தேன் என்றாலே நாவில் எச்சில் ஊறாமல் யாருக்காவது இருக்குமா? சுவை என்றாலே அமுதத்திற்கு அடுத்த படியாக நாம் கூறுவது தேனாக தான் இருக்க முடியும். சுவையோடு சேர்த்து அதில் பல உடல் நல பயன்கள் இருப்பது கண்டிப்பாக நம்மில் பலருக்கும் தெரிந்திருக்கும். அதுமட்டுமல்லாது அதில் பல அழகு பயன்களும் அடங்கியுள்ளது. இதோடு நிற்காமல் உடல் எடையை குறைக்கவும் தேனை பயன்படுத்தலாம் என்பது உங்களுக்கு தெரியுமா?
ஆம், உண்மையே! உடல் எடையை குறைக்க தேன் ஒரு மிகச்சிறந்த மூலப்பொருளாக திகழ்கிறது. ஆராய்ச்சிகளின் படி, 3 வார காலத்திற்குள் குறைந்த அளவை கொண்ட ஆடைகளை தேடி நீங்கள் செல்ல வேண்டியிருக்கும். எப்படி என்று தானே கேட்கிறீர்கள்? தினமும் படுக்க செல்வதற்கு முன்பு ஒரு டீஸ்பூன் தேனை குடிக்க வேண்டும். கேட்க மிகவும் நன்றாக உள்ளது தானே? உடல் எடையை குறைக்க அது எப்படி வேலை செய்கிறது என்பதை பார்க்கலாமா…?
தேன் டயட் என்றால் என்ன?
தேன் போன்ற ஃப்ரூக்டோஸ் வளமையாக உள்ள பொருட்களை உட்கொண்டு வந்த விளையாட்டு வீரர்களுக்கு அதிகளவில் கொழுப்பு எரிக்கப்பட்டு, ஆற்றல் திறன் அளவுகளும் அதிகரிக்கப்பட்டதை தேன் டயட்டை கண்டுப்பிடித்த மைக் மெக்கனஸ் அவர்கள் கண்டுபிடித்தார். நம் ஈரல் அதிகமான அளவில் குளுக்கோஸை சுரக்க தேன், ஒரு எரிபொருளாக உதவுகிறது. இந்த குளுக்கோஸ் மூளையில் உள்ள சர்க்கரை அளவை அதிகமாக வைத்திடும். இதனால் கொழுப்பை எரிக்கும் ஹார்மோன்களை அது சுரக்க தூண்டும்.
எடையை குறைக்க தேனை எப்படி உட்கொள்ள வேண்டும்?
தேன் டயட்டில் இருந்து பயனை பெற, நாள் முழுவதும் சர்க்கரை எடுத்துக் கொள்வதற்கு பதிலாக தேனை எடுத்துக் கொள்ள ஆரம்பியுங்கள். கூடுதலாக, தினமும் இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு வெந்நீரில் 3 டீஸ்பூன் தேனை கலந்து குடியுங்கள். இதனை ஒரு பழக்கமாக எடுத்துக் கொண்டு, வாரம் மூன்று முறை இதனை தொடர்ந்து குடிக்கவும். கண்டிப்பாக உங்கள் உடல் எடை வெகுவாக குறையத் தொடங்கும். தேனை உட்கொள்வதை பழக்கப்படுத்தி விட்டால், சர்க்கரைக்காக உங்கள் மூளை ஏங்குவது முழுமையாக நின்றுவிடும் என ஆய்வுகள் கூறுகிறது.
இது எப்படி வேலை செய்கிறது?
