பூஞ்சைத் தொற்றுக்களால் ஏற்படக்கூடிய ஒரு வகையான சரும பிரச்சனை தான் படர்தாமரை. இது மற்றவர்களுக்கு எளிதில் பரவக்கூடிய ஒரு தொற்றுநோயாகும். இதை ஆரம்பத்திலேயே சரிசெய்துவிட்டால் பிரச்சனை இல்லை. இந்த படர்தாமரை ஒருவருக்கு உடலின் எந்த பகுதியில் வேண்டுமானாலும் வரலாம். சருமத்தில் படர்தாமரை உடலில் நேரடியாகவோ மற்றும் மறைமுகமாகவோ ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும். ஒருவருக்கு படர்தாமரை ஏற்பட்டுள்ளது என்பது, பூஞ்சைத் தாக்கத்தின் நான்கு முதல் பத்து நாட்களுக்கு பின்பு தான் தெரியும்.
படர்தாமரையானது சிறியதாக, வட்ட அல்லது வளைய வடிவத்தில் காணப்படும். அதோடு அது சிவந்தும், மிகுதியான அரிப்புகளையும் உண்டாக்கும். இதை ஆரம்பத்திலேயே சரிசெய்ய முயற்சிக்காவிட்டால், சருமத்தில் வெடிப்புக்கள் ஏற்பட்டுவிடும்.
படர்தாமரை பிரச்சனையால் பெரியவர்களை விட குழந்தைகள் தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள். அளவுக்கு அதிகமாக வியர்ப்பது, இறுக்கமான உடைகளை அணிவது, பலவீனமான நோயெதிர்ப்பு மண்டலம், மற்றவர்களுடன் உடைகள், படுக்கை அல்லது துடைக்கும் துண்டைப் பகிர்ந்து கொள்வது போன்றவை படர்தாமரையின் அபாயத்திற்கான இதர அறிகுறிகளாகும்.
படர்தாமரையை சரியான சுகாதாரத்தின் மூலம் மற்றும் ஒருசில இயற்கை வழிகளின் மூலம் எளிதில் சரிசெய்துவிடலாம். இக்கட்டுரையில் படர்தாமரை பிரச்சனையில் இருந்து உடனடியாக விடுவிக்கும் சில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
நல்ல சுகாதாரம்
படர்தாமரையை சரிசெய்ய வேண்டுமானால், முதலில் சுகாதாரத்துடன் இருக்க வேண்டியது அவசியம். இது உடலின் மற்ற பகுதிகளுக்கு பரவுவதைத் தடுக்க உதவும். அதோடு விரைவில் குணமாகவும் உதவியாக இருக்கும். ஒருவர் தங்களை மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்வதன் மூலம், படர்தாமரை பரவுவதைத் தடுக்கலாம் என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. ஆகவே படர்தாமரை உள்ள இடத்தை தினமும் மைல்டு சோப்பு பயன்படுத்தி கழுவுங்கள். அதேப் போல் குளித்து முடித்த பின், அப்பகுதியை துணியால் நன்கு துடையுங்கள்.
ஆப்பிள் சீடர் வினிகர்
ஆப்பிள் சீடர் வினிகர் படர்தாமரையை சரிசெய்யும். ஆராய்ச்சியில் ஆப்பிள் சீடர் வினிகரில் உள்ள வலிமையான பூஞ்சை எதிர்ப்பு பண்புகள், படர்தாமரையை உணடாக்கும் தொற்றுக்களை எதிர்க்க உதவுவதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும் ஆப்பிள் சீடர் வினிகர் ஒருவரது நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு நல்லது. * ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் நீரை சரிசம அளவில் எடுத்து ஒன்றாக கலந்து, பஞ்சுருண்டைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்ட இடத்தில் தடவுங்கள். இப்படி ஒரு நாளைக்கு 3 முறை செய்து வர, நல்ல பலன் கிடைக்கும். * அதேப் போல் 1-2 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீருடன் சேர்த்து கலந்து, சுவைக்கு சிறிது தேன் சேர்த்து குடியுங்கள். இப்படி ஒரு நாளைக்கு 2 முறை குடித்து வர, விரைவில் படர்தாமரை சரியாகும்.
டீ-ட்ரீ ஆயில்
டீ-ட்ரீ ஆயிலில் பூஞ்சை எதிர்ப்பு மற்றும் ஆன்டி-செப்டிக் பண்புகள் உள்ளன. இது படர்தாமரையை விரைவில் மறையச் செய்யும்.
* சில துளிகள் டீ-ட்ரீ ஆயிலை பஞ்சுருண்டையில் ஊற்றி, படர்தாமரை உள்ள பகுதியைத் துடையுங்கள். இப்படி ஒரு நாளைக்கு 2-3 முறை என ஒரு வாரம் தொடர்ந்து செய்து வந்தால், ஒரே வாரத்தில் படர்தாமரை சரியாகும்.
* இல்லாவிட்டால், டீ-ட்ரீ ஆயிலை தேங்காய் எண்ணெயுடன் சரிசம அளவில் எடுத்து, படர்தாமரை உள்ள இடத்தில் தடவுஙகள். இப்படி தினமும் ஒருமுறை தடவி வருவதன் மூலம், படர்தாமரை குணமாகும்.
தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெயில் காயங்களை சரிசெய்யும் பண்புகள் உள்ளன. இவை படர்தாமரை தொற்றுக்களை சரிசெய்ய உதவியாக இருக்கும். மேலும் இதில் உள்ள பூஞ்சை எதிர்ப்பு பண்புகள், படர்தாமரைக்கு காரணமான பூஞ்சைத் தொற்றுக்களை எதிர்த்துப் போராடி சரிசெய்யும். முக்கியமாக தேங்காய் எண்ணெய் அரிப்புக்களைக் குறைக்கும்.
* தேங்காய் எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, அந்த எண்ணெயை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்யுங்கள். இப்படி ஒரு நாளைக்கு குறைந்தது 3 முறை பயன்படுத்துங்கள்.
* 1 டேபிள் ஸ்பூன் வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெயை ஒரு பௌலில் எடுத்து, அதில் 1/2 கற்பூரத்தைப் போட்டு கரைய வையுங்கள். பின் இந்த கலவையை பாதிக்கப்பட்ட இடத்தில் தினமும் 2-3 முறை தடவி வாருங்கள். இதனால் தொற்றுக்களில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
* தேங்காய் எண்ணெய் மற்றும் கற்பூரவள்ளி எண்ணெயை 5:1 என்ற விகிதத்தில் எடுத்து ஒன்றாக கலந்து கொள்ளுங்கள். பின் அந்த எண்ணெய் கலவையை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி 10 நிமடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரால் கழுவி, அப்பகுதியை காய வையுங்கள். இப்படி ஒரு நாளைக்கு 2 முறை என குறைந்தது 4 வாரம் மேற்கொள்ள வேண்டும்.
பூண்டு
பூண்டும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இந்த பூண்டு பூஞ்சை தொற்றுக்களால் ஏற்படும் படர்தாமரையில் இருந்து விடுவிக்கும்.
* பூண்டு பேஸ்ட்டை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ வேண்டும். பின் அந்த பகுதியை ஒரு துணியால் கட்டி பல மணிநேரங்கள் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இப்படி தினமும் 1-2 முறை என பல வாரங்கள் பயன்படுத்தி வாருங்கள்.
* தினமும் 1-2 பல் பூண்டை சாப்பிடுங்கள். இதனால் சருமத்தைத் தாக்கிய பூஞ்சை உயிர் வாழ்வது மற்றும் பரவுவது கடினமாக இருக்கும்.
வேப்பிலை
வேப்பிலையில் ஆன்டி-செப்டிக் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் ஏராளமாக உள்ளது. இது படர்தாமரைக்கு நல்ல சிகிச்சை அளிக்கும்.
* வேப்பிலை எண்ணெமயை தினமும் 2-3 முறை படர்தாமரை உள்ள இடத்தில் தடவி வாருங்கள்.
* வேப்பிலையை அரைத்து பேஸ்ட் செய்து, அத்துடன் மஞ்சள் தூள் மற்றும் நல்லெண்ணெய் சேர்த்து கலந்து, படர்தாமரை உள்ள இடத்தில் தடவி 1 மணிநேரம் ஊற வையுங்கள். பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இப்படி தினமும் 2 முறை செய்ய, விரைவில் படர்தாமரை மறையும்.
மஞ்சள்
மஞ்சள் படர்தாமரைக்கு ஒரு நல்ல நிவாரணி. இதில் உள்ள பூஞ்சை எதிர்ப்பு பண்புகள், படர்தாமரைக்கு காரணமான பூஞ்சைகளின் வளர்ச்சியைத் தடுத்து அழிக்கும்.
* மஞ்சள் வேரை அரைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அந்த சாற்றினை படர்தாமரையின் மீது தினமும் 2-3 முறை தடவி வாருங்கள்.
* இல்லாவிட்டால், 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூளை ஆலிவ் ஆயில் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதை படர்தாமரையின் மீது தடவி, பேண்டேஜ்ஜால் அந்த பகுதியைச் சுற்றி, 1-2 மணிநேரம் கழித்துக் கழுவ வேண்டும்.
அதிமதுரம்
* ஒரு கப் நீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதில் 5-6 டீஸ்பூன் அதிமதுரப் பொடி சேர்த்து நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், 20 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி குளிர வைக்க வேண்டும்.
* பின் அந்த கலவையை பஞ்சுருண்டைப் பயன்படுத்தி, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி குறைந்தது 10 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
* இப்படி ஒரு நாளைக்கு 2-3 முறை தடவி வர, விரைவில் படர்தாமரை சரியாகும்.
அயோடின்
2 சதவீதம் அயோடின் டின்சரைப் பயன்படுத்தி எளிதில் படர்தாமரையை சரிசெய்ய முடியும். அதற்கு 2 சதவீத அயோடின் திரவத்தை பஞ்சுருண்டைப் பயன்படுத்தி தடவ வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 2-3 முறை என சில வாரங்கள் தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.