குமட்டல் மற்றும் உடல் சுகவீனத்தை தவிர்ப்பதற்கான சில எளிய வழிமுறைகளை இங்கே பார்க்கலாம்
கார், பஸ், விமானம் போன்றவற்றில் பயணிக்கும் சிலருக்கு குமட்டல், தலைவலி போன்ற பிரச்னைகள் ஏற்படுவது இயற்கை. இவ்வாறு, பயணங்களின்போது சிலருக்கு ஏற்படும் குமட்டல், தலைவலி ஏற்படுவது போன்ற உணர்வை மோஷன் சிக்னெஸ் என்று குறிப்பிடுகின்றனர்.நகர்வின்போது ஏற்படும் மாற்றங்களை நம்முடைய உணர்வு உறுப்புகள் ஏற்றுக் கொள்ள இயலாமல் இவ்வாறான உடல் சுகவீனத்தை ஏற்படுத்துகிறது. இந்த பிரச்னை ஏற்படும்போது, சிலர் பயணத்தை ரத்து செய்துவிடும் அளவுக்கு கொண்டு சென்றுவிடும். இதுபோன்று, பயணத்தின்போது ஏற்படும் குமட்டல் மற்றும் உடல் சுகவீனத்தை தவிர்ப்பதற்கான சில எளிய வழிமுறைகளை இங்கே பார்க்கலாம்
தூரப் பார்வை
அருகிலுள்ள பொருட்களை பார்ப்பதை தவிர்த்து, தூரத்தில் உள்ள பொருட்களை பார்க்க முயற்சி செய்யுங்கள். அதேபோன்று, பயணத்தின்போது சிறிய பொருட்களை உன்னிப்பாக பார்ப்பதையும் தவிர்க்கவும். குறிப்பாக, புத்தகம் படிப்பதும் இந்த பிரச்னைக்கு வழிகோலும்.
டீசல் வாடை
சிலருக்கு பெட்ரோல், டீசல் வாடையும், சில கெட்ட வாடையை நுகர்ந்தாலே, பயணத்தின்போது குமட்டல் உணர்வை ஏற்படுத்தும். இதற்கு ஏசி.,யை போட்டு செல்வது ஒரு உபாயமாக இருக்கும். இல்லையெனில், கெட்ட வாடை இல்லாத இடங்களில் இயற்கை காற்றை சுவாசிப்பது பலனை தரும்.
ஓய்வு
திருமண விழாக்கள் அல்லது விசேஷங்களில் பங்கேற்றுவிட்டு நீண்ட தூரம் பிராயணிக்கும்போது, சிலருக்கு இவ்வாறு பிரச்னை ஏற்படலாம். அதுபோன்ற சமயங்களில் வழியில் ஏதேனும் தங்கும் விடுதியில் ஒரு சில மணிநேரம் ஓய்வு எடுத்துக் கொண்டு மீண்டும் புறப்படுவது பல பிரச்னைகளை தவிர்க்கும்.
வயிறு முட்ட…
பயணத்தின்போது மூச்சு முட்ட சாப்பிடாமல், அரை வயிறுக்கு சாப்பிடுவதும் இந்த குமட்டல் உணர்விலிருந்து விடுபட உதவும். கார உணவுகளையும் தவிர்க்க வேண்டும். அதேநேரத்தில், சாப்பிடாமல் இருந்தாலும் வெறும் வயிற்றில் இந்த உணர்வு வரும். அத்துடன், சரியான நேரத்தில் சாப்பிடுவதும் அவசியம்.
நீர்ச்சத்து
உடலில் நீர் சத்து குறைந்தாலும் இந்த பயணத்தின்போது உடல் சுகவீன பிரச்னை ஏற்படும். எனவே, அடிக்கடி தண்ணீர் அருந்துவதும் அவசியம்.
அமரும் முறை…
பயணத்தின்போது குமட்டல் உணர்வு உள்ளவர்கள் முன்புறம் நோக்கிய இருக்கைகளில் அமர்வது அவசியம். ரயில், பஸ்களில் ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்தாலும் இந்த பிரச்னையை தவிர்க்கலாம்.
பேச்சு…
அமைதியாக செல்லாமல் உடன் வரும் நண்பர்கள், குடும்பத்தினருடன் பேசிக் கொண்டே செல்வதன் மூலமாக இந்த பிரச்னையை சமாளிக்கலாம். அதாவது, கவனத்தை மாற்றிக் கொண்டு இந்த பிரச்னையை தவிர்க்க முயல்வதும் ஒரு உபாயம்தான். கார் என்றால் முன்சீட்டில் அமர்ந்து கொண்டு, ஓட்டுபவருடன் பேசிக் கொண்டு செல்லலாம்.
ஆலோசனை
பயணத்திற்கு முன்பாக அனுபவம் வாய்ந்த மருத்துவரிடம் உடலை பரிசோதனை செய்து கொள்வதுடன், இந்த பிரச்னையை தவிர்ப்பதற்கான ஆலோசனைகளையும் பெற்றுச் செல்லவும்.
தியானம்
பயணத்திற்கு 30 நிமிடங்கள் முன்னதாக சிறிது நேரம் தியானம் செய்து புறப்படும்போது இந்த பிரச்னையை சமாளிக்க உதவும்.
குடிபோதையில் பயணிக்கும்போதும் அல்லது முன்தின இரவு மது அருந்திய அயற்சியிலும் சிலருக்கு குமட்டல் உணர்வு ஏற்படும். இதுபோன்றவர்கள் பயணத்திற்கு முன் நன்கு ஓய்வு எடுத்த பின் புறப்படுவது அவசியம். பயணத்தின்போதும், பயணத்திற்கு முன்தின நாளும் மது அருந்துவதை தவிர்த்தாலும் இந்த பிரச்னையிலிருந்து விடுபடலாம்.
அதிக குளிர்ச்சி…
சிலருக்கு ஏசி அதிகமாக இருந்தாலும் தலைவலியும், குமட்டலும் ஏற்படும். ஏசி.,யை குறைத்து வைத்து செல்வதும், வெளிக்காற்றை சுவாசிப்பதும் இதற்கு தீர்வு தரும்.
இஞ்சி வைத்தியம்
பயணத்தின்போது குமட்டல் உணர்வு உள்ளவர்கள் சிறிய இஞ்சி துண்டை மென்று தின்றால் இந்த பிரச்னையிலிருந்து விடுபடலாம். அதேபோன்று, எலுமிச்சை பழத்தை கையில் வைத்துக் கொண்டு நுகர்ந்தாலும் பலன் தரும்.]
மறக்காதீங்க…குமட்டல் உணர்வு உள்ளவர்கள் கையில் பாலித்தீன் கவர்களை எடுத்துச் செல்வதும் அவசியம். கட்டுப்படுத்த முடியாமல் வாந்தி வந்தால் அருகில் உள்ளவர்களுக்கு தொந்தரவு இல்லாமல் இருக்கும்.