நம் செயல்கள், பேச்சு, சமூக ஈடுபாடு இவையெல்லாம் ஒன்று சேர்ந்து தான் நல்ல இமேஜை உருவாகும். அந்த இமேஜை கட்டமைப்பது நம் கையில்தான் இருக்கிறது.
நம்மை சிறந்தவராக உருவாக்கும் பேச்சு
மனிதர்கள் ஒவ்வொருவரும் சமூகத்தில் தங்களை பற்றி உயர்வான மதிப்பீடு உருவாக வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதற்காக தங்கள் ‘இமேஜை’ வளர்த்துக்கொள்ள பல்வேறு முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள். ஒருவருடைய இமேஜ் உயர துணைபுரிவது அவரது நடவடிக்கைகள்தான்.
சமூகம் ஒருவருடைய இமேஜை எப்படி தீர்மானிக்கிறது என்று பார்த்தால், அதில் முதலிடம் பெறுவது அவரது பேச்சு. மற்றவர்களிடம் எப்படி பேசுகிறோம், எந்த மாதிரியான வார்த்தைகளை உச்சரிக்கிறோம் என்பவை கவனிக்கப்படவேண்டியவை. நம்முடைய இமேஜ் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் வார்த்தைகள் தானே கட்டுக்குள் வந்து விடும். நிதானமாக யோசித்து வார்த்தைகளை வெளிப்படுத்த வேண்டும். வார்த்தைகளில் கடுமைகாட்டாமல் இன்முகத்துடன் மற்றவர்களிடம் பேசிப்பழகவேண்டும். நாளடைவில் அதுவே வழக்கமாக மாறிவிடும்.
நம்முடைய சொல்லும், செயலும் மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளும்படி அமையும்போது நிரந்தரமாக ஒரு நல்ல இமேஜை ஏற்படுத்தி விடலாம். அதற்கு எப்போதும் நல்ல வார்த்தைகளை பேசி பழக வேண்டும். ஒருபோதும் கோபத்தில் வார்த்தைகளை கொட்டிவிடக்கூடாது. அது நமது இமேஜை நாசப்படுத்திவிடும்.
கோபம், நிதானத்தை கெடுத்துவிடும். எதை பற்றியும் யோசிக்க இடம்கொடுக்காமல், தன் போக்கிற்கு மனதை இழுத்து சென்று பிரச்சினைக்குள் தள்ளிவிடும். அதன்பிறகு பாழாகிப்போகும் இமேஜை நிலைநிறுத்த பல வருடங்கள் போராட வேண்டியிருக்கும்.
‘இமேஜ்’ மீது அதிக அக்கறை எடுத்துக்கொள்பவர்கள் சமூகத்தில் பல விஷயங்களை கவனிக்கவேண்டியுள்ளது. பலர் கூடியிருக்கும் இடத்தில் நடந்துகொள்ளும் விதம், மற்றவர்களிடம் பழகும் விதம், தம்முடைய நல்ல குணங்களை வெளிப்படுத்தும் விதம், சமூக அக்கறையை வெளிப்படுத்தும் விதம், மற்றவருக்கு உதவும் குணம் போன்ற பல விஷயங்களில் அவர்கள் அக்கறை செலுத்தவேண்டியதிருக்கிறது. பொது இடங்களில் அவர்கள் இருக்கும் ஒவ்வொரு வினாடியையும் அவர்கள் கவனமாகவே கடக்கவேண்டியதிருக்கிறது. ஏன்என்றால் பலரது பார்வை அவர் மீது பதிந்திருக்கும்.
பல நேரங்களில் நாம் நடந்து கொள்ளும் விதம், பேசும் விதம் எல்லாமே சரி என்றே நமக்கு தோன்றும். ஆனால் அது சரியில்லாததாக மற்றவர்களுக்கு தெரியலாம். அதனால் இமேஜை வளர்க்க விரும்புகிறவர்கள் மற்றவர்களுக்கு தக்கபடி தங்களை மாற்றிக்கொள்ள வேண்டியதிருக்கிறது. சிலர் பொது இடங்களில் நன்றாக நடந்துகொள்வார்கள்.
அவர்களுக்கு அங்கே நல்ல இமேஜ் இருக்கும். ஆனால் வீட்டில் அதில் இருந்து முரண்பாடானவராக நடந்துகொள்வார்கள். அப்படிப்பட்டவர்கள் வீட்டில் சராசரி மனிதர்களுக்கும் கீழ்நிலையிலே மதிக்கப்படுவார்கள். இப்படிப்பட்ட இரட்டை நிலை மாற்றப்படவேண்டும். வீட்டிலும், வெளியேயும் அவர் தனது இமேஜை ஒரே மாதிரி சரிசெய்துகொள்ளவேண்டும்.
இமேஜை வளர்க்க விரும்புகிறவர்கள் நயமாக, சமயோசிதமாக பேசும் கலையை வளர்த்துக்கொள்ளவேண்டும். மற்றவர்கள் மனம் அறிந்து பேசவேண்டும். மற்றவர்கள் மனநிலை தெரியாமல் பேசும் பேச்சு, பேசுபவரை பற்றி தவறாக கருத வைத்துவிடும். கூடுமானவரை மற்றவர்களை விமர்சித்து பேசும் வழக்கத்தை தவிர்க்கவேண்டும். ஒருவரை பற்றி உயர்வாக பேச எத்தனையோ விஷயங்கள் இருக்கும்போது, அவைகளை எல்லாம் விட்டுவிட்டு குறைகளை பற்றி மட்டும் பேசுவது, எந்த வகையிலும் இமேஜை வளர்க்க பயன்படாது.
எடுத்துக்கொண்ட கருத்தை மையமாக வைத்துக்கொண்டு தெள்ளத்தெளிவாகபேசவேண்டும். சுவைபட பேசவேண்டும். நகைச்சுவையும் அதில் இடம் பெறவேண்டும். நாகரிகமான வார்த்தைகள் வெளிப்படவேண்டும். உங்கள் பேச்சை மற்றவர் ரசிக்கவேண்டும். மதிக்கவேண்டும். அது உங்கள் இமேஜை உயர்த்தும்.
நம்மைப் பற்றிய தவறான கருத்து மற்றவர்கள் மனதில் பதிய நாம்தாம் காரணமாக இருக்கிறோம். அதை மாற்ற முயற்சிக்கும் போது நம்மை நாமே திருத்திக்கொள்ளும் வாய்ப்பும் கிடைக்கிறது.
முற்போக்கு சிந்தனை இருக்கலாம். முரட்டுத்தனம் இருக்கக் கூடாது. மற்றவர்கள் மத்தியில் நாம் நடந்துகொள்ளும் விதம் என்பது மிகவும் முக்கியம். நம்மை நாமே உயர்த்திக்கொண்டு மற்றவர்களை தாழ்த்திப் பேசுவது ஒருபோதும் நமக்கு பெருமை சேர்க்காது. நம் செயல்கள், பேச்சு, சமூக ஈடுபாடு இவையெல்லாம் ஒன்று சேர்ந்து தான் நல்ல இமேஜை உருவாகும். அந்த இமேஜை கட்டமைப்பது நம் கையில்தான் இருக்கிறது.