உடல் பருமனைக் குறைப்பதற்கு ஏராளமான வழிகளைப் பலர் அன்றாடம் பின்பற்றி வருகிறார்கள். அதில் ஒன்றாக பலர் பின்பற்றி வருவது க்ரீன் டீ குடிப்பது. சரி, க்ரீன் டீயை மட்டும் குடித்தால் நிச்சயம் உடல் எடை குறையுமா என்று கேட்டால் பலருக்கும் சரியான பதில் தெரியாது.
ஏனெனில் இது மற்றவர்கள் சொல்லிக் கேட்டு பலர் பின்பற்றும் ஓர் வழியாகும். மேலும் ஜப்பானியர்கள் அன்றாடம் தங்களது உணவில் க்ரீன் டீயை தவறாமல் குடிப்பார்கள். அவர்களது இளமையான தோற்றத்திற்கும், பருமனில்லா கட்டுடலுக்கும் க்ரீன் டீ மற்றும் அவர்கள் பின்பற்றும் பழக்கவழக்கங்கள் தான் காரணம். உலகில் பல மில்லியன் மக்கள் தங்களது உடல் எடையைக் குறைக்க க்ரீன் டீயை அன்றாடம் குடித்து வருகிறார்கள்.
ஆனால் இப்படி தினமும் 2 கப் க்ரீன் டீயைக் குடித்தால் மட்டும், உடல் எடை குறைந்து, நல்ல அழகிய உடலமைப்பைப் பெற முடியுமா? உண்மையை சொல்ல வேண்டுமானால், ஒருவரது உடல் எடையைக் குறைப்பதற்கு சில கப் க்ரீன் டீயை குடிப்பது மட்டும் போதாது. மேலும் காப்ஃபைன் நிறைந்த பானங்களை அதிகம் குடித்தால், அதிகளவு சிறுநீரை கழிக்க நேரிட்டு, உடலில் உள்ள நீர் எடையைக் குறைக்கலாமே தவிர, எதிர்பார்த்த படி போதுமான அளவு உடல் எடையை வெறும் க்ரீன் டீயால் மட்டும் குறைக்க முடியாது.
சரி, அப்படியெனில் ஆரோக்கியமான வழியில் உடல் எடையைக் குறைக்க க்ரீன் டீயை எப்படி குடிக்க வேண்டும் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. உங்களது இந்த கேள்விக்கான விடை, இக்கட்டுரையில் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
2-6 கப் க்ரீன் டீ ஒருவரது உடல் எடையைக் குறைப்பதற்கு வெறும் 2 கப் க்ரீன் டீ மட்டும் போதாது. ஒரு நல்ல மாற்றத்தைக் காண்பதற்கு தினமும் 6 கப் க்ரீன் டீ என தொடர்ந்து குறைந்தது 3 மாதங்கள் குடிக்க வேண்டியது அவசியம். இது உங்களுக்கு அதிகமான அளவு போன்று தோன்றலாம். சரி, நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை கப் காபி குடிப்பீர்கள். நிச்சயம் இதுவே 4-5 கப் வந்துவிடும். இந்த காபிக்கு க்ரீன் டீ எவ்வளவோ ஆரோக்கியமானது.
க்ரீன் டீயின் சுவை உங்களுக்கு அலுத்து போயிருந்தால், அதன் சுவையை மேம்படுத்த, அத்துடன் சில மூலிகைகளான லெமன்க்ராஸ், லாவெண்டர் அல்லது புதினா போன்றவற்றை சேர்த்துக் கொள்ளலாம். இதனால் க்ரீன் டீயின் மருத்துவ பண்புகள் மேம்பட்டு, உடல் ஆரோக்கியம் இன்னும் மேம்படும்.
