இரவில் தூங்கி காலையில் எழும் போது தாடைப்பகுதிகளில் வலி அல்லது அடிக்கடி லேசான தலைவலியை உணர்கிறீர்களா? அப்படியானல், அதற்கு காரணம் இரவில் தூக்கத்தில் உங்களுக்கு பற்களைக் கொறிக்கும் பழக்கம் இருப்பது தான். பெரும்பாலும் இந்த பழக்கமானது அதிகப்படியான வேலைப்பளுவால் உண்டாகும் மன அழுத்தம் அல்லது அளவுக்கு அதிகமாக மது அருந்துவது போன்றவற்றால் வரும்.
சில சமயங்களில், வளரும் குழந்தைகளும் இரவில் தூக்கத்தில் இம்மாதிரியான பற்களைக் கொறிக்கும் பழக்கத்தைக் கொண்டிருப்பார்கள். உங்களுக்கு பற்களைக் கொறிப்பதற்கான காரணங்கள் மற்றும் அறிகுறிகள் குறித்தும், இதை சரிசெய்வதற்கான சில இயற்கை வழிகள் குறித்தும் தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா? அப்படியெனில் இக்கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள்.
காரணங்கள் ஒருவர் தூக்கத்தில் பற்களைக் கொறிப்பதற்கு பல காரணிகள் உள்ளன. அதில் பொதுவான சில காரணங்களாவன:
* மனக்கவலை : அதிகளவு மன அழுத்தம் மற்றும் மனக் கவலையில் ஒருவர் இருந்தால், தூக்கத்தில் பற்களைக் கொறிக்க அதிக வாய்ப்புள்ளது.
* மருந்துகள் : சில சமயங்களில் குறிப்பிட்ட சில மருந்துகளான மன இறுக்கத்தைத் தடுக்கும் மருந்து மாத்திரைகளின் பக்க விளைவுகளால் தூக்கத்தில் பற்களைக் கொறிக்கலாம்.
* தூக்க பிரச்சனைகள் : தூக்கத்தில் குறட்டை விடுபவர்கள் அல்லது தூக்கம் வராமல் கஷ்டப்படுபவர்கள், ஆழ்ந்த தூக்கத்தின் போது பற்களைக் கொறிப்பார்கள்.
ஸ்லீப் பாராலைசிஸ் : தூங்கும் போது அல்லது எழுந்திருக்கும் போது, தற்காலிக இயலாமைக்கு வழிவகுக்கும் ஒரு நிகழ்வு. ஸ்லீப் பாராலைசிஸ் கூட இரவில் தூக்கத்தில் பற்களை கொறிக்க வைக்கும்.
* புகை மற்றும் மது : புகையிலை பயன்பாடு மற்றும் மது அருந்தும் பழக்கம் கூட, தூக்கத்தில் பற்களைக் கொறிக்கத் தூண்டும் காரணிகளுள் ஒன்றாகும்.
* காப்ஃபைன் : காப்ஃபைன் நிறைந்த பானங்களான டீ மற்றும் காபியை ஒருவர் அதிகமாக குடித்தால், அதுவும் தூக்கத்தில் பற்களைக் கொறிக்க வைக்கும்.
அறிகுறிகள் தூக்கத்தில் பற்களைக் கொறிக்கும் பழக்கத்தின் தீவிர நிலை பல்வேறு அறிகுறிகளை வெளிப்படுத்தும். அதில் இப்பழக்கம் மிகவும் தீவிரமாக இருந்தால் ஒருசில அறிகுறிகள் தென்படும். அதில் தட்டையாக்கப்பட்ட மற்றும் தேய்ந்து போன பற்கள், பளபளப்பான பற்கள், தாடை தசைகளில் வலி, காது வலி, அடிக்கடி தலைவலி, முகத் தசைகளில் வலி போன்றவை குறிப்பிடத்தக்கவை. தூக்கத்தில் பற்களைக் கொறிக்கும் பழக்கத்தைத் தடுக்க ஒருசில இயற்கை வழிகள் உள்ளன. அவற்றைப் பின்பற்றினால், நிச்சயம் தூக்கத்தில் பற்களைக் கொறிப்பதைத் தடுக்கலாம்.
லாவெண்டர் எண்ணெய் ஒரு சிறிய பௌலில் 3-4 துளிகள் லாவெண்டர் எண்ணெய் மற்றும் 1 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் அதனை கழுத்து மற்றும் தாடைப்பகுதிகளில் தடவி, மென்மையாக மசாஜ் செய்யுங்கள். இப்படி ஒரு நாளைக்கு குறைந்தது 2 முறை செய்யுங்கள். இச்செயலால் லவெண்டர் எண்ணெயில் உள்ள உட்பொருட்கள் மன அழுத்தத்தைக் குறைத்து, இரவில் நல்ல தூக்கத்தைப் பெற உதவும்.
புதினா எண்ணெய் 3-4 துளிகள் புதினா எண்ணெயுடன், 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் இந்த எண்ணெய் கலவையை கழுத்து மற்றும் தாடைப் பகுதியில் தடவி சிறிது நேரம் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். இப்படி தினமும் 2 முறை செய்து வந்தால், கூடிய விரைவில் தூக்கத்தில் பற்களைக் கொறிக்கும் பழக்கத்தில் இருந்து விடுபடலாம்.
