சிகரெட் பழக்கத்தைக் கைவிட உதவும் ஓர் பொருள் தான் நிக்கோட்டின் சூயிங் கம். பொதுவாக சிகரெட், மது போன்றவற்றிற்கு அடிமையானவர்களால், அவ்வளவு எளிதில் அவற்றை கைவிட முடியாது. அதிலும் சிகரெட் பழக்கத்திற்கு அடிமையானவர்கள், அதிலிருந்து மீள்வது மிகவும் கடினம். நிக்கோட்டின் அளவு உடலில் குறைந்தால், அதனால் ஒருவிட பதற்றம் ஏற்படும்.
இதனைத் தடுத்து, உடலில் நிக்கோட்டின் அளவை சீராகவும், குறைவாகவும் பராமரிக்க தான் நிக்கோட்டின் சூயிங் கம் உதவுகிறது. சிகரெட் பழக்கத்தைக் கைவிட ஒருநாளைக்கு 9 சூயிங் கம்களை மெல்லலாம் என்று மருத்துவர்கள் கூறினாலும், இதனை தொடர்ந்து எடுத்து வந்தால், உடலில் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
எனவே நீங்கள் சிகரெட்டை நிறுத்த முயற்சிப்பவராயின், நிக்கோட்டின் சூயிங் கம்களை எடுப்பதுடன், கொஞ்சம் கொஞ்சமாக இவற்றையும் குறைத்து, நாளடைவில் முற்றிலும் தவிர்த்திட வேண்டும். இல்லாவிட்டால், கீழே கொடுக்கப்பட்டுள்ள பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். சரி, இப்போது நிக்கோட்டின் சூயிங் கம்களை மெல்லுவதால் சந்திக்கும் பிரச்சனைகள் என்னவென்று பார்ப்போமா!!!
குமட்டல் மற்றும் வயிற்று வலி நிக்கோட்டின் சூயிங் கம்மை தொடர்ந்து மென்று வந்ததால் நிறைய மக்கள் குமட்டல் மற்றும் கடுமையான வயிற்று வலியை சந்தித்துள்ளார்கள். இந்த மாதிரியான பிரச்சனையை நீங்கள் சந்தித்து வந்தால், உடனே நிக்கோட்டின் சூயிங் கம்களை நிறுத்துவதோடு, மருத்துவரை அணுகி போதிய சிகிச்சையைப் பெறுங்கள்.
கெட்ட கனவுகள் சொன்னால் நம்பமாட்டீர்கள், நிக்கோட்டின் சூயிங் கம்களை மெல்லுவதால் சில மக்கள் இரவில் கெட்ட கனவுகளை சந்தித்துள்ளதாக ரிபோர்ட் ஒன்றில் தெரிய வந்துள்ளது. இது இப்படியே நீடித்தால், அதனால் தூக்கமின்மை ஏற்பட்டு, அதன் மூலம் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
மங்கலான பார்வை ஆய்வு ஒன்றில் நிக்கோட்டின் சூயிங் கம்களை பயன்படுத்திய பலர் பார்வை பிரச்சனையை சந்தித்தது தெரிய வந்துள்ளது. நிக்கோட்டின் சூயிங் கம்களை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவது, புகைப்பிடிப்பதற்கு சமம். எனவே உங்களுக்கு பார்வையில் பிரச்சனை ஆரம்பித்தால், நிக்கோட்டின் சூயிங் கம்களை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.
சுவாசிப்பதில் பிரச்சனை நிக்கோட்டின் சூயிங் கம்களை அதிகமாக பயன்படுத்தி வந்தால், சுவாசிப்பதில் பிரச்சனை ஏற்படக்கூடும். எனவே இப்பிரச்சனையை சந்தித்தால், மருத்துவரை சந்தித்து, அவரின் அறிவுரையின் படி நடந்து கொள்ளுங்கள். முக்கியமாக நிக்கோட்டின் சூயிங் கம் மெல்லுவதை முதலில் நிறுத்துங்கள்.
முடி உதிரும் சிலர் முடி உதிரும் பிரச்சனையை சந்திக்க நேரிடும். இதற்கு உடலில் அளவுக்கு அதிகமான நிக்கோட்டின் இருப்பது தான். ஏனெனில் நிக்கோட்டினானது மயிர்கால்களை பாதித்து, அதனால் முடி உதிர்வதை அதிகரிக்கும்.
நரம்பு மண்டலம் பாதிக்கப்படும் அதிகப்படியான நிக்கோட்டின் சூயிங் கம் பயன்படுத்துபவர்கள், எப்போதும் ஒருவித பதட்டத்தை சந்திப்பார்கள். இதற்கு நிக்கோட்டினானது உடலின் மைய நரம்பு மண்டலத்தை பாதித்தது தான் காரணம்.
அடிமையாவது சிகரெட்டை நிறுத்துவதற்கு நிக்கோட்டின் சூயிங் கம்மைப் பயன்படுத்துபவர்கள், சில நேரங்களில் இதற்கு அடிமையாகிவிடுவார்கள். இதற்கு இதனை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தியது மட்டுமின்றி, நீண்ட நாட்கள் பயன்படுத்தி வருவதும் ஓர் காரணம். எனவே மருத்துவர் பரிந்துரைத்த அளவு மட்டும் எடுத்து வாருங்கள். அதுமட்டுமின்றி, கூடிய விரைவில் இந்த நிக்கோட்டின் சூயிங் கம்மை எடுத்துக் கொள்வதையும் நிறுத்திக் கொள்ளுங்கள்.