கோவம், உங்கள் உடலையும், மனதையும் மட்டுமல்ல நல்ல உறவுகளையும் கூட கொல்லும். கோவம் காரணமாக ஏற்படும் இரத்தக் கொதிப்பும், மன அழுத்தம் தான் உங்கள் உடலில் பல உடல்நலக் கோளாறுகள் ஏற்பட காரணமாக திகழ்கிறது.
எவ்வளவு முயற்சி செய்தாலும் கோவத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்று புலம்பும் ஆண்கள் கூட்டம் மிகப் பெரியது. தியானம் செய்தால் கோவம் குறையும் என்று கூறுவார்கள். "அவ்வளவு பொறுமை இருந்தா நான் எதுக்குங்க கோவப்பட போறேன்" என்றும் சிலர் புலம்புவது உண்டு.
சரி, அப்போ கோவத்தை குறைக்க என்னதான் செய்வது? மிக மிக எளிதாய் உங்கள் கோவத்தை குறைக்க முடியும். எப்படி என்று கேட்கிறீர்களா? தொடர்ந்துப் படியுங்கள்….
நன்கு மூச்சு விடுங்கள்….
கோவம் அதிகரிக்கும் போது, உங்கள் மூச்சை நன்கு இழுத்து விடும் போது கோவம் குறையும். நன்கு மூச்சை இழுத்து விடும் போது உங்கள் உடல் மற்றும் மனது இலகுவாகும், இது தான் கோவம் குறைவதற்கான காரணம்.
நன்றியை நினைவுக் கொள்ளுங்கள்
கண்டிப்பாக நமக்கு யார் மீதாவது கோவம் ஏற்படும் போது, அவர்கள் நமக்கு செய்த நன்றியை நினைவுக் கொள்ளுங்கள். நிச்சயம் கோவம் குறையும். நீங்கள் நன்றியை மறக்காதவராக இருந்தால்.
அழுவது….
அழுகையைக் கட்டுப்படுத்துவது உங்கள் கோவத்தை அதிகரிக்கும். எனவே, வாய் விட்டு சிரிப்பதை போல, அழுவதும் அவசியம். உங்களுக்கு தெரியுமா? கண்களில் கண்ணீர் வருவது உடல்நலத்திற்கு நல்லது. உங்கள் கண்களில் கண்ணீர் சுரக்கவில்லை என்றால் மருத்துவரை மறவாமல் அணுகுங்கள்.
புத்தகங்கள் படியுங்கள்
கோவம் அதிகரிக்கும் போது, புத்தகங்கள் படிப்பதை வழக்கமாகக் கொள்ளுங்கள். இது உங்கள் கவனத்தை திசைத்திருப்ப உதவும். மற்றும் உங்கள் கற்பனையை வேறு திசையில் பயணிக்க உதவும். கோவம் அதிகரிப்பதற்கு காரணமே வீண் கற்பனை தான்.
எழுதுங்கள்
ஒரு காலத்தில் கடிதம் எழுதும் பழக்கம் இருந்தது. இப்போது எங்கே எழுதுவது, எல்லாம் தட்டச்சு பலகையுடன் டொக்கு… டொக்கு… தான். உண்மையிலேயே, நீங்கள் உங்கள் சந்தோசத்தை எழுதும் போது அது அதிகம் ஆகும். துக்கத்தை எழுதும் போது அது குறைவாகும். அதுப் போல தான், நீங்கள் உங்கள் கோவத்தின் காரணத்தை எழுதும் போது, கோவம் குறையும்.
பிடித்த நவருடன் பேசுங்கள்
உங்களை யாருக்கு ரொம்ப பிடிக்குமோ அவரிடம் பேசுங்கள். கண்டிப்பாக அவர்கள் உங்கள் நலன் குறித்து ஆலோசிப்பவராக இருக்க வேண்டும். அப்படி இருப்பவர் ஒருபோதும் நீங்கள் கோவமடைவதை விரும்பமாட்டார். கண்டிப்பாக அவரது ஆறுதலும், வார்த்தைகளும் உங்களது கோவத்தை குறைக்கும்.
பொறுமையாக நடந்து வாருங்கள்
கோவம் அதிகரிக்கும் போது பொறுமையாக சாலையில் நடந்து வாருங்கள். கண்டிப்பாக உங்கள் கோவம் குறையும். தயவு செய்து தலையை நிமிர்த்தி சாலையை பார்த்தவாறு நடந்து வாருங்கள். பல்வேறுப்பட்ட மக்களின் சூழல், மற்றும் இயற்கை காற்று உங்களை மனநிலையை மாற்றும்.