உங்களால் இரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியவில்லையா? இதனால் மறுநாள் காலையில் உடல் மிகவும் வலியுடனும், களைப்பாகவும் உள்ளதா? அப்படியெனில் இந்த கட்டுரை அதற்கான காரணம் என்னவென்று சொல்லும்.
பொதுவாக தூக்கமின்மை அளவுக்கு அதிகமான மன அழுத்தத்தில் இருந்தால் ஏற்படும். அதுமட்டுமின்றி, ஒருசில மருந்துகள், இரவில் காரசாரமான உணவுகளை வயிறு நிறைய உட்கொள்தல், போன்றவற்றாலும் இரவில் தூங்க முடியாமல் தவிப்போம்.
சிலருக்கு தூக்கமின்மையானது தற்காலிகமாகவோ அல்லது நாள்பட்டதாகவோ இருக்கும். உதாரணமாக, சொந்த வாழ்க்கையில் பிரச்சனை இருந்தால், தூக்கமின்மையானது தற்காலிகமாக இருக்கும். ஆனால் எப்போது ஆஸ்துமா, மன அழுத்தம் போன்றவற்றால் பாதிக்கப்படுகிறோதோ, அப்போது அது நீண்ட நாட்கள் இருக்கும்.
சரி, இப்போது தூக்கமின்மை எதனால் ஏற்படுகிறது என்று பார்ப்போம்.
உடல் தொந்தரவுகள்
உடலில் ஏதேனும் தொந்தரவுகள் இருந்தால், அதனால் தூக்கமின்மை ஏற்படக்கூடும். உதாரணமாக, அல்சர் மூலம் ஏற்படும் வலி, மலச்சிக்கலால் ஏற்படும் அசௌகரியங்கள் போன்றவை.
மருத்துவ பிரச்சனைகள்
மருத்துவ பிரச்சனைகளான ஆஸ்துமா போன்றவை இருந்தால், சரியான நேரத்தில் தூங்க முடியாது.
மனநல கோளாறுகள்
மனநல கோளாறுகளான மன இறுக்கம் மற்றும் மனக் கவலை போன்றவற்றால் பாதிக்கப்பட்டால், அதுவும் தூக்கத்தைக் கெடுக்கும்.
சுற்றுச்சூழல் பிரச்சனைகள்
தூங்கும் சூழல் மிகவும் வெளிச்சமாகவோ அல்லது அதிக சப்தத்துடனோ இருந்தால், சரியாக தூங்க முடியாது.
ஆல்கஹால்
ஆல்கஹால் குடித்தால், ஒன்று அளவுக்கு அதிகமாக தூக்கம் வரும் அல்லது தூக்கமே வராது. இப்படி இருந்தால், நிம்மதியான தூக்கத்தைப் பெற்ற உணர்வே இருக்காது.
ஷிப்ட் வேலைகள்
அடிக்கடி நைட் ஷிப்ட் வேலை செய்பவர்கள் தூக்கமின்மையால் அவஸ்தைப்படுவார்கள். ஏனெனில் இரவு முழுவதும் விழித்திருந்துவிட்டு, திடீரென்று இரவில் தூங்க நினைத்தாலும், அவர்களால் தூங்க முடியாது. ஏனெனில் அவர்களின் உடல் கடிகாரத்தால் திடீரென்று மாற முடியாது.
மருந்துகள்
இரத்த அழுத்தம், மன தளர்ச்சி போன்றவற்றிற்கு மருந்துகள் எடுத்து வந்தால், அதன் காரணமாகவும் இரவில் சரியாக தூக்கம் வராது.