பார்த்தாலே சாப்பிட தூண்டும் பஞ்சாபி சன்னா மசாலா செய்வது பற்றி உங்களுக்காக.
தேவையான பொருட்கள்: வெள்ளை கொண்டைக்கடலை – ஒரு கப், பெரிய வெங்காயம்- 2, உப்பு – தேவைக்கேற்ப, மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், மிளகாய்தூள்- ஒரு டீஸ்பூன், பூண்டு – 10 அல்லது 12 பல், நெய் – 6 டீஸ்பூன், தக்காளி – 2, பச்சை மிளகாய் – 1, கரம் மசாலா – அரை டீஸ்பூன், மல்லித்தழை – சிறிதளவு, சீரகம் – அரை டீஸ்பூன்.
செய்முறை: வெள்ளை கொண்டைக்கடலையை முதல்நாள் இரவு ஊறவைக்கவும். மறுநாள் குக்கரில் மஞ்சள்தூள், உப்பு, அரை ஸ்பூன் மிளகாய்தூள், பூண்டு சேர்த்து 4 விசில் வரை வேகவிடவும்.
4வது விசிலில், அடுப்பை ‘ஸிம்’மில் சிறிது நேரம் வைக்கவும்.
வெங்காயத்தை விழுதாக அரைக்கவும். ஒரு கடாயில் நெய் ஊற்றி, 2 பல் பூண்டு அரைத்த வெங்காய விழுதுடன் சேர்த்து, பொன்னிறமாகும் வரை வதக்கவும். பின்னர் சீரகம் சேர்க்கவும். பிறகு மசித்த தக்காளி சேர்த்து 5 நிமிடம் வேக வைக்கவும். பச்சை மிளகாய், உப்பு, மிளகாய்தூள், மஞ்சள்தூள் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். மொத்த மசாலாவையும் குக்கரில் சேர்த்து, கொஞ்சம் நீர் விட்டு, சிறிது நேரம் கொதிக்கவிடவும். கரம் மசாலாவையும், மல்லித்தழையையும் சேர்க்கவும். சின்னக் குழந்தை கூட இன்னொரு சப்பாத்தி கேட்கும், சன்னா மசாலா துணை இருந்தால்.