எங்கே வைக்கிறோம்?
உணவு விடுதிக்குச் செல்கிறீர்கள் அல்லது பொது இடங்களில் அமர்கிறீர்கள், அல்லது வேலைக்குச் சென்று சோர்வாக வீடு திரும்பியதும் நீங்கள் செய்யும் முதல் வேலை, அருகில் உள்ள மேஜையில் அல்லது தரையில் உங்கள் கைப்பையை வைப்பீர்கள், அப்படித்தானே? ஆரோக்கியம் விரும்புபவர்கள் இனி அப்படிச் செய்ய வேண்டாம். உலகில் அதிகமான கிருமிகள் தங்குமிடமாக இருப்பது இந்த மேஜை மற்றும் தரைப் பரப்புதான். வெளியே சென்றால் கைப்பையை உங்கள் மடியிலேயே வைத்துக் கொள்ளலாம். அல்லது அதை மேஜையில் தொங்கவிடும் கொக்கி (ஹூக்) சாதனத்தை வாங்கி பயன்படுத்துங்கள். வீட்டிற்கு வந்தால் ஹேங்கரில் தொங்கவிடலாம். அதற்கு முன்பாக, பையின் உள்ளே கனமான பொருட்கள் இருந்தால் எடுத்துவிடுங்கள். அது பையின் ஆயுளை நீட்டிக்கும்.
சுத்தம் செய்கிறீர்களா?
நாம் துவைத்துப் பயன்படுத்தாத பொருட்களில் கைப்பையும் ஒன்றாக இருக்கலாம். பலவித கைப்பைகள் துவைத்து பயன் படுத்த முடியாத பொருட்களால் தயாரிக்கப்பட்டிருக்கலாம். முடிந்தவரை துவைத்துப் பயன்படுத்தும் வகையிலான பைகளை பயன்படுத்துவது ஆரோக்கியத்திற்கு நல்லது. எந்தவகை கைப்பையாக இருந்தாலும் பருத்தித் துணி கொண்டு துடைத்துப் பயன்படுத்தலாம். சிலவகை பைகளை எண்ணெய் தொட்டு அல்லது அதற்கான பாலிஷ் கொண்டு துடைத்தால் மினுமினுப்பு பெற்றுவிடும். துவைக்க முடிந்த கைப்பைகளை அவ்வப்போது சுத்தம் செய்து பயன்படுத்துங்கள். கைப்பையின் உள்ளே மேக்கப் சாதன பொருட்களால் கசிவு, கறை, அழுக்குகள் படிந்திருந்தால் நிச்சயம் துவைத்துப் பயன்படுத்துங்கள். குறிப்பாக கைப்பிடியில் சுத்தத்தை பராமரிப்பது நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது.
எல்லா கைப்பைகளும் ஒன்றல்ல…
ஒவ்வொரு கைப்பையின் தரமும், தன்மையும் மாறுபடும். தோல்பை, துணிப்பை, ரெக்சின் பை, சணல்பை என ஒவ்வொரு வகை பையும் வேறுபட்ட தன்மையும், தரமும் கொண்டிருக்கும். அவற்றின் தன்மைக்கேற்ப பராமரித்து பயன்படுத்த வேண்டும். அதுதான் அதன் ஆயுளை நீட்டிக்கும். உதாரணமாக தோல் பைகளை சுத்தம் செய்ய தனியே ‘லெதர் கிளீனர்’கள் கிடைக்கின்றன. அதன் மூலம் சுத்தம் செய்தால்தான் அது புதிதுபோல பளிச்சிடும்.
பாதுகாப்பு உறை அவசியம்…
கைப்பையில் வைக்கும் அனைத்து பொருளுக்கும் பாதுகாப்பு உறை அவசியம். உதாரணமாக, ரசாயனங்கள், திரவங்கள் போன்ற பொருட்களை கைப்பையில் வைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அதை ஒரு பிளாஸ்டிக் கவர் அல்லது காகித உறை சுற்றி உள்ளே பாதுகாப்பாக வைக்கலாம். மேக்கப் உபகரணங்களைக்கூட இப்படி ஒரு பாதுகாப்பு உறையுடன் கைப்பையில் வைத்தால் அது பையின் ஆயுளை அதிகமாக்கும். கறைகளும், அழுக்குகளும் படியாது. பல்வேறு கைப்பைகள், கறை காக்கும் உறையுடன் வெளிவருவது குறிப்பிடத்தக்கது. ‘டிஸ்யூ பேப்பர்’களை கறைபடியாமல் தடுக்க பயன்படுத்தலாம்.
