இயற்கைக்கு மாறுவோம் : நாச்சாள்
‘இயற்கைக்குத் திரும்ப வேண்டும்’ என்கிற இந்த ஒற்றை முழக்கம்தான் இன்றைக்கு நம் உலகையே வியாபித்திருக்கிறது. ரசாயனங்களால் விளைவிக்கப்படும் விளைபொருட்கள் மட்டுமே இங்கு பிரச்னையல்ல… நம் ஒட்டுமொத்த வாழ்வியலே மாறிப்போனதுதான் எல்லா பிரச்னைக்கும் அடிப்படை. இச்சூழலில் நாம் நமது வாழ்க்கை முறையை எப்படியானதாக மாற்றிக்கொள்ள வேண்டும்?
இதுவே மிக முக்கியமான கேள்வியாக இருக்கிறது. நாம் திரும்ப வேண்டிய பண்டைய வாழ்க்கை முறையைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, அதற்கான பயிற்சிகளையும் வழங்கிக் கொண்டிருக்கிறார் நாச்சாள். காரைக்குடியை சொந்த ஊராகக் கொண்ட இவர் இயற்கை வேளாண் முன்னோடி நம்மாழ்வாரால் ‘இயற்கையின் திருமகள்’ என்று பாராட்டப்பட்டவர். வாழ்வியல் மற்றும் உணவுப்பழக்கங்களை மையப்படுத்தி 4 நூல்களையும் எழுதியிருக்கிறார்.
”எனக்குள் உதித்த ஒரு தேடலே என்னை இச்செயல்பாடுகளுக்குக் கொண்டு வந்தது. எம்.எஸ்சி. எலெக்ட்ரானிக் மீடியா படித்து விட்டு, 2005ல் சிங்கப்பூரில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் சிஸ்டம் அனலிஸ்டாக பணிபுரிந்தேன். அப்போது என் அம்மா ஆத்ரெட்டிஸ் எனும் மூட்டுவலிக்கு ஆளாகினார். இத்தனைக்கும் அம்மா வரகரிசி, சாமை, ராகி போன்ற சிறுதானியங்களை அதிகம் எடுத்துக் கொள்வார். இப்படி ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தைக் கொண்டிருந்தும் அம்மாவுக்கு இப்படியொரு பிரச்னை ஏன் வந்தது? அதற்கான எனது தேடலில், நமது உணவின் அடிப்படை மாறியதுதான் அனைத்துக்குமான பிரச்னை என்பதை தெரிந்து கொண்டேன்.
பாரம்பரிய உணவுப் பொருட்களை இழந்ததோடு, பாரம்பரிய விவசாயத்தையும் கைவிட்டு விட்டோம். ரசாயனங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் விளைபொருட்களால்தான் நாம் நோயாளிகளாக இருக்கிறோம். அதோடு, நமது வாழ்க்கை முறை இயற்கையிலிருந்து அந்நியப்பட்டு விட்டதும் ஒரு முக்கியக் காரணம் என்பதை அறிய முடிந்தது. வாழ்வியல் மற்றும் உணவுப் பழக்கங்கள் குறித்தான செயல்பாடுகளில் முழுவதுமாக இறங்க வேண்டும் என்பதற்காக, வெளிநாட்டு வேலையிலிருந்து விலகினேன். மலட்டு நிலங்களை உயிர்ப்புடைய நிலங்களாக்க பணியாற்றி வந்த நம்மாழ்வார் கருத்துகளில் ஈர்க்கப்பட்டு அவருடன் பயணித்தேன்.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் உள்ள தமிழ் மக்களின் பாரம்பரியம் மற்றும் வாழ்வியல் சார்புடைய நூல்களை எல்லாம் தேடித் தேடி வாசித்தேன். அதன் மூலம் நமது பண்டைய வாழ்க்கை முறையின் சிறப்புகள் பற்றி அறிந்து கொள்ள முடிந்தது. நமது முன்னோர் நீண்ட ஆயுளோடு ஆரோக்கியமாக வாழ்ந்ததற்கு அவர்களது வாழ்க்கைமுறையே காரணம். அவர்களின் உணவுப்பழக்கத்தை முற்றிலுமாக நாம் புறந்தள்ளி விட்டோம். உதாரணத்துக்கு பழைய சோறை எடுத்துக் கொள்வோம்.
