26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
1 ayurvedaherbs2 24 1500

கொரோனா வைரஸிற்கு ஆயுர்வேத மற்றும் சித்த மருத்துவர்கள் கூறுவது என்ன ? அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்….

தற்போது உலக மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், கட்டுக்கடங்காமல் நாளுக்கு நாள் பலரை பாதித்துக் கொண்டிருக்கிறது. இன்று வரை உலகில் கொரோனா வைரஸால் சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 24 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். இந்தியாவை எடுத்துக் கொண்டால் இன்று வரை 724 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தாக்கம் வேகமெடுத்து வருகிறது.

இதுவரை தடுப்பு மருந்து எதுவும் கண்டுபிடிக்க முடியாத நிலையில், கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கு பிரதமர் மோடி அவர்கள் ஊரடங்கை பிறப்பித்துள்ளார். ஊரடங்கால் கொரோனாவை முற்றிலும் அழிக்க முடியுமா என்று பலரும் கேட்கலாம். ஆனால் இச்செயலால் மற்றவர்களுக்கு பரவுவதற்கான வாய்ப்பைக் குறைக்கலாம் அல்லவா? நமது உலக சுகாதார அமைப்பு, கொரோனாவை ஒரு தொற்றுநோயாக அறிவித்தாலும், இந்த தொற்றுநோயில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. இதற்காக கைகளை சோப்பு மற்றும் நீர்/சானிடைசரால் தவறாமல் கழுவுவதும், கூட்டத்தைத் தவிர்ப்பதும் மிகவும் நல்லது.

கூடுதலாக, நமது பாரம்பரிய மருத்துவ பயிற்சியாளர்கள் பரிந்துரைக்கும் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் சில வீட்டு வைத்தியங்களையும் பின்பற்ற வேண்டும். இதனால் உடலைத் தாக்கும் கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடும் திறன் அதிகரிக்கும் மற்றும் உடலும் ஆரோக்கியமாக இருக்கும். இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் யாரென்று பார்த்தால், நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களும், வயதானவர்களும் தான். ஆகவே நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முயற்சியில் உடனே ஈடுபடுங்கள்.

ஆயுர்வேதம் என்ன சொல்கிறது?

கோயம்புத்தூரில் உள்ள ஆர்யா வத்யா சலா கோட்டக்கலின் தலைமை மருத்துவ அதிகாரியான வல்சலா வேரியர், கொரோனா வைரஸ் பரவும் இந்த காலக்கட்டத்தில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மூன்று ஆயுர்வேத பானங்களைப் பருக பரிந்துரைக்கிறார். அவைகளைப் பற்றி இப்போது காண்போம்.

பானம் #1

ஒரு லிட்டர் நீரில் 1 டேபிள் ஸ்பூன் சுக்கு பொடி, 4 ஸ்பூன் மல்லி விதைகள் மற்றும் சிறிது நற்பதமான துளசி இலைகளைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி, அந்நீரை நாள் முழுவதும் குடிக்கவும்.

பானம் #2

ஒரு டம்ளர் பாலில் 4 டம்ளர் நீர் மற்றும் 3 பூண்டு பற்களை சேர்த்து, ஒரு டம்ளராக சுண்டும் வரை நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பின் அதை வடிகட்டி, டீ அல்லது காபிக்கு பதிலாக குடிக்க வேண்டும்.

பானம் #3

500 மிலி மோரில் ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள், 1 ஸ்பூன் பெருங்காயத் தூள், 1 டீஸ்பூன் வெந்தயம் மற்றும் 1 டீஸ்பூன் சோம்பு மற்றும் சிறிது கறிவேப்பிலை சேர்த்து கலந்து, தினமும் இரண்டு முதல் மூன்று முறை குடிக்கலாம்.1 ayurvedaherbs2 24 1500

மெட்டபாலிசம்

நமது நோயெதிர்ப்பு சக்தியில் மெட்டபாலிசம் முக்கிய பங்கை வகிக்கிறது என வேரியர் கூறுகிறார். அதோடு ஒவ்வொரு வேளை உணவுக்கும் சீரான இடைவெளியை விட வேண்டும் என்றும் கூறுகிறார். அதற்கு முதல் வேளை உணவை உட்கொண்டு, அந்த உணவு முழுமையாக செரிக்கப்பட்ட பின் அடுத்த வேளை உணவை உட்கொள்ள வேண்டும். அதோடு இரவு நேரத்தில் லேசான உணவு, அதாவது ஒரு பௌல் சாலட் சாப்பிட வேண்டும் எனவும் கூறுகிறார்.

தூக்கம்

அடுத்த நாள் உடல் சிறப்பாக செயல்பட ஒருவருக்கு போதுமான தூக்கம் மிகவும் முக்கியம் என்றும் வேரியர் கூறுகிறார். மேலும் வாரத்திற்கு இரண்டு முறை எண்ணெய் குளியலை மேற்கொள்ள பரிந்துரைக்கிறார். அதுவும் 100 கிராம் வெந்தயத்தை 1 லிட்டர் எண்ணெயில் போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்கி, அந்த எண்ணெய் நன்கு குளிர்ந்த பின், உடல் மற்றும் தலையில் நன்கு தடவி மசாஜ் செய்து, ஒரு மணிநேரம் ஊற வைத்து பின் குளிக்க வேண்டும் என்று கூறுகிறார்.

