இன்றைய காலத்தில் பெரும்பாலான மக்களைப் பாதித்து வரும் நோய் என்றால் அது நீரிழிவு நோயே. மேலும் இவர்களின் கால்கள் தான் அதிகமாக பாதிக்கின்றது. தற்போது கால்களில் புண்கள் வராமல் எப்படி பாதுகாப்பது என்பது குறித்து தெரிந்துகொள்வோம்.
உலகளவில் பெருமளவு மக்களை பிடித்திருக்கும் மோசமான நோய். இதை குணபடுத்தவே முடியாது. கட்டுக்குள் வைக்கலாம். தவறினால் உடல் உறுப்புகளை பாதிக்கும்.
சர்க்கரை நோயினால் முதுகுத் தண்டுவடத்திலிருந்து தொடை மற்றும் இடுப்பு பகுதிகளுக்கு வரும் தண்டுவட நரம்புகளில் பாதிப்பு ஏற்படலாம். இதனை டயாபட்டிக் ஃபெமோரல்(Femoral) நியூரோபதி அல்லது டயபெட்டிக் எமையோட்ராபி(Amyotrophy) என்று கூறுவோம்.
இதனால் தொடைகளில் வலி ஏற்படும். தொடைகளில் உள்ள தசைகளின் செயல்திறன் குறையும். அதனால் நடப்பதற்கு, படிகளில் ஏறுவதற்கு, உட்கார்ந்து எழுவதற்கு சிரமம் ஏற்படும்.
நரம்புகள் வலுவிழப்பதால் தொடைத்தசைகள் சுருங்கிக் காணப்படும். இதற்கும் தீர்வு என்றால், ஓரிரு மாதங்கள் தகுந்த சிகிச்சை மேற்கொண்டால் இதனைக் கட்டுப்படுத்தலாம்.
சர்க்கரைநோய் உள்ளவர்களில் 30 முதல் 40 சதவீதத்தினர் கால்பாதங்களில் ஏற்படும் நரம்பியல் தொந்தரவினால் பாதிப்புக்குள்ளாகின்றனர்.
பாதங்கள் மரத்து போவது, திகுதிகுவென எரிச்சல், சுருக் சுருக்கென்று குத்தல், நடந்தால் மெத்தையில் நடப்பது போன்ற உணர்வு, செருப்பை சரியாக பிடிக்க முடியாமல் சிரமப்படுதல், கால் பூமியில் எங்கே வைக்கிறோம் என்ற உணர்வே இல்லாமல் இருப்பது, பேலன்ஸ் கிடைக்காமல் நடப்பதில் தடுமாற்றம் போன்ற இவை அனைத்தும் கால்பாத நரம்புகளில் ஏற்படும் பாதிப்புகளின் வெளிப்பாடாகும்.
பொதுவாக, உடம்பில் எந்த நரம்பு நீளமாக உள்ளதோ அதுதான் சர்க்கரை நோயினால் முதலில் பாதிப்புக்கு உள்ளாகும், அப்படிப் பார்த்தால் நம் கால்களில் உள்ள நரம்புகள்தான் உடலின் நீளமான நரம்பு. அதனால்தான் கால் பாதங்களில் முதலில் தொந்தரவு ஆரம்பிக்கிறது. சிறிதுசிறிதாக பாதத்தின் மேல்பரப்பிலும் உணர்ச்சி நரம்புகள் செயலற்று போகிறது.
மேலும், கால் பாதங்கள் உணர்வற்று இருப்பதால் முள், கண்ணாடி போன்ற கூர்மையான பொருட்கள் காலில் குத்தினாலும் இவர்களுக்கு தெரியாது. அதனால் காலில் புண்கள் உண்டாவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இதுபோன்ற ‘டயபடிக் நியூரோபதி’ எனப்படும் நரம்பியல் நோயினை கட்டுப்பாட்டில் வைத்திருக்க சில முக்கியமான விஷயங்களை சர்க்கரை நோயாளிகள் கடைபிடிக்க வேண்டும்.
சரியான காலணிகள் அணிய வேண்டும்.
ரத்த சர்க்கரை அளவுகள் காலை வெறும் வயிற்றில் 100 -110 மிகி, சாப்பிட்ட பின்பு 2 மணி நேரம் கழித்து 140-150 மிகி, மற்றும் மாதத்திற்கு 1 முறை பரிசோதனை செய்யப்படும். ரத்தச்சர்க்கரை அளவு சராசரி 6.5% எனவும் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.
பாதநரம்புகளுக்கு என தனியாக மாத்திரைகள் உட்கொள்ள வேண்டும்.
தடையில்லாத, சரியான உடற்பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
சர்க்கரை நோயாளிகளின் பாதங்கள் அதிக சூட்டை உணர்வதில்லை. அதை உணர்வதும் கடினமாக இருக்கும்.