பொதுவாக பெண்களின் பூப்படையும் வயது என்பது 14 – 16 வயதினுள் இருந்தது. இந்த வயதில் தொடங்கும் அவர்களது மாதவிடாய் காலம் பெண்களுக்கு 45 – 50 வயது வரை தொடரும். கடை நிலைகளில் ஏற்படும் மாதவிடாய் மிகுந்த இரத்த போக்கை வெளியேற்றும், மிகவும் வலி நிறைந்ததாக இருக்கும். இது தான் இயற்கையாக பெண்களின் மாதவிடாய் காலமாக இருந்து வந்தது சில வருடங்களுக்கு முன்பு வரை. நமது கலாச்சார மாற்றத்தினால் பெரிதாக என்ன மாறிவிட போகிறது என பேசுபவர்கள் சில விஷயங்களை புரிந்துக்கொள்ள வேண்டும். நமக்கு நாமே கால நிலைக்கு ஒத்துப்போகாத உணவு பழக்கங்கள், வாழ்வியல் மாற்றங்களை மாற்றிக்கொண்டதால் தான். இன்று நமது நாட்டில் பெண்களுக்கு அதிக அளவில் மார்பக புற்று நோயும், மிக சிறிய வயதிலேயே பூப்படையும் நிகழ்வுகளும் நடக்கின்றன.
இதனால் என்ன ஆகிவிட போகிறது, இந்த சின்ன மாற்றங்கள் பெரிதாக நம்மை என்ன செய்துவிடும் என்ற நமது ஏளன எண்ணங்களினால் பெருவாரியாக பாதிக்கப்படுபவர்கள் பெண்கள் தான். பூப்படையும் விஷயத்தில் அவர்களது வாழ்க்கையில் ஏற்படும் மாற்றத்தினால் அவர்கள் உடல்நலத்திற்கும், உயிருக்கும் எவ்வளவு பாதிப்புகள் ஏற்படுகின்றது என்பதில் நாம் துளியும் அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. ஏன் உணவு பழக்கத்தினால் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் பக்க விளைவுகளினால், பெண்களுக்கு ஏற்படும் உடல்நிலை மாற்றங்கள் பற்றி அவர்களுக்கே தெரிவதில்லை. இதை எடுத்து கூறினாலும் கேட்க நாதியில்லை. இது தான் நமது சமுதாயத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிதர்சனம். இனியாவது இதைப் பற்றிய விழிப்புணர்வை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள். முன்கூட்டியே நின்றுவிடும் மாதவிடாய் காரணத்தினால் பெண்களின் எதிர்காண இருக்கும் உடல்நிலையை மாற்றங்கள்…
உடல் சார்ந்த முதிர்ச்சி தன்மை அதிகரிக்கிறது
நமது டி.என்.ஏ-வை இழை போன்ற ஒரு மேற்புற போர்வை (telomeres) தான் பாதுகாத்து வருகிறது. இது மிகவும் சிறிய உருவம் கொண்டதாகும். மாதவிடாய் முன்கூட்டியே நின்றுவிடுவதனால் அந்த இழை போன்று படர்ந்திருக்கும் பாதுகாப்பு போர்வை பாதிப்பு அடைகிறது. இதனால், பெண்களின் உடல் பாகங்கள் விரைவாகவே முதிர்ச்சி அடைகிறது.
இரசாயன பொருட்களின் ஊடுருவல்
பெண்கள் உபயோகப்படுத்தும் லிப்ஸ்டிக்கில் இருந்து கைப்பை, உணவு எடுத்து செல்லும் பெட்டி, சமைக்க பயன்படுத்தும் பாத்திரங்கள், மைக்ரோவேவ் ஓவன் என அனைத்திலும் நாம் பிளாஸ்டிக்கை உட்புகுத்திவிட்டோம். இதனால் பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. பெண் தன்மை உடலிலுள்ள செல்களில் அதிகமாகிறது. இதன் காரணமாக தான் பெண்கள் விரைவாக பூப்படைகின்றனர் மற்றும் ஆண்களுக்கு ஆண்மையில் குறைபாடு ஏற்படுகிறது. இதை உணர்ந்தாவது இனிமேல் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாது இருங்கள்.
முதன்மை கருப்பை பற்றாக்குறை
சில பெண்களுக்கு அவர்களது 30-35 வயதின்னுள்ளேயே மாதவிடாய் நிற்கும் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. சில சமயங்களில் பெண்களுக்கு மாதவிடாய் தள்ளி போகலாம், மாத இடைவேளைகள் ஏற்படலாம். இதை இறுதி மாதவிடாய் காலம் என நினைத்துக் கொள்ள வேண்டாம். இது முதன்மை கருப்பை பற்றாக்குறை எனப்படுகிறது. இதனால் நீங்கள் கருத்தரிக்க முடியாது என கூறிட முடியாது. கருத்தரிப்பதற்கான வாய்ப்புகள் சரியான மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்வதன் மூலம் அடையலாம்.
இதய நோய்கள்
பொதுவாக பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் காலம் 50 வயது என கூறப்படுகிறது. இதற்கு முன்பு அல்லது மிக விரைவாக 40 வயதளவில் மாதவிடாய் நின்றுவிடும் பெண்களுக்கு 40% இதய நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.
எலும்பு வலுவிழக்கிறது
ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவாக இருக்கும் போது, எலும்பின் வலிமையையும் குறைந்துவிடும். பொதுவாக பெண்களுக்கு மாதவிடாய் நிறுக்கும் காலத்தில் ஈஸ்ட்ரோஜன் குறையும் வாய்ப்புகள் இருக்கிறது. எனவே, முன்கூட்டியே மாதவிடாய் நிற்கும் பெண்களுக்கு அதிகமாக எலும்பு முறிவு ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாய் கூறப்படுகிறது.
ஞாபக மறதி
நமது டி.என்.ஏ-வை பாதுகாப்பு வளையம் போல இருந்து பாதுகாத்து வரும் இழை படிமம் (telomeres), முன்கூட்டியே நிற்கும் மாதவிடாய் காரணத்தினால் பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாய் பெண்களுக்கு ஞாபக மறதி ஏற்படும் என கூறப்படுகிறது.
புற்றுநோய்
இதில் இருக்கும் ஒரே ஒரு நல்ல விஷயம் என்னவெனில், பெண்களுக்கு இதன் மூலமாக கருப்பை புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என கூறப்படுகிறது.