தேவை அதிக கவனம்
மார்பகப் புற்றுநோய் பற்றி பலருக்கும் இப்போது தெரிந்திருக்கிறது. வரும் முன்னர் தடுக்க வேண்டும் என்பதிலும், வந்துவிட்டால் தாமதிக்காமல் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் நினைக்கிறார்கள். இந்த விழிப்புணர்வின் அடுத்தகட்டமாக நாம் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயத்தை இப்போது மருத்துவ உலகம் முன்வைத்திருக்கிறது.. அது லிப்ஸ்டிக்!
‘லிப்ஸ்டிக்கில் புற்றுநோயை உண்டாக்கக் கூடிய காரீயம் (Lead) உள்பட பல ஆபத்தான ரசாயனங்கள் இருக்கிறது என்பது நீண்டநாட்களாகவே கூறப்பட்டுக்கொண்டிருக்கிறது. இப்போது `லெட்டை போலவே ஆபத்தான வேறு முக்கிய விஷயமும் இருக்கிறது’ என்று சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் இந்திய மருத்துவ ஆய்வாளரான பி.எம்.ஹெக்டே.
பி.எம்.ஹெக்டேவின் கருத்தை அறிந்துகொள்ளும் முன், லிப்ஸ்டிக் எப்படி தயாராகிறது என்பது உள்பட சில அடிப்படை விஷயங்களை சரும நல மருத்துவரான ப்ரியா சொல்வதிலிருந்து கேட்போம்.
”எண்ணெய், மெழுகு, கொழுப்பு இவற்றை அடிப்படையாக வைத்துத்தான் லிப்ஸ்டிக்கை தயாரிக்கிறார்கள். இதில் நிறத்துக்காக சில வேதிப்பொருட்களைச் சேர்ப்பார்கள். மூலப்பொருட்களாக சேர்க்கப்படுவதில் லெட், காட்மியம், குரோமியம், மாங்கனீசு, அலுமினியம் போன்ற ஹெவி மெட்டல்கள் கலந்திருக்கும். நிறத்துக்காக சேர்க்கப்படும் வேதிப்பொருட்களிலும் இந்த ஹெவி மெட்டல்கள் இருக்கும்.
ஆனால், லிப்ஸ்டிக்கில் என்னென்ன கலந்து தயாரிக்கப்பட்டிருக்கிறது என்ற Ingredients பகுதியில் ஹெவி மெட்டல்களை பற்றி குறிப்பிட மாட்டார்கள். ஹெவிமெட்டல்கள் நேரடியாகக் கலக்கப்படாததால் Base materials, Pigments என்றுதான் அச்சிட்டிருப்பார்கள். லிப்ஸ்டிக் தயாரிப்பாளர்கள் இந்த விவரங்களை மறைத்தாலும் பல நாடுகளின் ஆய்வுகளில் இந்த ஹெவி மெட்டல்கள் கலக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
குறிப்பாக, லெட் இருப்பது அமெரிக்கா, கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வுகளில் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது” என்பவர், லிப்ஸ்டிக்கால் வரக்கூடிய பிரச்னைகளைப் பட்டியல் இடுகிறார்.”பொதுவாக லிப்ஸ்டிக்கால் சரும அலர்ஜி வரலாம். உதட்டில் வெடிப்பு ஏற்படுவது, உதடு முழுவதும் கருப்பாவது, மச்சம் போல் திட்டுத்திட்டாக சில இடங்களில் மட்டும் கருப்பாவது போன்ற சின்னச்சின்ன பிரச்னைகள் வரலாம். நிறத்துக்காக சேர்க்கப்படும் வேதிப்பொருட்களால் Allergic contact dermatitis என்ற சரும அலர்ஜி வரலாம்.