உடற்பயிற்சி அவசியம் உடல் எடையைக் குறைக்க ஆசைப்பட்டால், உடற்பயிற்சியின்றி எதுவும் முடியாது. க்ரீன் டீ குடிப்பதால் உடலின் மெட்டபாலிச அளவு அதிகரிக்கும். இந்நிலையில் ஒருவர் தினமும் குறைந்தது 45 நிமிட உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டியது அவசியம். இதனால் தினமும் சற்று உடல் எடையைக் குறைக்கலாம். அதற்காக நீங்கள் ஜிம்மில் சேர வேண்டுமென்ற அவசியம் எதுவும் இல்லை. வீட்டிலேயே சிறு சிறு உடற்பயிற்சிகளில் ஈடுபட்டாலே போதுமானது.
சில வகை க்ரீன் டீ சிறப்பாக இருக்கும் க்ரீன் டீக்களிலேயே வகைகள் உள்ளன. எடையைக் குறைக்க என்று வரும் போது, அனைத்து வகை க்ரீன் டீக்களும் ஒரே மாதிரியான பலனைக் கொடுக்காது. க்ரீன் டீக்களிலேயே மட்சா க்ரீன் டீ உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும். மட்சா க்ரீன் டீயில் மெட்டபாலிசத்தை வேகப்படுத்தும் மற்றும் கொழுப்புக்களைக் கரைக்கும் ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ஏராளம். ஏனெனில் மட்சா க்ரீன் டீயின் இலைகள் நிழலில் வளரும் தேயிலைகளால் தயாரிக்கப்படுகிறது. அதோடு இதன் வளரும் முறை மற்றும் அறுவடை செய்யும் முறையினால், மட்சா க்ரீன் டீ சாதாரண க்ரீன் டீயை விட அதிக ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது.
சரியான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உண்பது க்ரீன் டீ உதவியுடன் உடல் எடையைக் குறைக்க நினைத்தால், அத்துடன் ஆரோக்கியமான டயட்டையும் மேற்கொள்ள வேண்டும். அதைவிட்டு ஜங்க் உணவுகளையும் உட்கொண்டு, க்ரீன் டீ குடித்து உடல் எடை குறையவில்லை என்று குறை கூறக்கூடாது. க்ரீன் டீ குடித்து உடல் எடை குறைய வேண்டுமென நினைத்தால், ஆரோக்கியமான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும். குறிப்பாக அதிகளவு காய்கறிகளை அன்றாட டயட்டில் தவறாமல் சேர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் சிறு சிறு இடைவெளிகளில் குறைந்த அளவிலான உணவுகளை உட்கொள்ள வேண்டியதும் அவசியம்.
க்ரீன் டீ எப்போது குடிக்க வேண்டும்? க்ரீன் டீ குடிப்பதற்கான சிறப்பான நேரம் எதுவென்று கேட்டால், அது உணவு உட்கொள்ளும் போது தான். அதிலும் உங்களுக்கு சென்சிடிவ் வயிறு என்றால், க்ரீன் டீ கடுமையான வாய்வுத் தொல்லையை உண்டாக்கும். இத்தகையவர்கள் க்ரீன் டீக்கு பதிலாக உலாங் டீ குடிப்பது நல்ல பலனைத் தரும்.
நற்பதமான தேயிலைகள் க்ரீன் டீயினால் கிடைக்கும் முழு நன்மைகளையும் பெற நினைத்தால், க்ரீன் டீ பேக்குகளைப் பயன்படுத்துவதற்கு பதிலாக அதன் இலைகளைப் பயன்படுத்துங்கள். அதுவும் கொதிக்கும் நீரில் க்ரீன் டீ இலைகளைப் போட்டு, மூடி வைத்துவிட வேண்டும். பின் சிறிது நேரம் கழித்து வடிகட்டி தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்த கலந்து குடிக்கலாம். இதனால் க்ரீன் டீ சுவையாக இருப்பதோடு, அதனால் கிடைக்கும் முழு நன்மைகளையும் பெற முடியும்.
