காலம்காலமாக நாம் பின்பற்றி வந்த இயற்கை முறைகளை விடுத்து, தற்போது தலைமுடிப் பராமரிப்புக்காகப் பயன்படுத்தும் பெரும்பாலான அழகுப் பொருட்கள் ரசாயனம் கலந்தவை. இவற்றைப் பயன்படுத்துவதால், அந்த நேரத்தில், கூந்தல் அழகாக மின்னுமே தவிர, தொடர்ந்து பயன்படுத்தும்போது, அது ஆபத்தாகவே முடியும்.
* பெர்மிங், ஸ்ட்ரெய்ட்டனிங், அயர்னிங், ரீபாண்டிங் செய்துகொள்பவர்கள் கூந்தலை மிகுந்த எச்சரிக்கையுடன் கையாள வேண்டியது அவசியம். இதற்கென இருக்கும் பிரத்யேக ஷாம்பூ, கண்டிஷனர், இதரப் பொருட்களை மட்டுமே முறையாக உபயோகிக்க வேண்டும். இல்லையெனில் பெரும் பாதிப்புகளை உருவாக்கிவிடும்.
* மாறிவரும் ஃபேஷன் டிரெண்டுக்கு ஏற்ப, பெர்மிங், அயர்னிங், ஸ்ட்ரெய்ட்டனிங் என அடிக்கடி மாற்றிக்கொண்டேயிருந்தால் முடியின் ஆரோக்கியம் முழுவதுமாகக் கெட்டுவிடும். பக்கவிளைவுகளையும் ஏற்படுத்திவிட அதிக வாய்ப்பு இருக்கிறது.
* அழகுக்காக செய்துகொள்ளும் எந்த சிகிச்சையாக இருந்தாலும், கூந்தலின் தன்மை, எதையும் தாங்கும் சக்தி, சென்சிட்டிவ் கூந்தலா? சாதாரணக் கூந்தலா? ஹென்னா, கலரிங், கெமிக்கல் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டதா என்று ஆராய்ந்து பிறகே மேற்கொள்ளவேண்டும்.