கருவுற்ற தாய் உட்கொள்ளும் மருந்துகள், மாத்திரைகள் கருவை பலவிதங்களில் பாதிக்கும். இவைகள் கருவை நேரடியாக பாதித்து கருவின் வளர்ச்சியில் அசாதாரண மாற்றத்தை (பிறவிக் குறைபாடுகள்) ஏற்படுத்தலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். சில சமயங்களில் கருவின் உயிருக்கே ஆபத்தாவதோடு இதனால் கரு இறக்கவும் நேரிடலாம் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
கருவுற்ற தாய் உட்கொள்ளும் மாத்திரைகள், கருவின் வளர்ச்சிக்குப் பிராணவாயுவும் மற்ற பிற சத்துக்களும் செல்லக்கூடிய நஞ்சுக்கொடி வழியாகவே செல்லும். எனவே, கர்ப்பிணித்தாய்மார்கள் உட்கொள்ளும் சில மருந்துகளினால் சில சமயங்களில் நஞ்சுக் கொடி சுருங்கி, கருவுக்குச் செல்ல வேண்டிய பிராணவாயு மற்றும் பிற சத்துக்கள் செல்லாமலோ, மிகக் குறைந்த அளவோ கிடைக்க செய்யலாம்.இதன் விளைவாக குழந்தை வளர்ச்சி குறைந்தோ, எடை குறைந்தோ பிறக்கலாம்.
கர்ப்பிணிகள் உட்கொள்ளும் மாத்திரைகளினால் கருப்பையின் தசை நார்கள் அழுத்தமாக சுருங்கி, விரிய நேரிடலாம். இது கருவுக்கு செல்லும் இரத்த ஓட்டத்தைத் தடை செய்வதோடு, உரிய காலத்திற்கு முன்பே பிரசவ வலியை ஏற்படுத்தி, குறைப்பிரசவத்தை ஏற்படுத்தக் கூடும். உதாரணமாக, தலிடோமைடு அல்லது தாலோமிட் என்னும் மருந்து, பல ஆண்டுகளுக்கு முன்பு இம்மருந்தால் சிசுவின் கை, கால் வளர்ச்சியை வெகுவாகக் குறைப்பதோடு, குடல், இருதயம், இரத்த நாளங்கள் ஆகியவற்றையும் பாதிப்படைய செய்தது. எனவே அதிக விஷத்தன்மை கொண்ட இத்தகைய மருந்துகளால் பிறப்பு குறைபாடுகள் நிகழ வய்ப்புள்ளதனால் , கருவுற்ற பெண்கள் தாலோமிட் மருந்துகளை உட்கொள்ளவே கூடாது எனத் தடை செய்யப்பட்டுள்ளது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கருவின் வளர்ச்சிக் காலம் மற்றும் தாய் உட்கொள்ளும் அளவு மருந்துகளின் இரண்டும் கருவின் மீது மருந்துகள் ஏற்படுத்தும் தாக்கத்தைத் தீர்மானிக்கின்ற காரணிகளாகின்றன. கரு உருவாகி 20 நாட்களுக்குள் தாய் உட்கொள்ளும் சில மருந்துகள் கருவையே அழித்துவிடநேரிடலாம் என்பதும் ஆய்வாளர்களின் எச்சரிக்கையாகும்.