மகாராஷ்டிரத்தில் புனேவில் உள்ள பிம்ப்ரி சின்ச்வாடில் வணிகரிடம் இருந்த பிட்காயின் கிரிப்டோகரன்சியை மிரட்டி பறிப்பதற்காக காவலர் ஒருவரே அவரை கடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.
இதுகுறித்து காவல்துறை துணை ஆணையர் ஆனந்த் பாய்ட் கூறுகையில், “பங்கு வணிகர் வினய் நாயக் 300 கோடி ரூபாய் மதிப்பிலான பிட்காயினை வைத்திருந்தது புனே சைபர் குற்றப்பிரிவில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது திலீப் துக்காராம் கந்தாரேவுக்கு தெரியவந்துள்ளது.
இதைத் தொடர்ந்து, வினய் நாயக்கைக் கடத்தி பிட்காயின்களைப் பறிக்க மற்ற ரெளடிகளுடன் கந்தாரே சதித் திட்டம் தீட்டினார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஜனவரி 14 அன்று ஒரு ஹோட்டலில் இருந்து பாதிக்கப்பட்ட தாதவடேவை கடத்திச் சென்றனர். பாதிக்கப்பட்டவரின் நண்பர் புகார் அளிக்க முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.
கைதாகிவிடுவோமோ என எண்ணி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் பாதிக்கப்பட்டவரை விடுவித்து அருகில் உள்ள பகுதியில் இறக்கிவிட்டனர். பிட்காயின்களுக்காக தான் கடத்தப்பட்டதாக பாதிக்கப்பட்டவர் போலீசாரிடம் தெரிவித்தார்” என்றார்.
இதையடுத்து, சுனில் ராம் ஷிண்டே, வசந்த் ஷியாம்ராவ் சவான், பிரான்சிஸ் திமோதி டிசோசா, மயூர் மகேந்திர ஷிர்கே, பிரதீப் காஷிநாத் கேட், திலீப் துக்காராம் கந்தாரே, நிகோ ராஜேஷ் பன்சால், ஷிரிஷ் சந்திரகாந்த் கோட், சதி திட்டத்தை தீட்டி கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட காவலர் கந்தாரே ஆகியோர் கைது செய்யப்பட்டார்கள். இதுகுறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது.
-dinamani