பிரசவவலிக்குப் பயந்து கர்ப்பிணிகள் சிசேரியன் செய்ய வலியுறுத்துகின்றனர். ஆனால் சிசேரியன் பிரசவத்தால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றி அவர்கள் அறிந்திருப்பதில்லை.பொதுவாக கருவின் வளர்ச்சி 39 வாரங்கள் முழுமையடைந்த பிறகு, 40-வது வாரத்துக்கு இடைப்பட்ட நாட்களில் பிரசவமாவதே ஆரோக்கியம்.
சிலருக்கு 37 – 40 வாரங்களில் பிரசவமாகலாம். இந்த வாரங்களில் வலி வந்து, சுகப்பிரசவத்துக்கு வழியில்லாமல், தாய்க்கோ பிறக்கப்போகும் குழந்தைக்கோ ஏதாவது சிக்கல்கள் ஏற்பட்டு, விரைவாக குழந்தையை வெளியில் எடுக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் மட்டுமே சிசேரியன் செய்யப்படும்.
சிசேரியன் பிரசவமான பெண்களுக்கு உடல்வலி, வயிற்று வலி, தலைவலி, முதுகுவலி, அதிக உதிரப்போக்கு ஏற்படலாம்.
தாயிடம் இருந்து சிசுவுக்கு உணவு மற்றும் ஆக்சிஜனை எடுத்துச் செல்லக்கூடிய நஞ்சுக் கொடி (placenta), தாய் மற்றும் குழந்தைக்கு இணைப்புப் பாலமாக இருக்கும். அந்த நஞ்சுக்கொடி பிரசவத்துக்குப் பிறகு கர்ப்பப்பையில் இருந்து தானாகவே பிரித்துவந்துவிட வேண்டும். ஆனால், சிசேரியன் பிரசவத்தில் நஞ்சுக்கொடி கர்ப்பப்பையிலேயே ஒட்டிக்கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது. இதனால் அடுத்த பிரசவத்தின்போது, தாய்க்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு பிரசவம் சிக்கலாகலாம்.
சிசேரியன் பிரசவம் செய்வதால், தாயின் கர்ப்பப்பையும் நீர்ப்பையும் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்ளக்கூடும். இதனால் அடுத்த குழந்தையும் சிசேரியனாக இருக்கும்பட்சத்தில், அப்போது தாய்க்கு ரத்தப்போக்கு ஏற்பட்டு பிரசவம் சிக்கலாகும்.
சிசேரியன் பிரசவத்தில் பிறந்த குறை மாத குழந்தைகளுக்குப் பிரசவ நேரத்திலும், பிறந்து சிறிது நேரம் கழித்தும் மூச்சுத்திணறல் ஏற்படுவது, பச்சிளம் குழந்தையின் வயிற்றுக்குள் ரத்த ஓட்டம் சுருங்கி அதனால் மலக்குடல் அழுகி ரத்தப்போக்கு ஏற்படுவது (Necrotising enterocolitis), தொற்றுநோய்கள் என பிறந்த முதல் மூன்று நாட்களில் பல பிரச்சனைகள் ஏற்படலாம்.
நிறைமாதமான 37 – 40 வாரங்களுக்கு முன்பாக கர்ப்பிணிகளுக்கு சிசேரியன் ஆபரேஷன் செய்வது தாய்க்கும் சேய்க்கும் ஆபத்தை ஏற்படுத்தும்.சுகப்பிரசவத்தில் சிரமங்களை எதிர்கொண்டு வெளிவரும் குழந்தைகள் எதிர்காலத்தில் உடல் மற்றும் மனதளவில் தைரியமானவர்களாகவும், திறமையானவர்களாகவும் இருப்பார்கள் என்கிறது ஓர் ஆய்வு முடிவு. இதற்காகவும் சிசேரியன் பிரசவங்கள் தவிர்ப்போம்.