சில நேரங்களில் லிப்ஸ்டிக்கின் நிறமிகளால் உதட்டின் சருமம் உறியலாம். குறிப்பாக, வெயிலில் செல்லும்போது புற ஊதாக் கதிர்களினால் உதட்டின் சருமம் உறியும் நிலை ஏற்படும்.இவற்றைத் தவிர்த்து, லிப்ஸ்டிக்கை விழுங்குவதற்கான வாய்ப்பு நிறைய இருக்கிறது. முக்கியமாக தண்ணீர் குடிக்கும்போதோ, சாப்பிடும்போதோ லிப்ஸ்டிக்கை விழுங்கிவிடுவார்கள். சருமத்தில் என்ன தடவினாலும் அது உடலால் உறிஞ்சப்பட்டு ரத்தத்தில் கலக்கும். அதேபோல், லிப்ஸ்டிக்கும் உதட்டிலிருந்து ரத்தத்தில் கலக்கும் வாய்ப்பு அதிகமாக உண்டு.
மிகக் குறைந்த அளவில் லெட் கலந்திருப்பதால் லிப்ஸ்டிக்கை பயன்படுத்தலாம் என்று மருந்து மற்றும் உணவுத்தரக்கட்டுப்பாடு நிறுவனமான எஃப்.டி.ஏ அனுமதித்திருக்கிறது. ஆனாலும், லெட்டுக்கு என்று சில ஆபத்தான குணங்கள் இருக்கின்றன. Neuro toxins என்ற நரம்பு மண்டலங்களை பாதிக்கக் கூடிய அபாயம், சிறுநீரகம், கல்லீரல் பாதிப்பு, புற்றுநோய் போன்றவற்றை லெட் ஏற்படுத்தும் என்பதை மறுக்க முடியாது” என்கிறார் மருத்துவர் ப்ரியா.
மாடல்கள், சினிமா துறையைச் சேர்ந்தவர்கள், விசேஷ நாட்களில் லிப்ஸ்டிக்கை பயன்படுத்துகிற பெண்களுக்கு உங்கள் ஆலோசனை என்ன?
”லிப்ஸ்டிக்கை ஒருநாளிலேயே அதிக முறை பயன்படுத்துவதும், அதிக அளவிலான லிப்ஸ்டிக்கை பயன்படுத்துவதும் தவறானது. மிகவும் இளம்வயதிலேயே லிப்ஸ்டிக் பயன்படுத்த ஆரம்பிப்பதும் பெரிய தவறு. 15 வயதில் ஒரு பெண் லிப்ஸ்டிக்கை பயன்படுத்த ஆரம்பித்தால் 45 வயதாகும்போது ஏறக்குறைய 30 ஆண்டுகள் அந்தப் பெண் லிப்ஸ்டிக்கை பயன்படுத்தி இருப்பார். இதனால் லிப்ஸ்டிக்கினால் உண்டாகும் அபாயம் கொஞ்சம் கொஞ்சமாக சேர்ந்து பெரிய அளவில் அவரை பாதிக்கும்.
அதனால், மிகவும் இளவயதிலேயே பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். முக்கியமாக, அழகுபடுத்துகிறேன் என்ற பெயரில் குழந்தைகளுக்கு எந்தக் காரணத்தைக் கொண்டும் லிப்ஸ்டிக் போட்டுவிடக் கூடாது.மாடலிங், சினிமா போன்ற துறையில் லிப்ஸ்டிக்கை தவிர்க்க முடியாது. இவர்களைப் போல அடிக்கடி லிப்ஸ்டிக்கை பயன்படுத்துகிறவர்கள் நம்பகத்தன்மை கொண்ட பிராண்டுகளை பயன்படுத்தலாம்.
இப்போது ஆர்கானிக் வகை லிப்ஸ்டிக்குகள் கிடைக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தலாம். லிப்ஸ்டிக் பயன்படுத்தி உதட்டின் நிறம் மாறினாலோ, கருப்பு மார்க் வருகிறது என்றால் அந்த லிப்ஸ்டிக் பயன்பாட்டை உடனடியாக நிறுத்த வேண்டும். மருத்துவ ஆலோசனையும் அவசியம்” என்கிறார் மருத்துவர் ப்ரியா.