அதனுள் அனைத்து விதமான வைட்டமின்கள் இருப்பதாகவும், அதனோடு வெங்காயத்தை சேர்த்து சாப்பிடும்போது உடலின் வெப்பம் சமநிலைக்கு வருவதாகவும் அமெரிக்காவில் ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட சத்துமிக்க உணவுப் பழக்கம் இப்போது நம்மிடம் இருக்கிறதா? தொழில்மயம் மற்றும் உலகமயத்துக்குப் பிற்பாடுதான் நமது வாழ்வியல் இத்தகைய மாற்றத்தைச் சந்தித்திருக்கிறது.
வாழ்வியல் என்பது தொடர் சங்கிலி போல… உணவு – சாப்பிடும் முறை – நீர் – உழைப்பு – தூக்கம் என பலவற்றையும் பிணைத்திருப்பது. அதிகாலை நேரத்தில் எழுவதை முறைப்படுத்திக் கொண்டோமென்றால் மற்றவை தானாக முறைக்குள் வந்து விடும். உணவு செரித்து, சத்துகள் ரத்தத்தில் கலந்து கழிவுகள் வெளியேறுவதற்கு சுத்தமான ஆக்சிஜன் தேவை. அதிகாலை நேரத்தில்தான் சுத்தமான ஆக்சிஜன் கிடைக்கும். அதை உள்வாங்கினால் கழிவுகள் வெளியேறி சரியான நேரத்துக்குப் பசிக்கும்.
ஆண்களைக் காட்டிலும் பெண்களால்தான் பிரபஞ்ச ஆற்றலை அதிகம் உள்வாங்க முடியும்.
அதனால்தான் அதிகாலை எழுந்து கோலம் போட்டார்கள். கோலம் போடும்போது விரல்கள் ‘சின்முத்ரா’ முத்திரையில் இருக்கும். அது தியானம் புரிபவர்கள் கொண்டிருக்கும் முத்திரை. இப்படியாக ஒவ்வொரு நடவடிக்கையிலும் உடல்நலம் சார்ந்து இயங்கியதாக இருந்த நமது பண்டைய வாழ்க்கை முறையை நாம் புறந்தள்ளி விட்டு, மேலை நாட்டு வாழ்க்கையின் பால் மோகம் கொண்டிருப்பது பெரிய முட்டாள்தனம்.
வெளிநாடுகளில் சிரிக்க வைப்பதற்கென்றே சில மையங்கள் இயங்கி வருகின்றன. அதற்கான கட்டணத்தைச் செலுத்தி அதனுள் நுழைபவர்களை பல்வேறு கேளிக்கைகள் மூலம் சிரிக்க வைத்து லாபம் பார்க்கின்றனர். சிரிப்பதன் மூலம் மன நலம் தொடர்பான பிரச்னைகள் நீங்கும் என்கிற பரப்புரையை மேற்கொள்கின்றனர். மனநலம் சார்ந்த பிரச்னைகள் ஏற்படுவதே வாழ்வியல் மாற்றத்தால்தான் எனும்போது, இந்த உலகமயம் நம்மிடமிருந்து பலவற்றை எடுத்துக்கொண்டு அதை நமக்கே விற்கிறது என்கிற கொடுமைதான் நடந்து வருகிறது. இந்நிலை மாற வேண்டும் என்றால் பாரம்பரிய வாழ்க்கை முறை குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்தி, பயிற்சிகள் வழங்குவதுதான் தீர்வு என்னும் முடிவுக்குள் வந்தேன்” என்று தனது செயல்பாட்டின் தொடக்கம் குறித்துப் பேசுகிறார் நாச்சாள்.
”நம்மாழ்வாருடன் பயணித்ததில் பலவற்றை என்னால் கற்றுக்கொள்ள முடிந்தது. ‘இயற்கை விவசாயப் பயிற்சி’ ‘வீட்டுத்தோட்டம் அமைத்தல்’ ‘பாரம்பரிய சிறுதானியங்கள் சார் விழிப்புணர்வு மற்றும் மதிப்புக்கூட்டல்’, ‘ரசாயன உணவுப் பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் பாரம்பரிய உணவுகளின் மருத்துவ குணங்கள்’ ஆகியவை பற்றிய பயிற்சிகளை வழங்குவதுதான் தேவை எனப்பட்டது. குடியிருப்புகள், கார்பரேட் நிறுவனங்கள், வங்கிகள் ஆகியவற்றில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இப்பயிற்சிகளை வழங்குகிறோம்.
