க ருத்தடைக்கு மாத்திரைகள், அறுவை சிகிச்சைகள் மற்றும் சாதனங்கள் என பல்வேறு கருத்தடை முறைகள் இருந்தாலும் கருத்தடைக்கு புதிதாக ஹார்மோன் அணிகலன்களைக் கண்டுபிடித்து வெற்றி பெற்றிருக்கிறார்கள் விஞ்ஞானிகள். இந்தக் கருத்தடை ஆபரணம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஜார்ஜியாவில் உள்ள ஜார்ஜியா தொழில்நுட்ப நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கருத்தரிப்பதைத் தடைசெய்ய ஹார்மோனை கடிகாரம், காதணி, மோதிரம் போன்ற அணிகலன்கள் வழியே உடலுக்குள் செலுத்தும் முறையைக் கண்டுபிடித்து அசத்தியிருக்கிறார்கள். கடிகாரத்தின் பின்புறம், மோதிரத்தின் உட்புறம், காதணியின் பின்புறம் என அணிகலன்கள் உடலோடு ஒட்டியிருக்கும் இடத்தில் ஹார்மோன் பட்டையை (Patches) ஒட்டிவைத்துவிடுவார்கள்.
இதுதொடர்பாக, ‘ஜர்னல் ஆப் கன்ட்ரோல்டு ரிலீஸ்’ (Journal of controlled release) பத்திரிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையில், “தொடக்க நிலையில் செய்யப்பட்ட பரிசோதனைகளில் கருத்தடை ஆபரணத்திலிருந்து ஹார்மோன்கள் உடலுக்குள் சென்று கருத்தடை செய்வதை உறுதி செய்திருக்கிறோம். ஆனால், இதுவரை இந்த ஆராய்ச்சி மனிதர்களுக்குச் செய்யப்படவில்லை” என்று கூறப்பட்டுள்ளது.
இந்த ஆராய்ச்சியை மேற்கொண்ட பேராசிரியர்கள், “பல்வேறு கருத்தடை வழிமுறைகள் தற்போது வழக்கத்தில் இருக்கின்றன. ஆனால், எத்தகைய வழிமுறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதைச் சம்பந்தப்பட்டவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். பெண்கள் வழக்கமாகவே தினமும் ஆபரணங்களை அணியும் பழக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள். கருத்தடைக்கான எளிய வழிமுறையாக இது இருக்கும். இதன்மூலம் திட்டமிடப்படாத கர்ப்பத்தைத் தடுக்க முடியும்” என்று கூறியிருக்கிறார்கள்.
ஆராய்ச்சியாளர்கள் இந்தக் கருத்தடை ஆபரணத்தை முதலில் பன்றியின் காதில் மாட்டி ஆய்வு செய்து வெற்றி பெற்றிருக்கிறார்கள். விலங்குகளின் உடலில் 16 மணிநேரம் இந்தக் கருத்தடை ஆபரணத்தை அணிவித்து சோதனை மேற்கொண்டனர். விரைவில் மனிதர்களிடமும் சோதனை செய்யப்படும். இந்த முயற்சி வெற்றிபெறும் பட்சத்தில் வலி மிகுந்த கருத்தடை அறுவை சிகிச்சை, மாத்திரைகள் மற்றும் கருத்தடை உபகரணங்களைப் பயன்படுத்தவேண்டிய அவசியம் இருக்காது. ஆக, இனிவரும் காலங்களில் கருத்தடை முறைகள் எளிமையாக்கப்படும்.
Source :vikatran