பத்ம பூஷண் விருது பெற்ற மூத்த மருத்துவரான பி.எம்.ஹெக்டே, பெண்களின் மார்பகப் புற்றுநோயைத் தூண்டும் அபாயம் லிப்ஸ்டிக்கில் இருக்கிறது என்கிறார்.”பெண்களின் ஈஸ்ட்ரோஜென் (Estrogen) ஹார்மோனை தூண்டக்கூடிய வேதிப்பொருள் லிப்ஸ்டிக்கில் இருக்கிறது. அதாவது, லிப்ஸ்டிக்கில் இருக்கும் வேதிப்பொருள் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் போல பெண்களின் உடலில் செயல்படும். இதனால் மார்பின் அளவு இயல்பாகப் பெரிதாவது போலத் தோன்றி, பின்னர் மார்பகப் புற்றுநோய் உண்டாகும்.
இந்த உண்மையை ஐரோப்பிய நாடுகளில் லிப்ஸ்டிக் பயன்படுத்துகிற பெண்களிடம் எடுக்கப்பட்ட ஆய்வில் கண்டுபிடித்திருக்கிறார்கள். மேல்தட்டு பெண்களிடம் காணப்பட்ட இந்த லிப்ஸ்டிக் பழக்கம் இப்போது இந்தியாவில் எல்லா தரப்பிலும் பரவலாகிக் கொண்டிருக்கிறது. விழா நாட்கள், விசேஷங்களுக்குப் பயன்படுத்துவது என்று பெண்களிடம் ஆரம்பிக்கும் இந்த பழக்கம் சிலருக்கு தினசரி பழக்கமாகவும் ஆகிக்கொண்டிருக்கிறது.
அதனால், இப்போதே லிப்ஸ்டிக்கினால் உண்டாகும் ஆபத்து பற்றிய எச்சரிக்கையை பெண்களிடம் உருவாக்க வேண்டியது அவசியம்” என்கிறார். லிப்ஸ்டிக்கால் ஏற்படும் இந்தக் குழப்பம் பற்றியும், ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் பற்றியும் நாளமில்லாச் சுரப்பிகள் மருத்துவரான ராம்குமாரிடம் பேசினோம்.
”ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் அடிப்படையில் பெண்களுக்குப் பல நன்மைகளைத் தரக் கூடியது. பருவமடையச் செய்வது, மார்பகம் உருவாவது, அழகு, நளினம், கவர்ச்சி என பெண்கள் பெண் தன்மையுடன் இருப்பதற்குக் காரணமே ஈஸ்ட்ரோஜென்தான். பெண்களின் பாலியல் உறவின் விருப்பத்தைத் தூண்டுவதும் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன்தான். அழகு சிகிச்சை செய்யும் மருத்துவர்கள் மார்பகங்களை பெரிதாக்க ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன்களை ஊசிகளாகவும், மாத்திரைகளாகவும் பயன்படுத்துவது உண்டு. ஆனால், அது மருத்துவ ஆலோசனையுடன் அளவறிந்து கொடுக்கப்படுவதால் பிரச்னைகள் வராது.
அதுவே, விவரம் அறியாமல் ஈஸ்ட்ரோஜெனை பயன்படுத்தும்போதோ அல்லது லிப்ஸ்டிக் போன்ற காஸ்மெட்டிக் பொருட்கள் மூலம் மறைமுகமாகத் தூண்டப்படும்போதோ மார்பகப் புற்றுநோய் பிரச்னை வருவதற்கான சாத்தியங்கள் நிறைய உண்டு. இதற்குக் காரணம் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனை கிரகித்துக் கொள்ளும் ஆற்றல் மார்பகங்களின் செல்களுக்கும், கருப்பை செல்களுக்கும் அதிகமாக உண்டு என்பதுதான். அதனால்தான் ஈஸ்ட்ரோஜென் அதிகளவில் பெண்களின் உடலில் சுரக்கும்போது மார்பகப் புற்று நோயும், கருப்பைப் புற்றுநோயும் எளிதாக உருவாகி விடுகிறது.
