வெயிலின் பாதிப்பை தவிர்க்க கொளுத்தும் வெப்பத்தால் வீடுகள் பாதிக்கப்படாமல், ‘குளுகுளுவென்று’ இருக்க உள் கட்டமைப்பு வல்லுனர்கள் தெரிவிக்கும் வழிகள் பற்றி கவனிப்போம்.
சுட்டெரிக்கும் கோடையை சமாளிக்கும் வீடுகளின் உள் கட்டமைப்பு
சுற்றுப்புற வெப்ப நிலை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கொளுத்தும் வெப்பத்தால் வீடுகள் பாதிக்கப்படாமல், ‘குளுகுளுவென்று’ இருக்க பல்வேறு கட்டுமான யுக்திகள் கடைப்பிடிக்கப்பட்டு வந்திருக்கின்றன. அத்தகைய முறைகள் பற்றியும், வெயிலின் பாதிப்பை தவிர்க்க உள் கட்டமைப்பு வல்லுனர்கள் தெரிவிக்கும் வழிகள் பற்றியும் கவனிப்போம்.
உயரமான மேற்கூரை :
பொதுவாக, வீடுகளின் மேல் தளங்களில் உள்ள அறைகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளின் மேல் தளம் ஆகியவற்றில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதன் காரணமாக பகல் நேரம் மட்டுமல்லாமல், இரவிலும் அறை வெப்ப நிலை அதிகமாக இருக்கும். அதை தவிர்க்க நமது தாத்தா, பாட்டி காலங்களில் ‘சீலிங்’ எனப்படும் கட்டிட மேல் கூரையை வழக்கத்தை விடவும் உயரமாக கட்டியிருப்பார்கள். அந்த கூரை அமைப்பும், வெளிச்சம் மற்றும் காற்றோட்ட வசதிக்காக அமைக்கப்பட்ட பெரிய ஜன்னல்களும் வெயிலின் தாக்கத்தை குறைக்கும் விதத்தில் செயல்படுகின்றன.
பால்ஸ் சீலிங் :
அடுக்குமாடி குடியிருப்புகளில் இருப்பவர்கள் கோடை வெப்பத்தை சமாளிக்க ‘பால்ஸ் சீலிங்’ அமைத்து கொள்ளலாம். பல்வேறு வகையான பொருட்கள் கொண்டு ‘பால்ஸ் சீலிங்’ அமைக்கப்படுகிறது. பொதுவாக, பட்ஜெட்டுக்கு ஏற்ற வகையில் இருக்கும் ‘தெர்மாகோல்’ கொண்டு ‘பால்ஸ் சீலிங்’ அமைப்பதுதான் வழக்கத்தில் உள்ளது. வெயிலின் தாக்கத்தை பெருமளவு கட்டுப்படுத்துவதாக அறியப்பட்ட ‘தெர்மாகோல்’ அமைப்பானது ஏர்-கண்டிஷன் பொருத்தப்பட்ட அறைக்கு மேலும் குளிர்ச்சியை தருவதாக இருக்கிறது. ‘ஏ.சி’ இயங்கும்போது கதவுகள் மற்றும் அலமாரிகள் ஆகியவற்றை மூடிவிட்டால், குளிர் காற்று அறை முழுவதும் கச்சிதமாக பரவும்.
சமையல் அறை :
சமையல் அறைகளில் அமைக்கப்பட்ட ஜன்னல்கள் பெரிதாக இருக்கவேண்டும். அதன் வாயிலாக சமையலறை வெப்பம் மற்ற அறைகளில் பரவாது தடுக்கப்படும். பொதுவாக, மாடுலர் கிச்சன் அறைகளில் பொருத்தப்பட்ட கண்ணாடிகள் சூரிய கதிர்களை பிரதிபலிக்கும் தன்மை கொண்டதால், அதன் மூலம் வீட்டிற்குள் வெப்பம் அதிகமாகும் வாய்ப்பு உண்டு. அதை தடுப்பதற்காக கண்ணாடிகளில் ‘சன் ஸ்கிரீன் ஷீட்’ அல்லது வண்ண படங்களை ஒட்டிவைத்து வெப்பத்தை கட்டுப்படுத்தலாம்.
