சாப்பாட்டு விஷயத்தைப் பொறுத்தவரைக்கும் கர்ப்பிணிகள் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பதை கீழே விரிவாக பார்க்கலாம்.
சாப்பாட்டு விஷயத்தில் கர்ப்பிணிகள் எப்படி நடந்து கொள்ளவேண்டும்?
கர்ப்பிணிகள் ரொம்ப ரொம்ப கவனமாக இருக்க வேண்டியது சாப்பாட்டு விஷயத்தில்தான். சும்மா இல்லை. இரண்டு உயிர்களுக்கும் சேர்த்து சாப்பிட்டாக வேண்டுமே.. கால்சியமும் இரும்புச் சத்தும் மிகமிக அவசியம். தினமும் ஒரு வகை கீரை, பருப்பு, பால், தயிர் இவை தவறாமல் இருக்க வேண்டும்.
தினம் ஒரு ஆப்பிள், வாழைப்பழம் சாப்பிடலாம். இதனால் மலச்சிக்கல் வராமல் இருக்கும். அசைவம் சாப்பிடுபவர்கள் நாள் ஒன்றுக்கு ஒரு முட்டை, சிக்கன் சூப் சாப்பிடலாம். மட்டன், சிக்கன், மீன் வகைகளை சாப்பிடுவதில் தவறில்லை, ஆனால் இரவில் வேண்டாம்.
சாப்பாட்டில் மட்டுமல்ல குடிநீர் விஷயத்திலும் கவனம் தேவை. சுத்தமான குடிநீர் என்றாலும் ஒரு முறை நன்றாக காய்ச்சி வடிகட்டி குடிப்பது நல்லது. இல்லாவிட்டால் அசுத்தமான நீரால் மஞ்சள் காமாலை போன்ற பிரச்னைகள் வரலாம். சாப்பிட்டதும் படுக்கக்கூடாது. அப்படிப்படுத்தால் நெஞ்சை அடைப்பதுபோல் அவஸ்தையாக இருக்கும்.
இரண்டு பேருக்குச் சாப்பிட வேண்டுமே என்று ஊட்டமாகச் சாப்பிட்டு அதனால் உடல்எடைஅதிகரித்தால்..?
அதிலும் கவனமாக இருக்க வேண்டும். நல்ல உணவுகளைத் தேர்ந்தெடுத்து சாப்பிடும் அதே சமயம் முடிந்த அளவுக்கு வேலைகள் செய்தும், நடை பயிற்சியின் மூலமும் உடல் எடை அதிகரித்துவிடாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும். மற்ற நாட்களை விட கர்ப்ப காலத்தில் அதிகபட்சம் பத்து கிலோ எடை கூடுதலாக இருக்கலாம். அதற்குமேல் அதிகரிக்கக் கூடாது. கர்ப்ப காலத்தில் சாதாரணமாகவே ரத்த அழுத்தம் அதிகரிக்கும். எடை அதிகரித்தால் அந்த அளவு மேலும் கூடி பல்வேறு பிரச்னைகளைத் தரும். பிரசவத்திலும் சிக்கல் வரும்.
சில பெண்களுக்கு, எட்டாம், ஒன்பதாம் மாதங்களில் உடம்பில் நீர்கோத்து, கை கால்கள் வீங்கிவிடும். இவர்கள் உணவில் உப்பைக் குறைத்துக் கொள்ளவேண்டும். பார்லியை நிறைய தண்ணீர் சேர்த்து கஞ்சி காய்ச்சி குடித்தாலும் உடல் நீர் சிறுநீராக வெளியேறி எடை குறையும்.
புத்தம்புது உயிர் ஜனிக்கும் இனிய நிகழ்வுதான் பிரசவம். அதைப் பரவசத்தோடு எதிர்கொள்ள வேண்டும். பிரசவம் என்பதே வலியுடன் கூடிய நிகழ்வு தான் என்பதை கூடியவரை நினைவில் வைத்துக்கொண்டால் பிரசவ நேர பயத்தையும் டென்ஷனையும் தவிர்க்கலாம்.