‘‘பெண்களைப் பொறுத்தவரை வெயில் வரும் முன்னே சமையல், வீட்டு வேலைகளை முடித்துவிட வேண்டும். உடலை இறுக்காதபருத்தி ஆடைகளையே அணிய வேண்டும். உள்ளாடை தேர்விலும் பருத்திக்கே முக்கியத்துவம் கொடுப்பது நல்லது. நைலான் துணிகளில் லேஸ், ஸ்பான்ஞ் வைத்து தைத்த உள்ளாடைகளை அணியக்கூடாது. பிராவை மிகவும் இறுக்கமாக அணிவதால் மார்பகங்களின் கீழ் பகுதிகளில் வியர்வைத் தொற்று வரும்.
உடல்பகுதி வெளியே தெரியுமாறு ஸ்லீவ்லெஸ், ஷார்ட்ஸ், ஸ்கர்ட் போன்றவற்றை அணிவதையும் தவிர்க்க வேண்டும். வெயில் நேரடியாக சருமத்தில் படுவதால் பல்வேறு சரும நோய்கள் வருவதற்கு வாய்ப்புண்டு. இரவில் உறங்கும்போதும் தளர்வான உடைகளே சிறந்தது.வெளியிடங்களுக்குச் செல்லும்போது தலை, முகம், முழுவதும் மூடும் வகையில் துப்பட்டா கொண்டும், கைகளுக்கு க்ளவுஸ், கால்களுக்கு சாக்ஸ் அணிந்து கொள்ளலாம். வெளியே புறப்படுவதற்கு 10 நிமிடம் முன்னதாகவே சன்ஸ்க்ரீன் லோஷன் தடவிக் கொள்ள வேண்டும். உதடுகள் வெடிக்காமல் இருக்க லிப் பால்ம், கை, கால்களுக்கு காலமைன் லோஷன் போட்டுக் கொள்ளலாம்.
வெளிர்நிற ஆடைகள் அணிவது பாதுகாப்பானது. பளிச் மற்றும் அடர்த்தியான நிறங்கள் சூரிய ஒளியை உள் வாங்கும் தன்மை கொண்டவை என்பதால் அவற்றைத் தவிர்க்கலாம். வெயிலைப் பொறுத்தவரை பெண்கள் அளவுக்கு ஆண்கள் அக்கறை எடுத்துக்
கொள்ளாததால், அதிகம் பாதிக்கப்படுவது ஆண்களாகவே இருக்கிறார்கள். இயற்கையாகவே அதிக நேரம் வெளியில் சுற்றக்கூடிய வேலைகளை ஆண்கள் செய்வதால் சருமப் பிரச்னைகள் இப்போது அதிகம் ஏற்படும். அதிகப்படியான வியர்வையினால் துர்நாற்றம் ஏற்படும். இதற்கு டியோடரண்டுகளைப் பயன்படுத்துவது மட்டுமே தீர்வாகாது.
துர்நாற்றமானது வியர்வையுடன் பாக்டீரியா கலப்பதன் மூலமாகவே உருவாவதால் தினமும் இரண்டு முறை குளிப்பது, க்ளின்ஸர் அல்லது ஃபேஷ் வாஷ் கொண்டு அடிக்கடி முகத்தை அலம்புவது போன்றவை முக்கியம். கோடை காலங்களில் தினமும் ஷேவிங் செய்ய வேண்டியதில்லை. இதன் மூலம் தேவையற்ற சரும அரிப்பு ஏற்படுவதைத் தவிர்க்க முடியும். ஆண்களும் வெளியே வெயிலில் சுற்றும்போது சன் ஸ்க்ரீன்கள், லிப் பாம் பயன்படுத்தலாம். தலையில் தொப்பியோ, சன் க்ளாஸோ அணிந்து கொள்ளாமல் வெளியே செல்ல வேண்டாம். முக்கியமான சமயங்களில் மட்டும் ஷூ, சாக்ஸ் அணியலாம். சாக்ஸ்களை தினமும் துவைத்து அணிவதும் முக்கியம்.சிலர் குளித்தவுடன் கழுத்து, அக்குள் பகுதிகளில் வேர்க்குரு பவுடர்களை கொட்டிக் கொள்வதைப் பார்த்திருப்போம்.
இது தவறு. இதனால் வியர்வை வெளியேற முடியாமல் தோல் துவாரங்களை அடைத்துக் கொண்டு இடுக்குகளில் தொற்றுகள் ஏற்படும். அதேபோல ஈரத்தோடு டியோடரண்ட் தடவுவதும் தவறு. பச்சிளம் குழந்தைகளுக்குத் தவிர்க்க முடியாத நேரங்களிலும், இரவு நேரங்களிலும் டயாபரை உபயோகிக்கலாம். பகல் நேரங்களில் காட்டன் துணியாலான டயாபரையே உபயோகிக்க வேண்டும். காற்று புகாத டயாபரால் சரும அரிப்பு, கொப்புளங்கள் ஏற்படும். வயதானவர்கள் பாதங்கள் மற்றும் விரல் இடுக்குகளில் கவனம் செலுத்த வேண்டும். ஈரத்தைத் துடைத்துவிட்டு பவுடர் போட்டு சுத்தமாக வைத்திருக்க வேண்டும்!’’