ஜன்னல் ‘பிளைண்டர்கள்’:
துணிகள், மூங்கில், பிளாஸ்டிக் என்று பல்வேறு வகைகளாக கிடைக்கக்கூடிய ஜன்னல் தடுப்புகளை அமைத்துக்கொண்டால், அறைக்குள் வெயில் தாக்கம் அவ்வளவாக இருக்காது. அதன் வாயிலாக வீட்டுக்குள் வெளிச்சமும், ஜன்னல் ‘பிளைண்டர்களில்’ உள்ள இடைவெளி வழியாக காற்றும் வரும். மேலும், வீட்டில் பயன்படுத்தப்படும் ‘பெட்ஷீட்’, ‘குஷன் கவர்’, ‘ஸ்கிரீன் துணிகள்’ ஆகியவை பருத்தி துணிகளாக இருந்தால் வீடு ‘குளுகுளுவென்று’ இருக்கும். அடர் நிறங்களை தவிர்த்து, வெளிர் நிறங்களில் ‘ஸ்கிரீன்’ வகைகளை பயன்படுத்துவது நல்லது.
சோபா உறைகள் :
தற்போது ‘பர்னிச்சர் ஐட்டங்களில்’ ஒன்றான சோபாக்கள் பெரும்பாலும் ‘லெதர்’ கொண்டு தயாரிக்கப்படுகின்றன. அவற்றில் அதிக நேரம் நாம் அமரும்போது உடல் வெப்பம் அதிகரிக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. குறிப்பாக வயதானவர்களுக்கு சிரமம் தரக்கூடியதாக அறியப்பட்டிருப்பதால், அவற்றின் மேற்புறத்தில் மெல்லிய பருத்தி துணி விரிப்புகளை விரிக்கலாம்.
தரை மற்றும் பால்கனி :
‘டைல்ஸ்’ தரை தளங்கள் தினமும் இரண்டு முறைகள் தண்ணீர் கொண்டு துடைக்கும்போது, தரையின் வெப்பம் குறைந்து குளிர்ச்சியாக இருக்கும். மேலும், பால்கனிகளில் சின்னச் சின்ன பூச்செடிகள் மற்றும் குரோட்டன்ஸ் செடிகள் ஆகியவற்றை அழகிய பானைகளில் வளர்க்கலாம். கொடி வகைகளை பால்கனியில் படர விட்டால் அழகாகவும், ‘குளுகுளு’ என்றும் இருக்கும். மேலும், வீட்டு சுவரில் இயற்கை காட்சிகள் கொண்ட ‘வால் பேப்பர்களை’ ஒட்டி வைத்தால் பச்சை பசேல் என்று கண்களும் இதமாக இருக்கும்.
நீரூற்று அமைப்பு :
நமது பட்ஜெட்டுக்கு தக்கவாறு சிறிய அளவில் ‘வாட்டர் பவுண்டன்’ எனப்படும் நீர் ஊற்றுக்களை வாஸ்துப்படி அமைக்கலாம். நீரின் ஓட்டமானது வளர்ச்சியை குறிப்பிடுவதாக இருப்பதால், வடகிழக்கு திசையில் அவற்றை அமைத்து, வீட்டின் குளிர்ச்சியை இன்னும் அதிகப்படுத்தலாம்.
குளிர்ச்சி தரும்:
வீட்டுக்குள் ஒலிக்கும் தண்ணீரின் சப்தம் மனதில் புத்துணர்ச்சியை உண்டாகும். தண்ணீர் ஓட்டம் இருக்கும் இடம் ஜில்லென்று இருப்பதால் அதன் குளுமை வீடு முழுக்க பரவும். முக்கியமாக மேல்கூரை மற்றும் பக்கச்சுவர்கள் ஆகியவற்றில் பயன்படுத்தும் வண்ணங்கள் ஐவரி, பிங்க், வெளிர் பச்சை ஆகியனவாக இருந்தால் மனதிலும் குளிர்ந்த தன்மையை உண்டாக்கும்.