நடிகர்களின் சிக்ஸ் பெக்குகளைக் கண்டு நம் இளைஞர்களில் சிலரும் ஜிம்மே கதியென்று இருக்கத்தான் செய்கிறார்கள். இதில் தவறேதும் இல்லை. உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள முயற்சிப்பது பாராட்டத்தக்கதே!
ஆனால், ஜிம்முக்குச் செல்பவர்கள் தமக்குப் போதுமான உணவுகளை சரிவர எடுத்துக்கொள்கிறார்களா என்பது சந்தேகமே! அதிலும் முக்கியமாக, விற்றமின் டி யை குறைவாக எடுத்துக்கொள்பவர்கள், ஜிம்மில் சரியாகப் பயிற்சி பெற முடிவதில்லை என்று தெரியவந்துள்ளது. டுல்சா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வொன்றிலேயே இது தெரியவந்திருக்கிறது.
கல்லூரியில் விளையாட்டுப் போட்டிகளில் பங்குபெறும் வீரர்கள் நூறு பேரைக் கொண்டு நடத்தப்பட்ட இந்த ஆய்வில், ஒரு லீற்றர் இரத்தத்தில் 72 நெனோ மீற்றரை விடக் குறைவான அளவு விற்றமின் டி இருந்தவர்கள், மற்ற வீரர்களை விட சுமார் பதினெட்டு சதவீதம் குறைவான ஆற்றலையே கொண்டிருந்ததாகத் தெரிவிக்கின்றனர் ஆய்வு நடத்திய விஞ்ஞானிகள்.
முக்கியமாக, நீளம் பாய்வதில் சுமார் எண்பது சதவீதம் குறைந்த ஆற்றல் கொண்டவர்களாகவே அவர்கள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜிம்மில் பயிற்சி பெறுபவர்களில், விற்றமின் டி குறைவாக உள்ளவர்களது திறமையும் குறைவாகவே இருந்ததாக ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர்.
உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு போன்ற செயல்களின்போது, விற்றமின் டியானது உங்கள் தசைநாரின் செல்கள் மிகுந்த ஆற்றலுடன் கல்சியத்தை வெளியேற்றுகிறது. இது, தசைகள் சுருங்கி விரியும் பண்பை அதிகரிக்கிறது என்று தெரியவந்துள்ளது.
எனவே, ஜிம்முக்குச் செல்பவர்களும் சரி, உடல் வலுவை அதிகம் பயன்படுத்தும் விளையாட்டுக்களில் ஈடுபடுபவர்களும் சரி, கொழுப்பு நிறைந்த மீன் மற்றும் பால் போன்ற, விற்றமின் டி செறிந்த உணவுகளை உட்கொள்வது நல்லது.