பெண்களின் கைகளுக்கு உழைப்பு அதிகம். பாத்திரம் கழுவுவது, துணி துவைப்பது, கரண்டி பிடித்துக் கிண்டுவது, சமைப்பது என, நம் கைகள் ஆல் டைம் ஆன் டியூட்டி தான். அதுக்காக வேலை பார்க்காமல் இருக்க முடியுமா…? என்றால், முடியாது தான். ஆனால், உங்களின் உணவு முறையிலும், கைகளை பராமரிப்பதிலும் சற்று கவனம் செலுத்தினால்… உங்கள் உள்ளங்கையை மென்மையாக மாற்ற முடியும்.
உள்ளங்கையில் போதிய ஈரப்பதம் இல்லாமல் போனால் சிலருக்கு வெடிப்புகள் தோன்றி, கறுப்பாக மாறிவிடும். அவர்கள் அடிக்கடி கைகளில் வேசலின் தடவிக் கொள்ளலாம். உள்ளங்கை மற்றும் கையின் மேல் பகுதியில் தேங்காய் எண்ணெய் தடவி, தினமும் ஐந்து நிமிடங்கள் கைகளை மூடி மூடித் திறந்தால், தோலின் சுருக்கங்கள் நீங்கி தசைகள் விரியும்.
நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஓர் எலுமிச்சம் பழத்தை உள்ளங்கையில் வைத்து உருட்டிக் கொண்டே இருங்கள். பஞ்சுபோல் உள்ளங்கை மிருதுவாக இருக்கும். ஓர் உருளைக்கிழங்கை வேகவைத்து, அதில் 5 சொட்டுகள் ஆலிவ் எண்ணெயைக் கலந்து அரைத்துக் கொள்ளுங்கள். இதைக் கைகளுக்குப் பூசி, தேய்த்துக் கழுவுங்கள்.
ஆலிவ் எண்ணெய், தோலுக்கு நல்ல ஈரப்பத்தைக் கொடுக்கும். உருளை, கருமையை நீக்கிவிடும். வெடிப்புகள் தொடராமல் இருக்க… நிறைய தண்ணீர், பால், ஆரஞ்சு, ஆப்பிள் ஜுஸ் குடியுங்கள். காய்ச்சிய, வெது வெதுப்பான பாலில் விரல்களை அமிழ்த்தி ஊறவிடலாம்.