மாணவர்கள் தங்கள் எண்ணங்களை கட்டுப்படுத்தி மனதை ஒருமுகப்படுத்தினால் தான் கல்வியில், வாழ்க்கையில் வெற்றி பெறமுடியும்.
பிள்ளைகள் கல்வியில், வாழ்க்கையில் வெற்றி பெற வழிகள்
குழந்தைகளுக்கு எதிலும் தீவிர கவனம் இருக்காது. அவர்களது மனம் அலைபாய்ந்துகொண்டே இருக்கும். அதுபோன்ற நிலையில் இருப்பவர்கள் தங்கள் எண்ணங்களை கட்டுப்படுத்தி மனதை ஒருமுகப்படுத்தினால் தான் கல்வியில், வாழ்க்கையில் வெற்றி பெறமுடியும். அவ்வாறு வெற்றிகளைப்பெற மனதை ஒருமுகப்படுத்துவது எப்படி என்பதை காண்போம்.
1) இரவில் நிம்மதியான, ஆழ்ந்த உறக்கம் மிக அவசியம். அப்போது தான் எண்ணங்களை ஒருமுகப்படுத்தி படிப்பில் கவனம் செலுத்த முடியும். மருத்துவ ரீதியல் ஒரு மனிதனுக்கு தினமும் குறைந்தபட்சம் 8 மணி நேர தூக்கம் அவசியம். சரியான உறக்கம் இல்லை என்றால் உடலும் மனமும் சோர்ந்து கல்வி கற்பதில் தடுமாற்றம் ஏற்படும். எனவே இரவில் நீண்ட நேரம் டெலிவிஷன் பார்ப்பது, திரைப்படங்கள் பார்ப்பது போன்றவற்றை தவிர்த்து சரியான நேரத்திற்கு உறங்கச்சென்று அதிகாலையில் விழித்து படிப்பது நல்லது.
2) காலை உணவு மிக அவசியம். சிலர் பள்ளிக்குப்புறப்படும் அவசரத்தில் காலை உணவை தவிர்ப்பதுண்டு. இது ஆபத்தானது என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். இரவு நீண்ட நேரத்திற்கு பிறகு வயிறு காலியாக இருக்கும். எனவே காலை உணவு சாப்பிட்டால் தான் உடலும், மூளையும் சுறுசுறுப்பாக இயங்க முடியும். இல்லை என்றால் உடலும், மூளையும் சோர்ந்து போகும். ஆர்வமுடன் படிக்க முடியாது. படிப்பதும் மனதில் பதியாது.
3) ஆசிரியர் பாடம் நடத்தும்போது அவர் சொல்வதை கவனமாக கேட்க வேண்டும். அவர் கரும்பலகையில் எழுதிப்போடும் குறிப்புகளை கவனமுடன் எழுதிக்கொள்ள வேண்டும். ஆசிரியர் பாடம் நடத்தும் போது மனதை அலைபாய விடுவது, கவனக்குறைவாக இருப்பது போன்றவை கூடாது.
4) ஒவ்வொரு வகுப்பிற்கும் இடையில் சிறிதுநேரம் ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள். அதாவது ஒரு சில நிமிடங்கள் கண்களை மூடி அமைதியாக இருந்தாலே போதும். இவ்வாறு செய்வதன் மூலம் அடுத்தடுத்த வகுப்புகளை ஆர்வத்துடன் கவனிக்க முடியும்.
5) வகுப்பறையில் அமரும்போது எப்போதும் நேராக, நிமிர்ந்து அமருங்கள். உடலை வளைத்துக்கொண்டு அமரக்கூடாது.
6) கவனம் தடைப்படும்போது உடலை அசைத்துக்கொள்ளலாம். கை, கால்களை அசைத்து உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து சுறுசுறுப்பை உருவாக்கலாம். கொஞ்சம் தண்ணீர் குடித்தாலும் உடலில் சுறுசுறுப்பு ஏற்படும்.