பெண் மகிழ்ச்சியாக வாழ தக்க துணை அவசியம். யாரையாவது சார்ந்திருக்கும் சமூக கட்டமைப்புடனேயே பெண்களின் வாழ்க்கை முறை சித்தரிக்கப்பட்டிருக்கிறது.
பெண்களின் உணர்வுகளும்.. பெண் துணையின் அவசியங்களும்..
பெண் மகிழ்ச்சியாக வாழ தக்க துணை அவசியம். யாரையாவது சார்ந்திருக்கும் சமூக கட்டமைப்புடனேயே பெண்களின் வாழ்க்கை முறை சித்தரிக்கப்பட்டிருக்கிறது. அந்த நிலை இப்போது மாறி கொண்டிருந்தாலும் சில சமயங்களில் வாழ்க்கையில் தான் எதிர்கொள்ளும் இன்னல்களை கடப்பதற்கு, மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்வதற்கு, ஆலோசனை-ஆறுதல் பெறுவதற்கு, அரவணைப்பதற்கு, வழிகாட்டுவதற்கு, ஒரு பெண்ணுக்கு மற்றொரு பெண்ணின் துணை அவசியமானதாகிறது. ஒரு பெண்ணால் மட்டுமே இன்னொரு பெண்ணின் உணர்வுகளையும், உள்ளக்குமுறல்களையும் புரிந்துகொள்ள முடியும்.
பெண்களின் உணர்வுகளையும், பெண் துணையின் அவசியங்களையும் முழுமையாக தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்!
பெண்களுக்கு எத்தனையோ பிரச்சினைகள் ஏற்படுகின்றன. எல்லா பிரச்சினைகளையும் எல்லோரிடமும் பெண்களால் பகிர்ந்துகொள்ள முடியாது. குடும்ப பிரச்சினைகள் நிம்மதியை குலைத்து கொண்டிருக்கும். கணவனின் செயல்பாடுகள் அதிருப்தியை அதிகப்படுத்தும். குழந்தைகளின் போக்கு, அவர்களிடம் ஏற்பட்டுள்ள புதிய மாற்றங்கள் கடுமையான மன உளைச்சலை உருவாக்கும். அதையெல்லாம் வெளிக்காட்டிக்கொள்ளாமல் நிறைய பெண்கள் மனதிற்குள்ளேயே பூட்டி வைத்துக்கொள்வார்கள். தனிமையில் இருந்து அவ்வப்போது அதை நினைத்துப் பார்த்து மனதை வருத்திக்கொண்டிருப்பார்கள். யாரிடமும் கலந்து பேசாமல், தீர்வு காணவும் வழி தெரியாமல் மனதை குழப்பிக்கொண்டிருப்பது, மன அழுத்தத்தை அதிகப்படுத்திவிடும்.
யாரிடமும் மனம் விட்டு பேசாமல் ரகசியம் காக்க நினைப்பது சில சமயங்களில் தீர்வு காண முடியாத அளவுக்கு அடுக்கடுக்காக பிரச்சினைகள் பின்தொடர காரணமாக அமைந்துவிடும். நம்பிக்கைக்கு பாத்திரமான தோழியிடமோ, தனது நலனில் அக்கறை காட்டும் உறவுக்கார பெண்களிடமோ மனம் விட்டு பேசிவிட வேண்டும். அதுவே மன பாரங்களை இறக்கி வைக்க வடிகாலாக அமையும். நெருக்கடியான நேரங்களில் மனதுக்கு நெருக்கமான பெண்கள் கூறும் ஆலோசனை ஆறுதல் தரும்.
வீட்டில் திருமணம், பண்டிகை போன்ற சுப தின நாட்களில் விருந்து ஏற்பாடுகளை தடபுடலாக செய்யும்போது பெண்களுக்கு வேலை அதிகமாகும். அப்போது ஒருவித பதற்றமும் கூடவே தொற்றிக்கொள்ளும். ‘இதை எப்படி நான் செய்து முடிக்கப்போகிறேனோ?’ என்ற எண்ணம் அவர்களை பதற்றத்தில் இருந்து மீளவிடாமல் தவிக்க வைத்துவிடும். அப்போது அனுபவமிக்க பெண்கள் உடனிருந்தால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எல்லா வேலைகளையும் ஒரு பெண்ணே தனியாளாக நின்று செய்யும்போது வேலைச்சுமையால் மனஉளைச்சல் ஏற்படும். பலருக்கு பதில் சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டால் எரிச்சல் உருவாகும். அப்போது ஒத்தக்கருத்துள்ள மற்ற பெண்கள் துணை நின்றால் பக்கபலமாக இருக்கும். அதன் மூலம் கடமைகளை நிம்மதியாக, மனநிறைவாக செய்து முடிக்கலாம்.
முழுதிறமையும், முழுமையான தன்னம்பிக்கையும் கொண்டவள் என்று எந்த பெண்ணும் இல்லை. எல்லா மனிதர்களிடமும் இருக்கும் பலவீனங்கள், பெண்களாகிய உங்களிடமும் இருக்கவே செய்யும். அது கசப்பான உண்மையாக இருந்தாலும், உங்களிடம் இருக்கும் பலவீனத்தை நீங்களே மனதளவில் முதலில் ஒத்துக்கொள்ளவேண்டும். உங்கள் செயல்களில், அணுகுமுறைகளில் அந்த பல வீனம் வெளிப்படாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். அதற்கு தகுந்த தோழியை எப்போதும் உங்களுடன் வைத்துக்கொள்ளவேண்டும். அவரது ஆலோசனையும், வழிநடத்தலும் உங்களை மேலும் வளரச்செய்யும்.
