்கம், வாந்தி, கண் பார்வை மங்குவது, மூச்சுத்திணறல், கால் வீக்கம், நெஞ்சு வலி, களைப்பு, படபடப்பு போன்றவை.
அறிகுறிகள் தெரியாமலும் இருக்க வாய்ப்புள்ளதா?
சில நோயாளிகளுக்கு அறிகுறிகள் ஏதும் வெளியில் தெரியாது. எதிர்பாராத மயக்கம், பக்கவாதம், மாரடைப்பு ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம்.
பரிசோதனைகள் என்னென்ன?
வழக்கமான பரிசோதனையோடு, ரத்தப் பரிசோதனை, கொலஸ்ட்ரால், நீரிழிவு, அட்ரினல் ஹார்மோன், சிறுநீரில் புரதம் வெளியேறும் அளவு, சிறுநீரக ரத்த நாளங்களில் அடைப்பு உள்ளதா என அறிவதன் மூலமும் ரத்த அழுத்தத்தை தெரிந்து கொள்ளலாம்.
ரத்த அழுத்தம் வராமல் தடுக்க என்ன வழி?
தினமும், 30 முதல், 45 நிமிடம் நடைபயிற்சி, சமச்சீரான உணவு, 6 முதல் 9 மணி நேரத் துாக்கம், மன அழுத்தம் தவிர்ப்பது நல்லது. ரத்த அழுத்தத்திற்கு தொடர் சிகிச்சையும் கண்காணிப்பும் அவசியம்.