மதுவுக்கு எதிரான குரல்கள் இன்று ஓங்கி ஒலிக்கத்தொடங்கி விட்டன. ஆயினும், மது அருந்துவது இன்று ஒரு பேஷன் போல் ஆகிவிட்டது. மதுவால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி அவ்வப்போது வெளிவரும் ஆய்வுகள் சொல்லிக் கொண்டே இருக்கின்றன. மது மயக்கம் எப்படியெல்லாம் மூளையை பாதிக்கிறது என்பதை இந்த ஆய்வு சொல்கிறது.
மதுவுக்கு அடிமையான பலர், ஆரம்பத்தில் நண்பர்களின் வற்புறுத்தலால், சந்தோஷத்தையும், துக்கத்தையும் பகிர்ந்து கொள்வதாகக் கூறி கொஞ்சமாகத்தான் குடிக்கத் தொடங்குகின்றனர். நாளடைவில் அவர்களுக்கே தெரியாமல் மதுவுக்கு அடிமையாகிவிடுகிறார்கள். மதுவினால், உடலில் பாதிப்படையாத உறுப்புகள் எதுவுமே இல்லை. அளவுக்கு அதிகமாக மது குடித்தால், மூளையை பாதித்து, நினைவாற்றல் இழப்பு, குழப்பம், மனப்பிரம்மைகள் ஏற்படவும், இதயத்தை பாதித்து உயர் ரத்த அழுத்தம், முறையற்ற நாடித் துடிப்பு ஏற்படவும், நுரையீரலை பாதித்து, காச நோய் உள்ளிட்ட பல நோய் தொற்றுகள் வரும் அபாயமும் உள்ளது.
மேலும் இரைப்பையை பாதித்து, அதன் உட்சுவர் வீங்கிப்போவதல், ரத்தப்போக்கு, வயிற்றுப்புண் போன்றவை ஏற்படவும், கல்லீரலை பாதித்து, அதனை வீக்கம் அடையச்செய்து அழற்சி நோய் போன்றவற்றிற்கு ஆளாகி புற்றுநோய் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இதுதவிர கணையம், மண்ணீரல், சிறுநீரகம், ஆகிய மற்ற பல உறுப்புகளையும் மது பாதிப்படைய வைக்கிறது. குறிப்பாக மது குடிப்பதனால், ஆண்மைக்குறைவு ஏற்படுவதும், புற்றுநோய் ஏற்படுவதும் தற்போது அதிகரித்து வருகிறது.
மது, மன அழுத்தத்தை குறைப்பதாக பலர் கருதுகிறார்கள். உண்மையில் மது, மனதை அடிமைப்படுத்தி மன அழுத்தத்தை விட்டு வெளிவருவதை தடுக்கிறது. கொலை, தற்கொலை, வன்புணர்ச்சி, குழந்தைகளை பாலியல் ரீதியாக வன்முறை செய்வது போன்ற சம்பவங்களும், மண முறிவு அதிகரித்து வரவும் மது ஒரு மிக முக்கிய காரணமாகும்.
இன்று அதிகரித்து வரும் சமூக பிரச்சினைகளுக்கு மது ஒரு முக்கிய காரணம். குடிக்கு அடிமையாகாத பலர், வாரத்தில் ஒரு நாள் பார்ட்டி என குடித்து விட்டு வாகனம் ஓட்டி, பலரின் உயிருக்கும், உடமைகளுக்கும் உலை வைக்கின்றனர். மதுவுக்கு பணம் கிடைக்காத போது சொந்த வீட்டிலேயே திருடுவதும், வீட்டில் இருக்கும் பொருட்களை யாருக்கும் தெரியாமல் எடுத்து விற்றுவிடுவதும், அடுத்தவர்களின் உடைமைகளை திருடுவதும் நிகழ்கின்றன. டெல்லியில் நடந்த மிகக் கொடூரமான வன்புணர்ச்சி சம்பவத்தில், குற்றம் செய்திருந்த எல்லோருமே குடித்திருந்தார்கள் என்பது ஒரு முக்கிய செய்தி.
மது ஒரு தனிமனிதனின் உடலையும், மனதையும், சமூகத்தையும் பாதிப்பதோடு மட்டுமல்லாமல், அது மற்ற குடும்பத்தினரையும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாக்குகிறது. எடுத்துக்காட்டாக, கணவன் குடிகாரர் என்றால், அவருடைய மனைவி ‘இன்று என்ன ஆகுமோ? ஒழுங்காக வீடு வந்து சேர்வாரா? வீட்டில் என்ன கலாட்டா இருக்குமோ?’ என்று கவலைப்பட்டு அவரது வேலைகளை சரிவர செய்யாமல், குழந்தைகளை கவனிக்க முடியாமல் போகலாம். குடித்துவிட்டு குடும்பத்தினரை அடிப்பது, வீட்டில் உள்ள பொருட்களை உடைப்பது, போதை தெளிந்தவுடன், போதையில் தெரியாமல் செய்ததாக கூறி மன்னிப்பு கேட்பது இன்று பரவலாக நடந்து வரும் நிகழ்வாகி விட்டது.
மதுப்பழக்கத்தை விட்டொழிக்க அல்லது அடிமையாகாமல் இருக்க, ஒவ்வொருவருக்கும் இது குறித்த விழிப்புணர்ச்சி அவசியம். மது, குறிப்பாக ரெட் ஒயின் எனப்படும் மது, உடலுக்கு, குறிப்பாக இதயத்திற்கு நல்லது என ஆராய்ச்சிகள் சொல்வதாக பலரும் கூறுகின்றனர். இவ்வாறு சொல்லப்படும் ஆராய்ச்சிகள் வெளிநாட்டில் செய்யப்பட்டவை.
அங்கு இருக்கும் மதுபானங்களின் உட்பொருட்கள் வேறு, நமது நாட்டில் உள்ள மதுபானங்களின் உட்பொருட்கள் வேறு. ஆகவே அங்கு செய்யப்பட்ட ஆராய்ச்சிகளின் முடிவுகள் நம் நாட்டிற்கு பொருந்த வாய்ப்பே இல்லை. மது குடிப்பதனால், பிரச்சினைகள் தீர்ந்து விடப் போவதில்லை. உண்மையில் பிரச்சினைகள் அதிகரிக்கவே செய்கின்றன. மதுவினால் ஏற்படும் தீமைகளை தடுக்க, அதனை குடித்து சோதனை செய்து பார்க்காமல் இருப்பதும், முழுமையாக விட்டொழிப்பதுமே மிகச் சிறந்த வழி முறையாகும்.
குடிக்கு ஏற்கனவே அடிமை ஆகி இருந்தால், அதற்கான உரிய மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டு, வாழ்க்கை முழுவதும் குடிக்காமல் இருக்க ஒவ்வொரு நாளும் காலையில் ‘இன்று நான் குடிக்க மாட்டேன்’ என உறுதி எடுத்துக்கொண்டு வருவதன் மூலம் மதுப்பழக்கத்திலிருந்து வெளிவர முடியும்