மன அழுத்தம், வாழ்வியல் முறை, உணவுப் பழக்கங்கள் என்று ஏற்கெனவே மார்பகப் புற்றுநோய்க்கான அபாயம் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் நீரிழிவுப் பிரச்னையும் மார்பகப் புற்றுநோயை மறைமுகமாகத் தூண்டக்கூடியதாக இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே, பெண்கள் கவனமாக, இன்னும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்” என்கிறார் ராம்குமார்.
”மார்பகப் புற்றுநோய் பற்றி முன்பு பேசவே பெண்கள் தயங்குவார்கள். ஆனால், இப்போது வெளிப்படையாகப் பேசுகிறார்கள் என்பது வரவேற்க வேண்டிய விஷயம். ஆனால், என்னதான் விழிப்புணர்வு ஏற்பட்டிருந்தாலும் உரிய நேரத்தில் பரிசோதனை செய்துகொள்கிறவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது. ஆரம்ப கட்டத்திலேயே வந்து சிகிச்சை எடுத்துக் கொள்கிறவர்களின் எண்ணிக்கையும் மிகவும் குறைவுதான்.
முன்பைவிட மார்பகப் புற்றுநோய் விகிதம் அதிகமாகிக் கொண்டிருக்கும் நிலையில் பெண்களின் இந்த அலட்சியம் கவலைக்குரியதாக இருக்கிறது. அதிலும் வாழ்வியல் முறை, தவறான உணவுப்பழக்கம், உடல் பருமன் போன்ற காரணங்களால் இன்று மார்பகப் புற்றுநோய் ஏற்படுவது அதிகரித்திருக்கிறது. லிப்ஸ்டிக்கால் மார்பகப் புற்றுநோய் ஏற்படுகிறது என்பது பற்றி உறுதியாகத் தெரியவில்லை. ஆனால், ரசாயனம் எப்படியிருந்தாலும் ஆபத்துதான் என்பதன் அடிப்படையில் பெண்கள் எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும்” என்கிறார் புற்றுநோய் சிறப்பு மருத்துவரான ராமநாதன்.
லெட் கலந்த லிப்ஸ்டிக்கை கண்டுபிடிக்க…
லிப்ஸ்டிக் விற்பனையில் பிரபலமாக இருக்கும் 12 முன்னணி பிராண்டுகளிலேயே லெட் கலப்படம் இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. தரமானவை என்று மக்களால் நம்பப்படுகிற முன்னணி பிராண்டுகளிலேயே பிரச்னை என்றால், எந்த தர நிர்ணயமும் இல்லாமல் சந்தையில் விற்பனையாகிவரும் லோக்கல் பிராண்டுகள் எப்படி இருக்கும் என்பதை யோசித்துக் கொள்ளலாம். இந்தியா உட்பட அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, சிங்கப்பூர், மலேசியா, ஹாங்காங் போன்ற நாடுகளிலும் இதுதான் நிலைமை.
லிப்ஸ்டிக்கில் கலந்திருக்கும் லெட்டை எளிமையாகக் கண்டுபிடிக்க இரண்டு எளிய ஆலோசனைகளை நிபுணர்கள் சொல்கிறார்கள். அதிக நேரம் நிறம் தாங்கக் கூடிய லிப்ஸ்டிக் என்றால் அது அபாயமானது. ஏனெனில், லெட் மற்றும் பிக்மெண்ட் அதிக அளவில் கலக்கப்பட்டிருந்தால் மட்டும்தான் நிறம் அதிக நேரம் தாங்கும்.
அதேபோல், லெட்டை கண்டுபிடிக்க இன்னொரு சின்ன உத்தியும் இருக்கிறது. கையில் சின்னதாக லிப்ஸ்டிக்கை தடவிக் கொள்ளுங்கள். அந்த லிப்ஸ்டிக்கின் மீது மோதிரம், செயின் என்று தங்கத்தை லேசாக உரசிப் பாருங்கள். உடனடியாக கையில் தடவப்பட்டிருந்த லிப்ஸ்டிக்கின் நிறம் கருப்பாக மாறினால் லெட் அதிகளவில் கலக்கப்பட்டிருக்கிறது என்று அர்த்தம்.
– ஞானதேசிகன்