காய்ச்சலடிக்கிற மாதிரி இருக்கு’ என்பார்கள். தொட்டுப் பார்த்தால் சூடே இருக்காது. இதைத்தான் நாம் பேச்சு வழக்கில் உள் காய்ச்சல் என்கிறோம். அதென்ன உள் காய்ச்சல்? இன்டர்னல் மெடிசின் மற்றும் நீரிழிவு சிறப்பு மருத்துவர் சிவராம் கண்ணனிடம் பேசினோம். ‘ஒரு சிலருக்கு ஜுரம் இருப்பது மாதிரி இருக்கும். ஆனால், வெளியே தெரியாது. அவர்கள் களைப்பாகவே காணப்படுவார்கள். அடிக்கடி மயக்கம் வருவதுபோல இருக்கும்.
உடலின் வெப்பநிலையை வைத்து இதை, உள்காய்ச்சல் என முடிவு செய்யலாம். ஆங்கில மருத்துவத்தில் யாரும் உள்காய்ச்சல் என்ற சொல்லைப் பயன்படுத்துவது இல்லை. பிற மருத்துவ முறைகளில் இச்சொல் பயன்படுத்தப்படலாம்.
பகலில் நம் உடலின் வெப்பநிலை 98.9 டிகிரிக்கு அதிகமாகவும், இரவு முழுவதும் 99.9 டிகிரியைவிட கூடுதலாகவும் இருப்பதைத்தான் ஆங்கில மருத்துவர்கள் காய்ச்சல் என்று குறிப்பிடுவார்கள். இந்த வெப்பநிலையைவிட, குறைவாக உள்ள எதையும் உள்காய்ச்சல் என சொல்ல முடியாது.
காய்ச்சல் என்றால், Low Grade Fever, High Grade Fever என சொல்வோம். நம்மில் பலருக்கு மறைவான தொற்று உடலில் காணப்படும். குழந்தைகள் மற்றும் இளம் வயதினருக்கு இந்தத் தொற்று உடனே வெளியில் தென்படும். வயதானவர்களுக்கு தாமதமாகத்தான் தெரிய ஆரம்பிக்கும். குறிப்பாக, 70 வயது கடந்தவர்கள், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக உள்ளவர்கள் ஆகியோருக்கு காய்ச்சல் வந்த உடனே வெளியே தெரியாது. நோய் எதிர்ப்பு சக்தி இவர்களுக்கு குறைவாக இருப்பதுதான் இதற்குக் காரணம்.
உடலின் வெப்பநிலை சாதாரணமாக இருக்கும். அந்த நேரத்தில் Total Count எனப்படுகிற வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை பரிசோதிக்க வேண்டும். உதாரணத்துக்கு, வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை நான்கு ஆயிரம் முதல் பத்தாயிரம் வரை இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். பரிசோதனையில் அது இருபது ஆயிரமாக இருக்கும். தொடர்ந்து ஸ்டீராய்டு எடுத்துக் கொள்பவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்.
தைராய்டில் ஹைப்பர் தைராய்டு, ஹைப்போ தைராய்டு என இரண்டு வகை உள்ளது. முன்னது அதிக அளவைக் குறிக்கும். பின்னது குறைந்த அளவைக் காட்டும். ஹைப்பர் தைராய்டு உள்ளவர்களுக்கு சூடு அதிகமாகவும், ஹைப்போ தைராய்டு உள்ளவர்களுக்கு குளிர் அதிகமாகவும் இருக்கும். இதனை காய்ச்சல் என்று கருதுவதற்கு வாய்ப்பு உள்ளது. உடலில் சோடியம், பொட்டாசியம் அளவு குறைந்தாலும் சோர்வாக இருப்பார்கள். இந்த நேரத்தில் உடனே மருத்துவரை பார்ப்பது நல்லது.”