மேலைநாட்டு மோகத்தில் திளைத்த உயர் நடுத்தர மக்கள் மத்தியில் இன்றைக்கு இயற்கை வாழ்வியல் குறித்தான விழிப்புணர்வு ஏற்பட்டிருப்பதால் எங்களது பயிற்சிக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. எதையும் வெறுமனே வாய் வார்த்தைகளாக இல்லாமல் அறிவியல்பூர்வமாக விளக்குவதால் இப்பயிற்சியின் மீது ஆழமான நம்பிக்கை ஏற்படுகிறது. பயிற்சி எடுத்துக் கொண்ட பலரும் அதைப் பாடமாகக் கொண்டு நடைமுறைப்படுத்தியும் வருகிறார்கள்” என்கிற நாச்சாள், பாரம்பரிய அரிசி மற்றும் சிறுதானியங்களை இயற்கை விவசாயத்தில் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு அதை சந்தைப்படுத்துவதற்கான உதவிகள் புரிகிறார்.
தான் சொல்ல நினைப்பனவற்றை பேச்சின் மூலம் எடுத்துச் செல்வது ஒரு புறமென்றால், எழுத்து வடிவிலும் கொண்டு சேர்க்க வேண்டும் என்கிற நோக்கில் ‘ருசியின் ரேகை’, ‘மாடியில் மண்வாசனை’, ‘ஆணிவேர்’, ‘தமிழர் நெல்’ ஆகிய 4 நூல்களை எழுதியிருக்கிறார் நாச்சாள்.”சிறுதானியங்களின் சிறப்புகள் பற்றி நான் பேசிய போது, ‘சிறுதானியங்களைக் கொண்டு சமைப்பது எப்படி’ என்றே பலரும் கேட்டார்கள். அப்போது நம்மாழ்வார் ஐயாதான் சிறுதானிய சமையல் குறிப்பு எழுதும்படி கூறினார். அதனால் சிறுதானியங்களைக் கொண்டு செய்யப்படும் 50 உணவு வகைகளைத் தொகுத்து ‘ருசியின் ரேகை’ எனும் நூலை எழுதினேன்.
அதற்கு நம்மாழ்வார்தான் முன்னுரை எழுதிக் கொடுத்தார். நூலுக்கு நல்ல வரவேற்பு இருந்ததால் அதை ஆங்கிலத்தில் நானே மொழிபெயர்த்து வெளியிட்டேன். ஒரு குடும்பத்துக்குத் தேவையான காய்கறிகளை தாங்களே தங்களது வீட்டு மாடியில் இயற்கையான முறையில் உற்பத்தி செய்து கொள்ள முடியும். இந்த தற்சார்பு உற்பத்திக்கு வழிகாட்டுவதற்காகத்தான் ‘மாடியில் மண்வாசனை’ நூலை எழுதினேன். இன்றைய உணவுமுறையில் இருக்கும் பிரச்னைகளை மையப்படுத்தி அதற்கான தீர்வுகளை விளக்கி ‘ஆணிவேர்’ நூலை எழுதினேன்.
நமது பாரம்பரிய நெல் ரகங்களின் சிறப்புகளை விளக்கி எழுதப்பட்டதுதான் ‘தமிழர் நெல்’. காட்டுயானம், கவுனி, மாப்பிள்ளை சம்பா, குதிரைவாலி என 30 வகையான பாரம்பரிய அரிசி ரகங்களின் தன்மை மற்றும் சிறப்பு குணங்களை விளக்கி, அதனை சமைப்பதற்கான குறிப்புகளையும் கொடுத்திருக்கிறேன்” என்கிறார். மதுராந்தகத்தில் நண்பர்கள் 8 பேருடன் இணைந்து 15 ஏக்கரில் இயற்கை விவசாயம் புரிந்து வருகிறார் நாச்சாள். அங்கு பழ வகைகள், அழியும் தருவாயில் இருக்கும் காட்டுயானம், கம்பு, குதிரைவாலி ஆகிய சிறுதானியங்களை பயிர்செய்து வருகின்றனர்.
”அரிசி சாப்பிட்டால் நீரிழிவு வரும் என்று பலரும் நம்பிக்கொண்டிருக்கின்றனர். ஆனால், நமது பாரம்பரிய அரிசிகள் எல்லாம் சர்க்கரை வியாதிக்கு மருந்தாக செயல்படுகின்றன என்பதுதான் உண்மை. அதனால் நாம் நமது அடிப்படையை புரிந்து கொள்ள வேண்டும். இயற்கைக்கு மாறான எல்லாமே ஆபத்துதான் என்கிற தெளிவு நம்மிடம் இருந்தாலே ஒவ்வொன்றின் பின்பும் ஒரு கேள்வி எழும். அந்தக் கேள்வி நமது வாழ்க்கையையே மாற்றியமைக்கும்” என்கிறார் நாச்சாள். அதற்கு உதாரணமும் அவரேதான்!