சீமைச்சாமந்தி எண்ணெய் ஒரு பௌலில் 4-5 துளிகள் சீமைச்சாமந்தி எண்ணெயை எடுத்து, அத்துடன் 1 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் இதனை கழுத்து மற்றும் தாடைப் பகுதிகளில் தடவி, 5 நிமிடம் தொடர்ந்து மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். இப்படி தினமும் 2 முறை என, நல்ல தீர்வு கிடைக்கும் வரை தவறாமல் பின்பற்றி வாருங்கள். இதனால் மன அழுத்தம் மற்றும் மன இறுக்கத்தில் இருந்து நல்ல நிவாரணம் கிடைத்து, பற்களைக் கொறிக்கும் பழக்கமும் நாளடைவில் மறையும்.
சுடுநீர் ஒத்தடம் ஒரு பாத்திரத்தில் சுடுநீரை எடுத்து, அதில் ஒரு துணியை நனைத்து பிழிந்து, பின் அதனைக் கொண்டு கழுத்து மற்றும் தாடைப்பகுதிகளில் ஒத்தடம் கொடுங்கள். இப்படி 4-5 முறை செய்யுங்கள். இந்த செயலை ஒரு நாளைக்கு குறைந்தது 2 முறை செய்து வந்தால், கழுத்து மற்றும் தாடைப்பகுதிகளில் உள்ள தசைகள் ரிலாக்ஸ் அடைந்துவிடுவதோடு, பற்களைக் கொறிக்கும் பழக்கமும் மறைந்து மறந்துவிடும்.
வலேரியன் வேர் * ஒரு பாத்திரத்தில் 1 கப் நீரை ஊற்றி, அதில் 1 டேபிள் ஸ்பூன் உலர்ந்த வலேரியன் வேரைப் போட்டு 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்க வேண்டும். * பின் அதை வடிகட்டி, இனிப்பு சுவைக்கு தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். * இந்த டீயை ஒருவர் தினமும் இரவில் படுக்கும் முன் குடித்தால், தூக்கமின்மை பிரச்சனை, மன இறுக்க பிரச்சனை போன்றவை நீங்கி, தூக்கத்தில் பற்களைக் கொறிப்பதைத் தடுக்கலாம்.
மஞ்சள் பால் * ஒரு பாத்திரத்தில் 1 கப் பால் ஊற்றி நன்கு சூடேற்றி கொதிக்க வைக்க வேண்டும். * பின் அதை இறக்கி பாலில் 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். * பின்பு அதில் தேன் சேர்த்து கலந்து வெதுவெதுப்பான நிலையில் குடிக்க வேண்டும். * இப்படி தினமும் இரவில் படுக்கும் முன் குடித்து வந்தால், அந்த பாலில் உள்ள மருத்துவ பண்புகள் தாடை தசைகளை ரிலாக்ஸ் அடையச் செய்து, பற்களைக் கொறிப்பதால் ஏற்படும் வலியில் இருந்தும் நிவாரணம் அளிக்கும்.
மசாஜ் வெதுவெதுப்பான நீரால் முகம் மற்றும் கழுத்தைக் கழுவுங்கள். பின் கழுத்து, தாடைப் பகுதி மற்றும் தோள்பட்டை பகுதியை மென்மையாக 5 நிமிடம் மசாஜ் செய்யுங்கள். இப்படி தினமும் இரவில் படுக்கும் முன் செய்ய வேண்டும். இச்செயலால் மன அழுத்தத்தில் இருந்து நிவாரணம் அளிக்க உதவுவதோடு, தசைகளை ரிலாக்ஸ் அடையச் செய்து, நல்ல நிம்மதியான தூக்கத்தைத் தூண்டும்.
வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் உடலின் சரியான செயல்பாட்டிற்கு வைட்டமின்களும், கனிமச்சத்துக்களும் சரியான அளவில் இருக்க வேண்டியது அவசியம். இவைகளில் ஏதேனும் குறைபாடு ஏற்பட்டால், இதனால் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளான மன அழுத்தம், மன இறுக்கம் போன்றவற்றை உண்டாக்கும்.அதிலும் அட்டீனல் சுரப்பியின் முறையான செயல்பாட்டிற்கும், மன அழுத்தத்தைக் குறைக்கவும், வைட்டமின் சி மற்றும் பி காம்ளப்ஸ் வைட்டமின்கள் அவசியமானவை.
அதேப் போல் கால்சியம் மற்றும் மக்னீசியம் குறைபாட்டினால் ஏற்படுபவை தான் தூக்கமின்மை, மன இறுக்கம், ஓய்வின்மை போன்றவை. இந்த சத்துக்கள் உடலில் குறைவாக இருந்தால், அவை தூக்கத்தில் பற்களைக் கொறிக்கும் பழக்கத்தை மோசமாக்கும். எனவே அனைத்து சத்துக்களும் கிடைக்கும் வகையில் பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் சாப்பிட வேண்டும்.
யோகா மற்றும் உடற்பயிற்சி மன அழுத்தமும், மனக் கவலையும் நிறைந்த அன்றாட வாழ்வில், தூக்கத்தில் பலருக்கு பற்களைக் கொறிக்கும் பழக்கம் வந்துவிட்டது. இந்த பிரச்சனைக்கு சிறந்த தீர்வளிக்கும் ஓர் வழி தான் யோகா மற்றும் உடற்பயிற்சி. இவற்றை ஒருவர் அன்றாடம் தவறாமல் மேற்கொண்டு வந்தால், உடலில இரத்த ஓட்டம் அதிகரிப்பதோடு, நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாடும் மேம்படும். எனவே தூக்கத்தில் பற்களைக் கொறிக்கும் பழக்கத்தைக் கைவிட, வாரத்திற்கு 3-4 முறையாவது யோகா அல்லது உடற்பயிற்சியை செய்யுங்கள்.