நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக சமையல் மற்றும் மருத்துவ உலகில் ஆப்பிள் சீடர் வினிகர் மிகவும் பிரபலமானதாக உள்ளது. ஆப்பிள் சீடர் வினிகரில் நீர், வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் மற்ற அமிலங்களின் தடயங்கள் உள்ளன. முந்தைய காலத்தில் ஆப்பிள் சீடர் வினிகர் கிடைப்பது கடினமாக இருந்தது. ஆனால் தற்போது இது அனைத்து சூப்பர் மார்கெட்டிலும் எளிதில் கிடைக்கிறது. பலரும் இந்த ஆப்பிள் சீடர் வினிகரை கண்டிருப்பார்கள். ஆனால் அதன் பயன்பாடு மற்றும் நன்மைகள் தெரியாததால், அதை வாங்குவதில்லை.
இனிமேல் நீங்கள் சூப்பர் மார்கெட் சென்றால், ஆப்பிள் சீடர் வினிகரை தவறாமல் வாங்குங்கள். ஏனெனில், இதில் நாம் நினைத்திராத அளவில் உடலில் பல மாயங்களைப் புரியும் திறன் உள்ளது. அதிலும் இதனை ஒருவர் தினமும் இரவு தூங்கும் முன் உட்கொண்டால், உடலில் உள்ள பல பிரச்சனைகள் நீங்கும். இப்போது இரவு தூங்கும் முன் ஆப்பிள் சீடர் வினிகரை குடிப்பதால் பெறும் நன்மைகளைக் காண்போம்.
இரத்த சர்க்கரை அளவு குறையும்
மருத்துவ ஆய்வின் படி, ஆப்பிள் சீடர் வினிகருக்கு வயிற்றைக் காலியாக்குவதைக் குறைக்கும் ஆற்றல் உள்ளது. எனவே இதை ஒருவர் இரவில் குடித்தால், இது இரத்த சர்க்கரை அளவு சட்டென்று உயர்வதைத் தடுக்கும். மேலும் ஆப்பிள் சீடர் வினிகரை உணவு உண்பதன் முன் குடித்தால், இன்சுலின் உணர்திறனை அதிகரித்து, இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும்.
எடை இழப்பிற்கு உதவும்
ஆப்பிள் சீடர் வினிகர் கொழுப்பு தேக்கத்தைக் குறைக்கும், பசியுணர்வைக் கட்டுப்படுத்தும், அதோடு செரிமானத்தையும் தாமதமாக்கும். மேலும் இது உடலில் உள்ள கொழுப்பை வேகமாக கரைத்து, பசிக்கான ஹார்மோன் வெளியீட்டை தாமதமாக்கும். 12 வாரங்களாக ஒருவர் இரவு தூங்கும் முன் 1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரைக் குடித்து வந்தால், அடிவயிற்றுக் கொழுப்பு குறைந்திருப்பதை நன்கு காணலாம்.
வாய் ஆரோக்கியம்
ஆப்பிள் சீடர் வினிகருக்கு வாய் துர்நாற்றத்திற்கு காரணமான வாயில் உள்ள பாக்டீரியாக்களைக் குறைக்கும் திறன் உள்ளது. இரவு தூங்கும் முன் 1 டம்ளர் நீரில் 1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து குடித்தால், வாயில் உள்ள பாக்டீரியாக்களின் அளவு குறைந்து, காலையில் வாய் துர்நாற்றம் வீசுவது குறையும்.
விக்கல் பிரச்சனை
ஆப்பிள் சீடர் வினிகர் விக்கலை உண்டாக்கும் தொண்டையில் உள்ள நரம்புகளைத் தூண்டிவிட்டு, நிமிடத்தில் விக்கல் பிரச்சனையை சரிசெய்யும். அதற்கு செய்ய வேண்டியதெல்லாம் 1 டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை குடிப்பது தான்.
சைனஸ் நிவாரணம்
உங்களுக்கு அடிக்கடி மூக்கடைப்பு ஏற்படுமானால், சிறிது ஆப்பிள் சீடர் வினிகரை குடியுங்கள். ஆப்பிள் சீடர் வினிகரில் வைட்டமின் பி, பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் போன்றவை உள்ளதால், இது சைனஸில் இருந்து நிவாரணம் அளித்து, தடையின்றி சுவாசிக்க செய்யும்.
வயிற்று வலி
தூங்கும் நேரத்தில் உங்கள் வயிற்றில் வலி அல்லது அசௌகரியத்தை உணர்ந்தால், ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் 1 டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து கலந்து குடியுங்கள். இதனால் எப்பேற்பட்ட வயிற்று பிரச்சனையும் நீங்கும்.
அஜீரண கோளாறு
ஆப்பிள் சீடர் வினிகருக்கு அஜீரண பிரச்சனையை சரிசெய்யும் திறன் உள்ளது. இரவு நேரத்தில் அஜீரண பிரச்சனையால் அவஸ்தைப்பட்டால், தூக்கமின்மை பிரச்சனையால் அவஸ்தைப்படக்கூடும். இதைத் தவிர்க்க வேண்டுமானால், இரவு தூங்கும் முன் ஒரு ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரில் 1 ஸ்பூன் தேன் மற்றும் வெதுவெதுப்பான நீர் கலந்து குடிக்க வேண்டும்.
கால் பிடிப்பு
பொட்டாசியம் குறைபாட்டால் ஏற்படுவது தான் கால் தசைப் பிடிப்புக்கள். இருப்பினும், தினமும் ஆப்பிள் சீடர் வினிகரைக் குடிப்பதன் மூலம், ஒருவர் எளிதில் இப்பிரச்சனை சரிசெய்யலாம். ஏனெனில் ஆப்பிள் சீடர் வினிகரில் பொட்டாசியம் அதிகம் உள்ளது.
தொண்டை கரகரப்பு
ஆப்பிள் சீடர் வினிகரில் சக்தி வாய்ந்த ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் உள்ளன. எனவே இதை ஒருவர் தினமும் குடிப்பதன் மூலம், தொண்டையில் உள்ள பாக்டீரியாக்கள் அவ்வப்போது அழிக்கப்படும். ஒருவேளை தொண்டைப்புண் இருந்தால், 1 டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை 30 நிமிட இடைவெளியில் குடியுங்கள். முக்கியமாக தூங்குவதற்கு 1 மணிநேரத்திற்கு முன்பு மற்றொரு 1 டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரைப் பருக நினைவில் கொள்ளுங்கள்.