பொ துவாக, குழந்தை பிறந்து ஆறு மாதங்களுக்குப் பின், தாய்ப்பால் மட்டுமே ஊட்டச்சத்திற்கு போதாது. குழந்தைகளுக்கு பசி அதிகமாக இருக்கும். குழந்தை அடிக்கடி பசியால் அழுதால், தாய்ப்பாலின் அளவைக் குறைத்து, ஓரளவு திட உணவுகளைக் கொடுக்க ஆரம்பிக்க வேண்டும்.
தற்போது பெரும்பாலான பெண்கள் வேலைக்கு செல்வதால், பிரசவம் முடிந்து, மீண்டும் வேலைக்கு செல்லும் முன், குழந்தைக்கு மற்ற திரவ உணவுகளையும் கொடுத்துப் பழக்குங்கள். இதனால், குழந்தை தாய்ப்பாலை எதிர்பார்த்து இருக்காது. ஆறு மாதங்களுக்குப் பின், திட உணவுகளைக் கொடுக்கலாம். குழந்தைக்கு திட உணவுகளை கொடுக்க ஆரம்பித்த பின், ஒன்றரை வயதிற்குள், தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்த வேண்டும்.
குழந்தைக்கு பற்கள் முளைக்க துவங்கினால், தாய்ப்பால் கொடுக்கும்போது கடிக்க ஆரம்பிப்பர்; அப்படி செய்தாலும், தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தும் நேரம் வந்துவிட்டதாக அர்த்தம். குறிப்பிட்ட காலத்திற்கு பின் தாய்மார்களுக்கு, தாய்ப்பால் கொடுப்பதில் ஒருவித வெறுப்புணர்வு ஏற்படும். அப்படி நீங்கள் உணர ஆரம்பித்தாலும், தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தி விடலாம். தாய்மார்களுக்கு ஆரோக்கிய குறைவு ஏற்பட்டு, அதற்காக மருந்து மாத்திரைகளை எடுக்க வேண்டியிருந்தால், தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்த வேண்டும்.