கவனமாக திறந்து மூடுங்கள்…
ஜிப்களின் பலமே கைப்பைகளின் ஆயுளை தீர்மானிக்கின்றன. கைப்பைகளை திறக்க வேண்டிய அவசியம் ஏற்படும்போது சமதள பரப்பில் வைத்து நிதானமாக ஜிப்பை திறந்து மூட வேண்டும். சாய்வாக வைத்துக் கொண்டோ, தொங்கவிட்டுக் கொண்டோ திறக்கக்கூடாது. திறப்பின் இரு பக்கங்களும் நேராக இல்லாமல் வைத்துக் கொண்டு மூடுவது எளிதில் ஜிப்கள் பழுதாகிவிட காரணமாகும். உள்ளே அதிக எடையுள்ள பொருட்களை வைத்துக் கொண்டு தொங்கவிடுவதாலும் ஜிப் எளிதில் பழுதாகிவிடும்.
கசியும் பொருட்களும், அறையும்…
கசியும் பொருட்களே சீக்கிரம் கைப்பைகளை மாற்றவேண்டிய அவசியத்தை ஏற்படுத்துகின்றன. ஒவ்வொரு விதமான பொருட்களை வைப்பதற்கும் தனித்தனி பிரிவுகள், அறைகள் கொண்ட கைப்பைகள் என்றால் இந்தப் பிரச்சினையை குறைக்கலாம். சிந்தும், கசியும் பொருட்களை அதற்குரிய அறையில் வைத்து பராமரிக்கலாம். அறைகள் இல்லாத கைப்பைகளில் பகுதிகளை பிரிப்பதற்காக ‘ேஹண்ட்பேக் லைனர்’ சாதனங்கள் சந்தையில் கிடைக்கும். அதனை வாங்கிப் பயன்படுத்துங்கள்.
ஆரம்பத்திலேயே சரி செய்வது…
ரெடிமேடு துணிகளைப்போல, கைப்பைகளையும் வாங்கிய உடன் கூடுதலாக ஒரு தையல் போட்டு பயன்படுத்த முடிந்தால் நீண்ட ஆயுளுடன் உழைக்கும். அதே நேரத்தில் தையலில் விரிசல், ஜிப் சிக்கல், கைப்பிடியின் இணைப்புகளில் விரிசல் ஏற்படுவது போன்ற பழுதுகளை ஆரம்பத்திலேயே சரிசெய்வதும் கைப்பையின் ஆயுளை அதிகரிக்கும்.
மாற்றிக் கொண்டே இருங்கள்…
கைப்பையில் வைக்கும் பொருட்களை அவ்வப்போது சுத்தம் செய்யுங்கள். இடம் மாற்றம் செய்து, எடுத்து வையுங்கள். நீங்கள் அதிகமாக கைப்பையை பயன்படுத்த வேண்டியதிருந்தால் கூடுதல் பைகளை பயன்படுத்துவதுடன், அவ்வப்போது பைகளை மாற்றி பயன்படுத்துங்கள். குறிப்பாக ஷாப்பிங் செல்ல, காய்கறி வாங்க, உறவினர் வீட்டிற்கு, வேலை தொடர்பான ஆவணங்களை சுமக்க என அந்தந்த சூழலுக்கேற்ற தரமான பைகளை பயன்படுத்துவது நல்லது.
வழக்கமாக செய்யும் தவறுகள்…
எப்போதும் பைகளை தோளில் சுமப்பது, தரையில் வைப்பது, அதிக எடையை பையில் சுமப்பது, தாழ்வாக தொங்கவிடுதல், கைப்பிடியின் உறுதியை சோதிக்காமல், மெல்லிய கைப்பிடியில் அதிக பாரம் ஏற்றுதல், எல்லாவற்றையும் ஒரே பையில் திணித்தல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். இவற்றைத் தவிர்த்தால் கைப்பை களின் ஆயுள் கெட்டியாகும்.