ஹைப்பர்டென்சன் அல்லது உயர் இரத்த அழுத்தம் என்பது நாம் நினைப்பது போல் வயது தொடர்பான ஒரு பாதிப்பு அல்ல. பொதுவாக கர்ப்ப காலத்தில் பெண்கள் ஹைப்பர் டென்ஸனால் அதிகம் பாதிக்கப்படுவது இயல்பானது. 8% பெண்கள் தங்கள் கர்ப்ப காலத்திற்கு முன், கர்ப்ப காலத்தில் அல்லது கர்ப்ப காலத்திற்கு பின் ஹைப்பர் டென்ஸனால் பாதிக்கப்படுகின்றனர். இந்த வகை உயர் இரத்த அழுத்தம் சிறுநீரக பாதிப்பு, ப்ரீக்ளம்ப்சியா, பிறக்கும் குழந்தையின் எடையில் குறைபாடு, வருங்காலத்தில் இதய நோய் பாதிப்பு போன்ற பல்வேறு சிக்கல்களை உருவாக்குகிறது.
கர்ப்பிணிகள் தங்கள் குழந்தையின் ஆரோக்கியம் மற்றும் தங்களுடைய ஆரோக்கியம் ஆகியவற்றை கவனத்தில் கொண்டு தங்கள் இரத்த அழுத்த நிலையை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது மிகவும் அவசியம். உங்கள் கர்ப்ப காலத்தில் உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருப்பதாக கண்டறியப்பட்டால் அதனைக் குறைப்பதற்கான சில குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
உப்பு அளவைக் குறைத்துக் கொள்ளவும்
அதிகரித்த உப்பின் அளவு இரத்த அழுத்த அளவை அதிகரிக்கும் என்பதால் முடிந்த அளவிற்கு குறைவான அளவு உப்பை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். உப்புக்கு மாற்றாக எலுமிச்சை சாறு, மிளகு , மூலிகைகள் போன்றவற்றை நீங்கள் சேர்த்துக் கொள்ளலாம். மேலும் பாக்கெட் செய்யப்பட்ட உணவுகளில் சோடியம் அளவு அதிகமாக இருக்கும் என்பதால் அந்த வகை உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. மேலும் அவை உங்கள் உடலுக்கு அதிக தீங்கை உண்டாக்கும்.
பொட்டாசியம் அதிகம் உள்ள பழங்கள் மற்றும் முழு தானியங்களை உட்கொள்ளுங்கள்
இரத்த அழுத்த அளவைக் கட்டுப்படுத்த பொட்டாசியம் உதவுகிறது. பொட்டாசியம் சத்து மிக அதிக அளவு உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகள் நிறைய உள்ளன. அதில் வாழைப்பழம் மிகச்சிறந்த பழம். சர்க்கரை வள்ளிக் கிழங்கு, காராமணி, ராஜ்மா, தக்காளி, உலர் திராட்சை போன்றவற்றை உட்கொள்வதால் இரத்த அழுத்த அளவு குறைந்து பொட்டசியம் சத்து அதிகரிக்கும். உணவு நார்ச்சத்து அதிகம் உள்ள முழு தானியங்களை உங்கள் உணவில் இணைத்துக் கொள்வதால் கர்ப்ப கால உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த முடியும்.
சுறுசுறுப்பாக இருங்கள்
கர்ப்ப காலத்தில் சுகப்பிரசவம் நிகழ்வதற்கு மற்றும் ஆரோக்கியமான குழந்தை பிறப்பிற்கு கர்ப்ப காலம் முழுவதும் சுறுசுறுப்புடன் இருக்க வேண்டும். உட்கார்ந்தபடியே இருக்கும் வாழ்க்கைமுறை பிரசவ காலத்தின் சிக்கலை அதிகரிக்கக்கூடும். அதனால் சுறுசுறுப்பாக இருக்க முயற்சியுங்கள். சுறுசுறுப்பாக இருப்பதால் உடலின் இரத்த ஓட்டம் அதிகரித்து இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்கும். நடைப்பயிற்சி, நீச்சல் பயிற்சி போன்றவற்றை மேற்கொள்வதால் கர்ப்ப காலத்தில் உடல் செயல்பாடு சிறப்புடன் இருக்கும்.
மனஅழுத்தத்தை குறைத்துக் கொள்ளுங்கள்
மனஅழுத்தம் என்பது நமது ஆரோக்கியத்தின் மிக முக்கிய எதிரி ஆகும். கர்ப்ப காலத்தில் பெண்கள் மிக முக்கியமாக மனஅழுத்தம் இல்லாமல் அமைதியாக இருக்க வேண்டும். இல்லையேல் தேவையற்ற சிக்கல் அதிகரித்து பதட்டம் அதிகரிக்கும். இதனால் மனச்சோர்வு உண்டாகும். கர்ப்ப காலத்திற்கு பிறகும் இந்த மனச்சோர்வு நிலை தொடரும். இதனால் இரத்த அழுத்த நிலையில் தொடர்ந்து பாதிப்பு உண்டாகும். தியானம் செய்யுங்கள். யோகா, ப்ரஹ்மரி பிராணயாமம் என்னும் மூச்சுப்பயிற்சி போன்றவற்றை கர்ப்ப காலத்தில் முயற்சியுங்கள். இதனால் மனஅழுத்தம் விலகி, சந்தோஷமான கர்ப்ப காலம் சாத்தியமாகும்.
உங்கள் உடல் எடை மீது கவனம் செலுத்துங்கள்
நீங்கள் உங்கள் வயிற்றில் உள்ள குழந்தைக்கும் சேர்த்து உணவு உட்கொள்கிறீர்கள் என்றாலும் அந்த அளவு அதிகரிக்காமல் பார்த்துக் கொள்வது அவசியம். நீங்கள் அதிகமான அளவு உட்கொள்வதால் உங்கள் உடல் எடை அதிகரித்து இன்னும் பல சிக்கல்களை உண்டாக்கும். பொதுவாக கர்ப்ப காலத்தில் உடல் எடை அதிகரிக்கும். ஆனால் உணவு பழக்கத்தை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதால் அதிகரித்த உடல் எடை தடுக்கப்படும்.
மற்ற குறிப்புகள்:
மேலே கூறிய 5 குறிப்புகளைத் தவிர , இன்னும் சில முக்கிய விஷயங்களை கவனத்தில் கொள்வது நல்லது.
* புகை பழக்கம் மற்றும் மது பழக்கம் போன்றவற்றை கர்ப்பம் உறுதியானவுடன் கைவிடுவது நல்லது . இதனால் உங்கள் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் உறுதி செய்யப்படும். இந்த பழக்கங்கள் பிறக்கவிருக்கும் குழந்தைக்கும் ஆபத்தானது.
* மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை தவறாமல் எடுத்துக் கொள்ளுங்கள். ஆரோக்கிய சேதங்கள் ஏற்படாமல் இருக்க மருத்துவ வழிகாட்டுதலை அவசியம் பின்பற்ற வேண்டும்.
* உங்களுக்கு மனஅழுத்தம் அதிகமாக இருப்பதாக நீங்கள் உணர்ந்தால் உங்களுக்கு நெருக்கமானவருடன் மனம் விட்டு பேசுங்கள். இது நிச்சயம் உங்கள் அழுத்தத்தைப் போக்க உதவும்.