மற்றொரு பானம்

டிரான்ஸ்-டிசிப்ளினரி ஹெல்த் சயின்சஸ் அண்ட் டெக்னாலஜி நிறுவனத்தில் ஆயுர்வேதத்தைப் பயிற்றுவிக்கும் சைத்ரிகா ஜி.கே, ஒரு பானத்தைப் பரிந்துரைக்கிறார்.

10-15 துளசி இலைகள், 4-5 பாரிஜாதம், 4-5 வேப்பிலை, 6 வெற்றிலை மற்றும் மஞ்சள் கிழங்கு. இவை அனைத்தையும் தட்டி 250 மிலி நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து, பாதியாக சுண்ட வைத்து, அத்துடன் வெல்லம் மற்றும் சீரகப் பொடி சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த பானத்தை காலை உணவு அல்லது மதிய உணவு உட்கொண்ட பின் குடிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் இந்த பானத்தை வெறும் வயிற்றில் குடிக்கக்கூடாது. இப்படி தினமும் ஒருமுறை என ஒரு வாரம் மட்டும் குடிக்கவும். நீண்ட நாட்கள் இந்த பானத்தை தொடர்ந்து குடிக்கக்கூடாது. இல்லாவிட்டால், அது கல்லீரலுக்கு பெரும் சுமையைக் கொடுத்து, கல்லீரல் பிரச்சனையை உண்டாக்கிவிடும்.

சித்த மருத்துவம்

சித்த மருத்துவத்திலும் நோயெதிர்ப்பு சக்தியை வேகமாக அதிகரிக்கும் சில பானங்கள் உள்ளன. மதுரையில் உள்ள கோகிலா சித்த மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த ஜே.ஜெயவங்கடேஷ் ஒரு அற்புதமான பானத்தைக் கூறுகிறார். அது என்னவெனில், ஒரு லிட்டர் நீரில் 4-5 மிளகு மற்றும் பெரிய வெற்றிலையை ஒரு லிட்டர் நீரில் போட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பின் அதை வடிகட்டி, நாள் முழுவதும் குடிக்க வேண்டும். அல்லது குடிக்கும் மோரில் 10 கறிவேப்பிலையை அரைத்து பேஸ்ட் செய்து கலந்து குடிக்க வேண்டும்.

சமையலறை பொருட்கள்

நமது சமையலறையில் பொதுவாக கிடைக்கும் நான்கு பொருட்களாவன- இஞ்சி, பூண்டு, மஞ்சள் மற்றும் சின்ன வெங்காயம். இவை நான்கும் ஒருவரது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய பொருட்கள். இவற்றை உங்களின் அன்றாட சமையலில் தவறாமல் சேர்த்து வந்தாலே, நோயெதிர்ப்பு சக்தியை வலிமையுடன் வைத்துக் கொள்ளலாம்.

நேச்சுரோபதி மருத்துவர் பரிந்துரைப்பவை:

அரை அடி அமிழ்தவள்ளி இலைகளை 2 டம்ளர் நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து, ஒரு டம்ளராக வரும் வரை சுண்ட வைக்க வேண்டும். பின் அதை குளிர வைத்து குடிக்க வேண்டும். இப்படி தினமும் குடிப்பது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் என நேச்சுரோபதி மருத்துவர் கூறுகிறார்.

பழங்கள் மற்றும் காய்கறிகள்

ஒவ்வொரு பகுதியிலும் அந்தந்த சீசனில் கிடைக்கும் பழங்கள் மற்றும் காய்கறிகளை ஒருவர் தவறாமல் உட்கொண்டு வந்தாலே, அந்த பருவ நிலைக்கு தேவையான சத்துக்கள் உடலுக்கு கிடைத்து, நோய்த்தொற்றுக்களை எதிர்த்துப் போராடும் ஆற்றல் உடலுக்கு கிடைக்கும்.

எலுமிச்சை

எலுமிச்சையில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. வைட்டமின் சி உடலின் நோயெதிர்ப்பு சக்திக்கு மிகவும் நல்லது. அதுவும் கொரோனா வைரஸ் பரவும் இந்த நேரத்தில், எலுமிச்சையைக் கொண்டு ஜூஸ் தயாரித்து ஒருவர் தினமும் குடித்து வருவது நல்லது. குறிப்பாக எலுமிச்சை ஜூஸ் தயாரிக்கும் போது, அதில் சர்க்கரைக்கு பதிலாக தேன் சேர்த்துக் கொள்வதே நல்லது. ஒருவேளை உங்களுக்கு சர்க்கரை நோய் இருந்தால், அத்துடன் பட்டைத் தூளை சிறிது சேர்த்துக் கொள்ளவும்.