க்ரீன் டீ சாறு (Green Tea Extract) உங்களுக்க ஒரு நாளைக்கு 6 கப் க்ரீன் டீ குடிப்பது என்பது அசாத்தியமானதாக தோன்றுகிறதா? அப்படியெனில் ஒரு மில்லிமீட்டர் க்ரீன் டீ சாற்றினை எடுங்கள். இதில் 8-10 கப் க்ரீன் டீயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளது. உங்களுக்கு இது சிறப்பான வழியாகத் தோன்றினால், க்ரீன் டீ சாற்றினை உட்கொள்ளுங்கள்.
ஒருவேளை நீங்கள் உங்கள் உடல் எடையைக் குறைக்க க்ரீன் டீ குடிக்க ஆரம்பிக்கவில்லை என்றால், உடனே க்ரீன் டீ குடிக்க ஆரம்பியுங்கள். இதனால் உடல் எடை குறைவதோடு, நாள் முழுவதும் உடல் சுறுசுறுப்புடன் ஆரோக்கியமாக இருக்கும். கீழே க்ரீன் டீ குடிப்பதால் கிடைக்கும் இதர முக்கிய நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
இதய ஆரோக்கியம் மேம்படும் க்ரீன் டீ உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து, நேரடியாக இதய நோய்க்கு வழிவகுப்பதைத் தடுக்கும். க்ரீன் டீயில் உள்ள கேட்டசின்கள், பெருந்தமனி தடிப்பு ஏற்படுவதைக் குறைத்து, இதய நோயின் அபாயத்தைக் குறைக்கும். மேலும் ஆய்வு ஒன்றில், க்ரீன் டீயை அன்றாடம் குடிப்பவர்களுக்கு 31% இதய நோய் வரும் அபாயம் குறைவதாக தெரிய வந்துள்ளது.
இரத்த அழுத்த பிரச்சனை சீராகும் க்ரீன் டீ இரத்த அழுத்த பிரச்சனைகளை சீராக்கும். ஆய்வு ஒன்றில் 3-4 கப் க்ரீன் டீ குடிப்பவர்களுக்கு இரத்த அழுத்த பிரச்சனை நீங்கி சீராக இருப்பது தெரிய வந்துள்ளது. க்ரீன் டீ குடித்து, ஒருவரது உடலில் இரத்த அழுத்தம் சீராக இருந்தால், அவர்களுக்கு கரோனரி இதய நோயின் அபாயம் 5% மற்றும் பக்கவாத அபாயம் 8% குறையுமாம்.
டைப்-2 சர்க்கரை நோய் அபாயம் குறையும் க்ரீன் டீ சர்க்கரை நோய் வராமல் தடுப்பதோடு, சர்க்கரை நோயாளிகளுக்கும் நல்லது. ஏனெனில் இது உடலின் வளர்சிதை மாற்ற செயல்பாட்டை மேம்படுத்தும். க்ரீன் டீயில் உள்ள பாலிபீனால்கள், உடலில் க்ளுக்கோஸ் அளவை சீராக்கி, சர்க்கரை நோயின் அபாயத்தைக் குறைக்கும். கொரியன் ஆய்வு ஒன்றில், 6 மற்றும் அதற்கு மேற்பட்ட அளவில் க்ரீன் டீ குடித்தால், டைப்-2 சர்க்கரை நோயின் அபாயம் 33 சதவீதம் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும் 6 கப் க்ரீன் டீயைக் குடிக்கும் முன் மருத்துவரிடம் கேட்டுக் கொள்ளுங்கள்.
நோயெதிர்ப்பு மண்டலம் வலுபெறும் க்ரீன் டீயில் உள்ள கேட்டசின்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்துவதில் முக்கிய பங்கை வகிக்கிறது. இந்த டீ ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் ராடிக்கல்களை எதிர்த்து உடலுக்கு பாதுகாப்பு அளித்து, நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையை மேம்படுத்துகிறது. எனவே உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்த நினைத்தால், க்ரீன் டீ குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.