கர்ப்ப காலங்களில் உடன் இருந்து வழி நடத்தி செல்வதற்கு மற்றொரு பெண்ணின் அனுபவமும், ஆலோசனையும் இன்றியமையாததாகிறது. தாய், சகோதரி என சக உறவுகளில் யாராவது ஒருவரின் அரவணைப்பு, வழிகாட்டுதல் அவசிய தேவையாக இருக்கிறது. அது நூறு மருத்துவர்கள் உடனிருப்பதற்கு சமம். அந்த சமயங்களில் ஏற்படும் மன உளைச்சலுக்கு உறவுப்பெண் களின் துணை மருந்தாகிறது. மனரீதியாக தேவைப்படும் ஆறுதலையும், அமைதியை யும் உடனிருக்கும் பெண்களால் வழங்க முடியும்.
உடல்ரீதியான- மனோரீதியான- அந்தரங்கமான பிரச்சினைகளை திருமணமாகாத பெண்கள் தங்கள் தாயிடம் சொல்லக்கூட தயங்கு கிறார்கள். அத்தகைய பிரச்சினைகளை திருமணமான பெண்கள் தங்கள் கணவரிடம் வெளிப்படுத்தக்கூட முன்வருவதில்லை. அப்படி மறைத்து வைக்கும்போது, பிரச்சினைகள் எல்லைமீறிப்போய்விடுமோ என்ற கவலையும் அவர் களுக்கு ஏற்படும். அப்படிப்பட்ட நேரத்தில் நல்ல தோழிகளின் ஆறுதலும், ஆலோசனைகளும் பெண்களுக்கு தேவைப்படுகிறது. ‘என்ன வந்தாலும் நாம் சமாளிக்கலாம். எதற்கும் நீ கவலைப்படாதே!’ என்று சொல்ல ஒரு தோழி, எல்லா பெண்களுக்குமே அவசியம்.
ஒருசில தோல்விகளும், அவமானங்களும் மனதை பாரமாய் அழுத்தும். அவைகளை நெருக்கமான ஒரு தோழியிடம் பேசினால் மட்டுமே, அந்த பாரம் குறையும். மனம்விட்டு பேசுவது என்பதுகூட ஒருவகை மருந்துதான். பெண்ணுக்கு பெண் துணை என்பது மனதிற்கு மருந்து போடும் விஷயம். எல்லோரிடமும் மனம் திறந்து பேசிவிட முடியாது. அப்படி பேச நினைத்தால் அதுவே புதிய பிரச்சினைகளுக்கு காரணமாகிவிடும். ஆகையால் நம்பிக்கையாக தோழியை அடையாளம்கண்டு, அவளிடம் மனம்விட்டுப் பேசவேண்டும்.
‘பெண்கள் நீண்ட ஆயுளுடன் வாழ மன அழுத்தத்தில் இருந்து விடுபட வேண்டியது அவசியம்’ என்ற கருத்தை பல்வேறு ஆய்வுகள் வெளிப் படுத்தி வருகின்றன. மன அழுத்தம் நீங்க மனதை கலக்கமில்லாமல் வைத்துக் கொள்ள வேண்டும். நாம் வாழும் சூழலில் அது சாத்தியமில்லாதது. ஏதேனும் ஒரு விதத்தில் மன அழுத்தம் நம்மை அழுத்திக்கொண்டே இருக்கும். அந்த அழுத்தத்துடன் வாழ வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டு விடும். இந்த நிலை நீங்கி சகஜமான, மகிழ்ச்சியான சூழல் உருவானால் மட்டுமே பெண்கள் நீண்ட ஆயுளுடன் வாழ முடியும். கடமைகளை செய்துகொண்டே இருப்பது மட்டும் வாழ்க்கையல்ல. வாழ்க்கை என்பது ஒரு கலை. அது அழகாக அமைய மனம் மிகவும் அவசியமாகிறது. மனதின் மகிழ்ச்சியை காப்பாற்ற உண்மையான ஒரு பெண் துணை, ஒவ்வொரு பெண்ணுக்கும் அவசியம்.
ஷாப்பிங் செல்ல பெண்ணுக்கு, இன்னொரு பெண் துணைதான் சவுகரியமானதாக இருக்கும். ஒரு பெண்ணுக்கு எது அவசியம், எது அழகு சேர்க்கும் என்பதை மற்றொரு பெண்ணால்தான் நிர்ணயிக்கமுடியும். தமது பொருளாதார நிலையையும், தேவைகளையும் அறிந்த பெண்ணையே ஷாப்பிங் நேரங்களில் உடன் அழைத்துச்செல்லவேண்டும்.
ஒரு பெண் தனது லட்சியத்தை அடைய முற்படும்போது, பல தடைகள் ஏற்படும். அப்போது பெரும்பாலான பெண்கள் சோர்ந்து போகிறார்கள். அப்போது அவர்களுக்கு உற்சாக டானிக் வழங்க அனுபவமான பெண்துணை அவசியமாகிறது. நல்ல தோழியின் வழிகாட்டல் மனஉறுதியை அதிகரிக்கும்.