கண்கள்தான் அழகின் முதல் அஸ்த்ரம். கண்கள் ஒருவரின் வயதை கணித்து சொல்லும் முதல் உறுப்பு. பிறகுதான் சருமம் வெளிப்படுத்தும்.
கண்கள் உள்ளே போய், தொய்வடைந்து இருந்தாலே நீங்கள் 30 ப்ளஸ்களில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். கண்களை இளமையாக பாதுகாத்தால் பாதி வயது குறைந்தது போல் இருப்பீர்கள்.
நீங்கள் வெகு நேரம் கணினி போன்ற சக்தி வாய்ந்த ஒளிக்கதிர்களை பார்த்துக் கொண்டிருந்தால், நரம்புகள் சோர்ந்து போகும். இதனால் அங்கே தளர்வடைய ஆரம்பிக்கும்.
சரியான தூக்கம் இல்லாமல் இருந்தால், கண்களில் ஈரப்பதம் குறைந்து கண்களில் கருவளையம் தோன்ற ஆரம்பிக்கும். ரத்த ஓட்டம் குறைந்து , அங்கே நச்சுக்கள் தங்கி, வயதான தோற்றத்தை அளிக்கிறது. இப்படிதான் சருமம் முதிர்வடைதல் ஆரம்பிக்கிறது.
உடலுக்கு உடற்பயிற்சி செய்வதால் எப்படி உடலின் பாகங்கள் இளமையோடு இருக்குமோ, அவ்வாறே கண்களுக்கும் செய்வது அவசியம். இதனால் நரம்புகளுக்கு புத்துணர்ச்சி எற்படும். ரத்த ஓட்டம் அதிகரிக்கும். கருவளையம் சுருக்கங்கள் ஏற்படாது.
சில எளிய பயிற்சிகள் தினந்தோறும் கண்களுக்கு செய்வதால், கண்கள் இளமையாகவும் பெரிதாகவும் காட்டும்.
கண்களை சுழற்றுங்கள் : கண்களை வட்டமாக இடமிருந்து வலமாக 3 முறையும், வலமிருந்து இடமாக 3 முறையும் சுழற்றுங்கள். இது கண்பார்வையை அதிகரிக்கச் செய்யும். கண்களுக்கு ஈரப்பதத்தை அளிக்கும்.
கண்களை குவியுங்கள் : இரு கண்களையும் ஒரே இடத்தில் குவிப்பதால், நரம்புகளில் ஏற்படும் அசதி, சிரமத்தை நீக்கி, புத்துணர்வோடு இருக்கச் செய்யும்.
ஒரு பென்சிலின் நுனியை பார்த்துக் கொண்டிருங்கள். மெல்ல பென்சிலை மூக்கின் தண்டருகே கொண்டுவரவும். இப்போது இரு கண்களும் ஒரே இடத்தில் குவியும். மெல்ல இயல்பு நிலைக்கு வாருங்கள். இப்படி 3 முறை செய்யலாம்.
கண்களை மூடி திறக்கவும் : கண்களை எவ்வளவு முடியுமோ அவ்வளவு இறுக்கி மூடுங்கள்.சில நொடிகளில் கண்களை அதிகபட்சம் எவ்வளவு முடியுமோ அவ்வாறு அகலத் திறங்கள். இவ்வாறு 5 முறை செய்தால், கண்களில் ஏற்படும் கருவளையம் போய்விடும். கண்கள் பெரியதாய் மாறும்.
நான்கு திசையையும் பாருங்கள் : கண்களை இடமிருந்து வலமாக பாருங்கள். பின்னர் மேலிருந்து கீழாக பார்க்கவும். தூக்கமில்லாமல் உள்ளடங்கி போயிருக்கும் கண்களுக்கு இது நல்ல பயிற்சி. கண்களை எடுப்பாக காண்பிக்கும்.
உணவு :
கண்களுக்கு தேவையான சக்தியை விட்டமின் ஏ லிருந்து பெறுகிறது. ஆகவே விட்டமின் ஏ நிறைந்த உணவுகளை சாப்பிடுங்கள். பீட்டா கரோட்டின் கொண்ட பச்சை காய்கறிகள் உடலுக்குள் சென்றதும் விட்டமின் ஏ வாக மாறிவிடும். கீரைகள், பச்சையான காய்கறிகள், கேரட் போன்றவை கண்களுக்கு அழகு மற்றும் ஆரோக்கியத்தை தரும்.