அதிகளவிலான சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை நம்மில் பலரும் உட்கொண்டு வருவதால் தான் உடல் எடையை குறைக்க மிகவும் கஷ்டப்படுகிறோம் என மைக் மெக்கனஸ் கூறியுள்ளார். தூங்கச் செல்வதற்கு முன்பு தேன் குடித்தால், தூங்க ஆரம்பித்த ஆரம்பகட்ட நிலையில், உங்கள் உடல் அதிகளவிலான கொழுப்புகளை எரிக்க தொடங்கும். நீங்கள் ஒரு படி மேலே சென்று, உங்கள் தேன் டயட்டின் ஒரு பகுதியாக, உட்கொள்ளும் அனைத்து ரிஃபைன்ட் சர்க்கரையையும் மாற்றி விட்டால், அதிகமாக சர்க்கரை உணவுகளை உட்கொள்ள தூண்டும் மூளையின் சமிக்ஞை சமநிலையாகிவிடும்.
சர்க்கரைக்கு பதில் தேனை மாற்றுங்கள்
உங்கள் உணவில் இருந்து சர்க்கரையை நீக்குங்கள். அப்படியானால் அதில் செயற்கை இனிப்புகளும் தான் அடங்கும். உங்கள் தேநீர், காபி மற்றும் தானிய உணவுகளில் சர்க்கரைக்கு பதில் தேனை பயன்படுத்துங்கள். நீங்கள் சமைக்கும் பொருட்களின் மீதும் ஒரு கண்ணை வைத்துக் கொள்ளுங்கள். இதனால் அங்கேயும் சர்க்கரையை பயன்படுத்தாமல் இருக்கலாம்.
ஜங்க் உணவுகளைத் தவிர்க்கவும்
ஜங்க் உணவுகள் எல்லாம் பதப்படுத்தப்பட்ட உணவுகளாகும். அதில் கலோரிகள் மட்டுமே முழுமையாக அடங்கியுள்ளது. தேன் டயட்டில் இருந்து முழுமையான பயனை பெற ஜங்க் உணவுகளை உட்கொள்வதை முதலில் நிறுத்துங்கள்.
சுத்தப்படுத்தப்படாத கார்ப்ஸ் வேண்டாமே!
வெள்ளை பாஸ்தாவில் உள்ள சுத்தப்படுத்தப்பட்ட வெள்ளை மாவும், வெள்ளை அரிசி சாதமும் உங்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவுகளை அதிகரிக்கச் செய்யும். அதனால் முழு கோதுமை மாவை பயன்படுத்துங்கள். இது செரிமானத்திற்கு மிகவும் நல்லதாகும். மேலும் நீண்ட நேரத்திற்கு வயிறு நிறைந்திருக்க செய்யும்.
புரதங்களை உட்கொள்ளுங்கள்
அளவான அளவில் புரதத்தை எடுத்துக் கொண்டாலும், அது நீங்கள் உண்ணும் அனைத்து வேளை உணவிலும் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். இது நீண்ட நேரத்திற்கு வயிறு நிறைந்திருக்க செய்யும். மேலும் சர்க்கரையின் மீது ஏக்கத்தை ஏற்படுத்தும் இரத்த சர்க்கரை அளவின் அதிகரிப்பை தவிர்க்கும்.
பழங்களின் மீது கவனம்
டயட் இருக்கும் போது பழங்கள் சிறந்த உணவுகளே. ஆனால் பல பழங்களில் சர்க்கரை அளவுகள் அதிகமாக இருக்கும் என்பதை மறந்து விடாதீர்கள். இது உங்கள் தேன் டயட்டை வெகுவாக பாதிக்கும். அதனால் ஒன்று பழங்கள் உட்கொள்ளும் அளவை குறையுங்கள் அல்லது பெர்ரிகள் மற்றும் ருபார்ப் போன்ற குறைந்த கார்ப்ஸ் கொண்ட பழங்களை தேர்ந்தெடுங்கள்.
உருளைக்கிழங்குகள் வேண்டாமே!
எந்த வகையில் இருந்தாலும் சரி, உருளைக்கிழங்கை தவிர்க்கவும். இது உடலில் உள்ள இண்டுலின் அளவை அதிகரிக்க செய்யும். ஆகவே உருளைக்கிழங்கை தவிர்க்க சொல்லி தேன் டயட் கூறுகிறது.